புதுதில்லி:
ரபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில், அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ இணைக்கப்பட்டதற்கு, முழுக்க முழுக்க மத்திய பாஜக அரசுதான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.மோடி அரசு இதனை மறுத்தாலும், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்களை வலுப்படுத்தும் வகையிலான ஆதாரங்களே அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. அந்தவகையில் பிரான்ஸ் நாட்டின் போர்ட்டல் ஏவியேஷன் என்ற வலைப்பக்கமும், ரபேல் ஊழல் தொடர்பான புதிய ஆதாரத்தை வெளியிட்டுள்ளது. ரபேல் ஒப்பந்தம் தொடர்பான இரண்டு புதிய ஆவணங்களை போர்ட்டல் ஏவியேஷசன் வலைப்பக்கம் பதிவேற்றியுள்ளது.

ரூ. 59 ஆயிரம் கோடி மதிப்பிலான ரபேல் போர் விமானம் தொடர்பான ஒப்பந்தம், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளது; டஸ்ஸால்ட் நிறுவனத்தின் கூட்டு பங்குதாரராக, இந்துஸ்தான் ஏரோனாட்டிகல் லிமிடெட் நிறுவனம் (எச்ஏஎல்) தேர்ந்தெடுக்கப்பட இருந்த நிலையில், திடீரென அந்த நிறுவனம் விலக்கிக் கொள்ளப்பட்டு, ரிலையன்ஸ் டிபென்ஸ் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது; மத்திய பாஜக அரசின் நிர்ப்பந்தம் பேரிலேயே இது நடந்துள்ளது; இதில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் முறைகேடு நடந்துள்ளது என்பதுதான் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு ஆகும்.

ஆனால், டஸ்ஸால்ட் உடன் ரிலையன்ஸ் இணைக்கப்பட்டதில் தங்களின் தலையீடு இல்லை என்றே, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும், பாஜக தலைவர்களும் கூறி வந்தனர். தங்களின் ஊழலுக்கு ஆதாரம் இல்லை என்று அவர்கள் நினைத்ததே இதற்குக் காரணம்.பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பிரான்காய்ஸ் ஹாலண்டே, முதன்முறையாக, அந்த நினைப்பை உடைத்தார். டஸ்ஸால்ட்டின் கூட்டு நிறுவனமாக, ரிலையன்ஸ் டிபென்ஸ் அல்லாத வேறு வாய்ப்பு எதையும் இந்திய அரசு தங்களுக்கு வழங்கவில்லை என்று தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் பகிரங்கமாக்கினார்.

அதைத் தொடர்ந்து, பிரான்ஸ் நாட்டின் முன்னணி புலனாய்வு நிறுவனமான ‘மீடியாபார்ட்’ ஊடகமும், “ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டுமெனில் ரிலையன்ஸ் குழுமம் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும் என்று டஸ்ஸால்ட் நிறுவனத்தின் ஆவணங்களிலேயே குறிப்பிடப்பட்டு இருக்கிறது” என்று செய்தி வெளியிட்டு, பாஜக ஆட்சியாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
மேலும் ‘அனில் அம்பானிக்கு ரூ. 30 ஆயிரம் கோடி வழங்க வேண்டும்’ என்ற இந்தியப் பிரதமரின் முன்நிபந்தனை பேரில்தான் ரபேல் ஒப்பந்தமே கையெழுத்தானது என்று ‘டஸ்ஸால்ட்’ நிறுவனத்தின் மூத்த அதிகாரியான லோய்க் சிகாலன் கூறியதையும் ‘மீடியாபார்ட்’ வெளியிட்டது.

இந்தியாவை பகைத்துக் கொள்ள முடியாது என்பதால், ஹாலண்டே, லோய்க் சிகாலன் ஆகியோர் கூறியதையும், மீடியாபார்ட் செய்தியையும் ‘டஸ்ஸால்ட்’ நிறுவனம் மறுத்தது.
ஆனால், இவ்விஷயத்தில் மற்றொரு ஆதாரமும் தற்போது வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ‘போர்ட்டல் ஏவியேஷன்’ என்ற வலைப்பக்கம், டஸ்ஸால்ட் நிறுவனத்தின் ‘சிஎப்டிடி, சிஜிடி’ என்ற இரண்டு பிரெஞ்ச் தொழிற்சங்கங்கள் 2017 மே 11-ஆம் தேதி வெளியிட்ட இரண்டு ஆவணங்களை, தற்போது பதிவேற்றியுள்ளது. அந்த ஆவணத்தில், டஸ்ஸால்ட் நிறுவனத்தின் மூத்த அதிகாரி லோய்க் சிகாலன் பேசுகையில், “இந்தியாவுக்கான ரபேல் ஏற்றுமதி ஒப்பந்தத்தைப் பெற வேண்டுமென்றால், தனது பங்கு நிறுவனமாக ரிலையன்ஸை ஏற்றுக்கொள்வது டஸ்ஸால்ட் நிறுவனத்தின் கட்டாயம் மற்றும் கடமையாகிறது” என்று கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது, ரபேல் ஊழல் பற்றி, டஸ்ஸால்ட் நிறுவன அதிகாரி லோய்க் சிகாலன் திடீரென பேசவில்லை; 2017-ஆம் ஆண்டு மே மாதமே பேசியிருக்கிறார் என்பதுதான் இதில் அடங்கியுள்ள உண்மையாகும். இது ரபேல் ஊழலில் மோடி அரசின் தொடர்பை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: