வேலூர்:
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 5 கோரிக்கைகளை வலியுறுத்தி நவ.,27 ல் ஜாக்டோ-ஜியோ சார்பில் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளர்கள் சங்கமும் பங்கேற்பது என அச்சங்கத்தின் 3 வது மாநில பிரதிநிதித்துவ பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளர்கள் சங்கத்தின் 3 வது மாநில பிரதிநிதித்துவ பேரவை வேலூர் மாவட்டம், ஏலகிரி கோட்டை சி.எஸ்.ஐ ஹாலில் நடைபெற்றது.

மாநிலத் தலைவர் எஸ்.வி.ஏகநாதன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் கே.முருகானந்தம், பி.பூபாலசிங்கம், எஸ்.காமராஜ், சி.குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை மண்டல செயலாளர் எம்.சீனிவாசன் வரவேற்புரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் மு.மாரிமுத்து வேலை அறிக்கையையும், மாநில பொருளாளர் ஏ.ராஜ முனியாண்டி வரவு செலவு அறிக்கையையும் சமர்பித்தனர்.

தீர்மானங்களை மண்டல செயலாளர்கள் மற்றும் தணிக்கையாளர்கள் முன் மொழிந்தனர். நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ரெங்கசாமி, நெடுஞ்சாலை பட்டய பொறியாளர் சங்க மாநிலத் தலைவர் மதன முசாபர், நெடுஞ்சாலை ஆராய்ச்சி அலுவலர் சங்க மாநிலத் தலைவர் வி.சக்திவேல், இயந்திர போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சி.பிரபாகரன், வேலூர் மாவட்ட அரசு ஊழியர் சங்க தலைவர் சரவணராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பேரவையை துவக்கி வைத்து அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன் பேசினார். சிறப்பு விருந்தினராக வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டார். அவரிடம், கோரிக்கை மனுக்களை மாநில நிர்வாகிகள் வழங்கினர். பேரவையை நிறைவு செய்து ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் ஜி.வெங்கடேஷ் பேசினார். முடிவில் வாணியம்பாடி கோட்ட செயலாளர் பாபு நன்றி கூறினார். இதில் 300க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

மேலும் இதில், நெடுஞ்சாலைத்துறையில் 5 ஆண்டுகளுக்கு பேக்கேஜ் முறையில் வழங்கக் கூடிய ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். பிற அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல திறன்மிகு உதவியாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். பயணப்படி வழங்க வேண்டும். காலதாமதமின்றி தகுதியுள்ள திறன்மிகு உதவியாளர்களுக்கு இளநிலை வரை தொழில் அலுவலர்(ஜே.டி.ஓ)மற்றும் இளநிலை பொறியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மனங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

You must be logged in to post a comment.