விருதுநகர்:
சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இரு பெண் விவசாயிகள் இடி
தாக்கியதில் உயிரிழந்தனர். தமிழகத்தின் தென்பகுதியில் இரு தினங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதையடுத்து, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் செவ்வாயன்று மதியம் இடியுடன் கூடிய பலத்த காற்று வீசியது. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் மழையும் பெய்தது.

இந்தநிலையில், வதுவார்பட்டி பகுதியில் உள்ள பருத்தி தோட்டத்தில் களை எடுப்பதற்காக பெண்கள் சென்றுள்ளனர். அதே போல் ஆத்திபட்டி என்ற ஊரிலும் பெண்கள் களை எடுக்க சென்றிருந்தனர். அப்போது பலத்த சப்தத்துடன் கூடிய இடி, மின்னல் விழுந்தது. இதில் ஆறுமுகம் என்ற பெண் பலியானார். பஞ்சவர்ணம் என்ற பெண் காயமடைந்தார்.

அதே போல் வதுவார்பட்டி பகுதியைச் சேர்ந்த மீனாட்சி என்ற பெண் இடி தாக்கியதில் பலியானார். மற்றொரு மீனாட்சி என்ற பெண் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டார். காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: