ஈரோடு,
வங்கியில் வாங்கிய பயிர் கடனுக்கான தவணைத் தொகையை செலுத்தக்கோரி வெளியாட்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கியின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுகா, செட்டிபாளையம், மூங்கில் பாளையம் பகுதியில் சிறு,குறு விவசாயிகள் ஆக்சிஸ் வங்கியில் ரூ.3 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை பயிர் கடன் பெற்றுள்ளனர். இதனை வருடந்தோறும் வட்டியுடன் தவணையும் சேர்த்து திருப்பி செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன்படி விவசாயிகள் சரியான காலத்தில் தவணை தொகையை திருப்பி செலுத்தி வந்துள்ளனர். ஆனால், கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சி மற்றும் பயிர்களுக்கு ஏற்பட்ட நோயின் காரணமாக அறுவடை சரிவர நடைபெறவில்லை. இதனால் தவணைத் தொகை கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

 இதுகுறித்து வங்கியிடம் தெரிவித்தும், வங்கி நிர்வாகத்தினர் புரிந்து கொள்ள மறுத்து வருகின்றனர். மேலும், ஏஜென்ட் மூலமாக கடன் வசூல் செய்ய வெளியாட்களை வங்கி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்நபர்கள் விவசாயிகளை பல வழிகளில் கடனை கேட்டு மிரட்டி வருகின்றனர். இந்நிலை நீடித்தால் பல குடும்பங்கள் தற்கொலை நிலைக்கு தள்ளப்படுவர். எனவே, இதனை தடுத்து நிறுத்த மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தவணை தவறிய பயிர்களுக்கு வட்டிக்கு வட்டி போடுதல், அபராத வட்டி வசூல் செய்வதை தவிர்க்க வேண்டும். பயிர் கடன் விவசாயிகளுக்கு இந்திய அரசியல் பயிர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. வங்கி இன்சூரன்ஸ் தொகையை அரசிடமிருந்து பெற்று விவசாயிகள் கடன் கணக்கில் வரவு வைக்க வேண்டும். இதற்கிடையே, வங்கி நிர்வாகம் கடன் பெற்ற விவசாயிகளுக்கு நோட்டீஸ் மற்றும் நீதிமன்ற சம்மன் அனுப்புவது போன்ற சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதில் கல்கத்தா நீதிமன்றத்தில் விவசாயிகள் ஆஜராகுமாறு வந்துள்ளது. அந்தியூர் கிளையில் வாங்கிய கடனுக்கு கல்கத்தா செல்ல வேண்டும் என்ற நிலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே, தவணைத் தொகையை திரும்ப செலுத்த விவசாயிகளுக்கு இரண்டு ஆண்டுகள் அவகாசம் வழங்க வேண்டும். இதேபோல், இந்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவுபடி சாகுபடி செய்யப்படும் பயிர் அறுவடை மற்றும் விற்பனை ஆகிய காலத்தை கணக்கில் கொண்டு கடன் திருப்பிக் கேட்கும் தொகைகாலத்தை வங்கி மறு நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகள் திங்களன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம் மனு அளித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: