தாராபுரம்,
தாராபுரம் நகராட்சி பகுதியில் டெங்கு ஒழிப்பு பணியை நகராட்சிகளின் மண்டல இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார்.

தாராபுரம் நகராட்சி பகுதியில் 30 வார்டுகளிலும் டெங்கு ஒழிப்பு பணி களப்பணியாளர்களை கொண்டு தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது மழை பெய்து பரவலாக காய்ச்சல் பரவி வரும் நிலையில், களப்பணி மற்றும் டெங்கு தடுப்பு பணி எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்து நகராட்சிகளின் மண்டல இயக்குநர் (ஆர்டிஎம்ஏ) சுல்தானா ஆய்வு மேற்கொண்டார். கண்ணன்நகர், காந்திபுரம், சத்யா நகர் மற்றும் பார்க்ரோடு பகுதிகளில் வீடு, வீடாக சென்று தண்ணீர் தேங்கியுள்ளதா, தொட்டிகளுக்கு முறையாக மருந்து தெளிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், தொட்டங்குச்சி, ஆட்டுக்கல், டயர் ஆகியவற்றில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தி தடுப்பு மேற்கொள்ளப்படுகிறதா என்பதை கள ஆய்வு செய்தார். இதேபோல், சந்தைபேட்டையில் உள்ள உரக்கிடங்கில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பைகள் சேகரிப்பு முறையாக செயல்பாட்டில் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது தாராபுரம் நகராட்சி ஆணையர் லட்சுமணன் மற்றும் சுகாதாரபிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: