கோவை,
இருகூரில் சுரங்க நடைபாதையை திறக்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

கோவை மாவட்டம், இருகூர் பேரூராட்சி பகுதியில் செயல்படும் அரசு உயர்நிலை பள்ளிக்கு அருகிலுள்ள ரயில் தண்டவாளங்களை கடந்துதான் மாணவர்கள் செல்ல முடியும் என்ற நிலை இருந்து வருகிறது. இது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருவதால் பள்ளியிலிருந்து இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து மாணவர் மற்றும் வாலிபர் சங்கத்தினரின் தொடர் போராட்டங்கள் காரணமாக தண்டவாளத்தை கடக்காமல் செல்வதற்காக ரூ.2 கோடி செலவில் அப்பகுதியில் சுரங்க நடைபாதை அமைக்கப்பட்டது. ஆனால், இந்த சுரங்க நடைபாதை கட்டப்பட்டு மூன்றாண்டுகள் கடந்தபிறகும் இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை.

இந்நிலையில், சுரங்க நடைபாதையை உடனடியாக திறக்க வேண்டும் எனக்கோரி செவ்வாயன்று இருகூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் பள்ளி வாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து காவல்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இரண்டு மாத காலத்திற்குள் மீதமுள்ள பணிகளை முடித்து சுரங்க நடைபாதை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

பொய் வழக்குப்பதிவு:
இந்நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அமைதியான வழியில் போராட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீது மூன்று பிரிவுகளில் காவல்துறையினர் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். இருகூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணசாமியின் புகாரின் பேரில்,இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதில் மாணவர் சங்க மாநில செயலாளர் வி.மாரியப்பன், மாவட்ட தலைவர் தினேஷ், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ரவீந்திரன் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

புகாரே கொடுக்கவில்லை- பள்ளி தலைமை ஆசிரியர்
இதற்கிடையே, மாணவர்கள் போராட்டம் தொடர்பாக எவ்வித புகாரும் அளிக்கவில்லை என தலைமையாசிரியர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவிக்கையில், நான் இந்த போராட்டம் குறித்து எவ்வித புகாரும் காவல் துறையினரிடம் அளிக்கவில்லை. நான் மட்டுமல்ல பள்ளியின் சார்பிலோ, ஆசிரியர்கள் சார்பிலோ, பெற்றோர் ஆசிரியர் கழகம் என யார் சார்பிலும் புகார் கொடுக்கவில்லை. காவல்துறையினர் நாங்கள் புகார் கொடுத்ததாக ஏன் சொல்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் தகவல் தெரிவித்து விட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து காவல்துறை துணை ஆணையரிடம் கேட்கையில், தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரிலேதான் வழக்கு பதிவு செய்தோம். இப்போது ஏதோ காரணத்திற்காக மறுக்கிறார் என தெரிவித்தார். அதேசமயம், காவல் இளம் ஆய்வாளர்ஒருவர் காலையில் இருந்து இருகூர் பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையில் அமர்ந்து கொண்டு புகாரில் கையெழுத்து போட்டுத்தான் ஆக வேண்டும் என நிர்பந்தம் செய்யவதாகவும், இதனை தவிர்ப்பதற்கே எங்கள் தலைமை ஆசிரியர் சிஇஓவிடம் இதுகுறித்து தெரிவிக்க சென்றார் என பள்ளியில் உள்ளவர்கள் தெரிவித்தனர். இவ்வாறு வாங்காத புகாருக்கு வழக்கு பதிவு செய்த சிங்காநல்லூர் காவல்துறையினர் தற்போது அதனை நிரூபிக்க பல்வேறு மிரட்டல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

சிபிஎம், எஸ்எப்ஐ கண்டனம்

இதற்கிடையே, காவல்துறையினரின் பொய் வழக்கு நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி கூறுகையில், ரயில்வே தண்டவாளத்தை அச்சத்துடன் கடந்துதான் தினமும் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு செல்வ வேண்டும் என்ற அவல நிலையில், ரூ.2 கோடி செலவில் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட சுரங்க நடைபாதை மூன்றாண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளதை திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பது எந்த வகையில் தவறாகும்.

மாறாக, மாணவர் நலனில் அக்கறையோடு போராடுகிற மாணவர் சங்கத்தினர் மீது காவல்துறை பொய் வழக்கு பதிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஆகவே, இந்த வழக்கை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். மேலும், அரசு அளித்த வாக்குறுதிப்படி இரண்டு மாத காலத்திற்குள் இந்த சுரங்க நடைபாதையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதேபோல், அடிப்படை உரிமைக்காக போராடும் மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்வது ஜனநாயகம் அற்ற செயலாகும் என இந்திய மாணவர் சங்கத்தின் கோவை மாவட்டக்குழுவும் கால்துறையின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.