சென்னை: குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவினை தள்ளுபடி செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய குட்கா ஊழல் தொடர்பாக குட்கா ஆலையின் உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ், மத்திய கலால் துறை அதிகாரி என்.கே.பாண்டியன், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில்முருகன், திருவள்ளூர் மாவட்ட சுகாதார ஆய்வாளர் சிவகுமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்றம் 6 பேரையும் முதலில் அக்டோபர் 4ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டிருந்தது.

பின்னர் இந்த நீதிமன்றக் காவலானது வரும் 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவினை தள்ளுபடி செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குட்கா ஆலையின் உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா மற்றும் சீனிவாசராவ் ஆகிய மூவரும் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவானது சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. இவர்களை ஜாமீனில் விடுவித்தால் அனைத்து சாட்சிகளையும் கலைக்கும் பணியில் ஈடுபடுவார்கள் என்று அரசுத் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, இவர்கள் மூவரின் ஜாமீன் மனுவினை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.