வரலாற்றிலேயே மிக மோசமானதொரு தண்ணீர் நெருக்கடியை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது. நாட்டில் விரிவடைந்து கொண்டே போகும் நகரங்களுக்கு இந்தியாவின் வைர நகரமான சூரத், நீர் மேலாண்மையிலும் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதிலும் பாடம் கற்றுத் தந்து கொண்டிருக்கிறது. சூரத்தின் மாநகராட்சி நவீன கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலைகளை பல இடங்களில் அமைத்து வருகிறது. ஒவ்வொரு துளி கழிவு நீரையும் சுத்தப்படுத்தி அதை குடிப்பதுபோக உள்ள மற்ற பயன்பாடுகளுக்குத் தர இந்த ஆலைகள் முனைந்திருக்கின்றன.

“தற்சமயம் பாண்டேசரா பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு 40 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட நீரைக் கொடுத்து வருகிறோம். மார்ச் 2019-க்குள் இந்தத் திறனை மேம்படுத்தி சூரத் நகரத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு ஒவ்வொரு நாளும் சுத்திகரிக்கப்பட்ட அல்லது மறுசுழற்சி செய்யப்பட்ட 115 மில்லியன் லிட்டர் நீரைத் தர சூரத் மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது. தொழிற்சாலைகளின் தேவைகளை இது முழுமையாக நிறைவு செய்யக் கூடிய அளவில் இருக்கும். 2014-ஆம் ஆண்டில் நாட்டிலேயே சுத்திகரிக்கப்பட்ட நீரை தொழிற்சாலைகளுக்கு விற்கத் தொடங்கிய முதல் நகரம் சூரத்தான்” என்கிறார் மாநகராட்சி கமிஷனர் எம்.தென்னரசன்.
சூரத்தின் செலவு அதிகம் வைக்காத நீர் மேலாண்மைத் திட்டம், மற்ற நகரங்களும் பின்பற்ற வேண்டிய திட்டம் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

Leave a Reply

You must be logged in to post a comment.