விழுப்புரம்,
தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனத்தின் 8 வது மாநில மாநாடு விழுப்புரத்தில் ஞாயிறன்று (அக். 14) எழுச்சியுடன் தொடங்கியது.இம்மாநாடு அக்.15ந்தேதி வரை நடக்கிறது.

சம்மேளன தலைவர் எஸ்.குணசேகரன் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். மாநாடு தொடங்குவதற்கு முன்னதாக பி.ஜீவானந்தம், ஆர்.பாண்டி, கணேசன் ஆகியோர் தலைமையில் மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்ட மாநாட்டுக் கொடியை ஜெ.லாசர் பெற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து மாநாட்டு நுழைவு வாயிலில் செங்கொடியை சம்மேளன உதவி தலைவர் எம்.அர்த்தநாரி ஏற்றிவைத்தார்.

மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியாக முதலில் சம்மேளன உதவித்தலைவர் ஏ.பிச்சைமுத்து அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். முன்னதாக மாநாட்டு வரவேற்புக் குழு தலைவர் கே.அம்பிகாபதி அனைவரையும் வரவேற்றார். சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் மாநாட்டைத் துவக்கிவைத்துப்பேசினார். மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளையும் உழைப்பாளி மக்களுக்கு எதிரான கொள்கைகளையும் அவர் விளக்கிப்பேசினார். தொழிலாளர்கள் ஒன்றுபட்டுப் போராடினால் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.சம்மேளன பொதுச்செயலாளர் ஆர்.வேங்கடபதி வேலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். பொருளாளர் ஆர்.அருள்குமார் நிதி அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

தீர்மானங்கள்:
2018 அக்டோபர், நவம்பர் மாதங்களில் மாநில, மாவட்ட, தொழிற்சாலை, துறை வாரியாக அனைத்து தொழிற்சங்கங்களின் மாநாட்டை நடத்துவது, 2019 டிசம்பர் 17 முதல் 22 தேதி வரை ஆர்ப்பாட்டங்கள் நடத்திவேலை நிறுத்த நோட்டீஸ் கொடுப் பது,  தில்லி மாநாட்டு அறைகூவலின் படி 2019 ஜனவரி 8,9 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வது, சுமைப் பணி தொழிலாளர்களுக்குப் பணி பாதுகாப்பு, மருத்துவ வசதி, போனஸ்,பென்சன் வழங்கி கேரளாவை போல் தனி நலவாரியம் அமைக்க வேண்டும், விழுப்புரம் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக வழங்கப்படாத கூலி உயர்வை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

சேலம், காட்பாடி, திருப்பூர், மதுரை உட்பட 65 சதவீதம் வருவாய் ஈட்டக்கூடிய 164 ரயில்வே கூட்செட்டுகளை தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய ரயில்வே அமைச்சகத்தின் முடிவைக் கண்டித்தும், சென்னையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயன்படுத்தும் மீன்பாடி வண்டியில் மோட்டார் பொறுத்தக் கூடாது உள்ளிட்ட காவல்துறை விதித்துள்ள பல்வேறு விதிகளை மறுபரிசீலனை செய்யக்கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் சிஐடியு மாநிலச் செயலாளர் சி.திருவேட்டை, முன்னாள் எம்எல்ஏ ராமமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், செயலாளர் எஸ்.முத்துக்குமரன், மாவட்டத்தலைவர் எம்.பழனி, மாநாட்டு வரவேற்பு குழு பொருளாளர் வி.பாலகிருஷ்ணன் உட்பட பலர் வாழ்த்திப் பேசினர். முதல் நாள் முடிவில் சம்மேளன உதவிச் செயலாளர் பி.குமார் நன்றி கூறினார். தொடர்ந்து மாநாடு திங்களன்றும் (அக்.15) நடைபெறுகிறது. செயலாளர் அறிக்கை மீது விவாதமும் தொகுப்புரையும் நடைபெறும். பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.