திருப்பூர்,
ஓலா டாக்ஸி நிறுவனத்தை கண்டித்து திருப்பூரில் ஓலா டாக்ஸி ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு ஓலா டாக்ஸி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதனுடைய கிளை அலுவலகம் பல்வேறு மாவட்டங்களில் செயல்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவையில் செயல்படும் ஓலா நிறுவன அலுவலகத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்திற்கென்று சுமார் 65 வாகனங்கள் இயக்கி வருகின்றனர். இந்நிலையில் ஓலா நிறுவனத்தில் வாகனங்களை இணைக்கும் பொழுது வாடகையின் எண்ணிக்கையை பொருத்து கமிஷன் வழங்கப்படும் என்று ஒலா நிறுவனத்தார் உறுதியளித்துள்ளனர். ஆனால், தற்போது அதற்கு மாறாக புதிய கட்டண விகிதத்தை அறிமுகம் செய்துள்ளனர். இந்த புதிய கட்டண விகிதத்தினால் டாக்ஸி ஓட்டுநர்களின் வருமானம் பெருமளவு குறைந்துள்ளது. குறிப்பாக, இந்த புதிய கட்டணவிகிதத்தில் வரும் வருமானமானது வாகன பராமரிப்பு செலவிற்கு கூட போதுமானதாக இருப்பதில்லை. எனவே, அனைத்து வாகனங்களுக்கும் ஏற்றாற்போல் கட்டண விகிதத்தையே அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி திருப்பூரில் ஓலா டாக்ஸி ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போராட்டத்தில் பங்கேற்ற ஓலா டாக்ஸி ஓட்டுநர்கள் கூறுகையில்; ஓலா டாக்ஸி ஒப்பந்தத்தின் படி டீசல் விலை ரூ.47 இருக்கும் பொழுது கிலோ மீட்டர் ஒன்றுக்கு ரூ.8 தருகிறோம் என்று கூறினார்கள். ஆனால், தற்போது டீசல் ரூ.80க்கும் மேல் விற்கும் நிலையிலும் கிலோ மீட்டருக்கு ரூ.8 தான் தருகிறார்கள். இந்த தொகையை உயர்த்தி வழங்க பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் ஓலா டாக்ஸி நிறுவனத்தின் சார்பில் 5 ஆயிரம் புதிய கார்களை சொந்தமாக வாங்கி வாடகைக்கு விட உள்ளதாக தகவல் வருகிறது. இதனால் எங்களின் வாழ்வாதாரமே சிதைந்துவிடும். இதை நம்பிதான் பல ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. எங்களை இப்படி செய்வது நியாயமில்லை. இதனால் எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக ஒரு முடிவு வரும் வரை எங்களது போராட்டதை தொடருவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: