மக்கள் மனதில் அரியாசனமிட்டு அமர்ந்துள்ள ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்திற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு ‘நிலநடுக்கக்கோடு’ என்ற புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.

பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்:
நிகழ்வில் பங்கேற்றவர்கள், சமத்துவம் பேசும் திரைப்படத்தின் உள்ளடக்கத்தையும், உளவியலையும், சமூக எதார்த்தத்தோடு இணைத்து இருப்பதையும் எடுத்துரைத்து பாராட்டினர். “எதார்த்தவாதம், சரியலிசம், பின்நவீனத்துவம் உள்ளிட்ட 5 கோட்பாடுகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ள இந்த திரைப்படத்தை லயோலா கல்லூரியின் பாடத்திட்டத்தில் சேர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக” பேரா.காளீஸ்வரன் தமது கருத்துரையை முடிக்கையில் கூறினார். “தமது ஆய்வுப்பணியோடு, மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய நூல்களைக் கற்கும் தலித் மாணவர்களை இனங்கண்டு, தற்கொலை செய்து கொள்ள நிர்ப்பந்திக்கின்றனர். அதனை வெற்றிகரமாக செய்தும் வருகின்றனர்” என்று சுட்டிக்காட்டினர். பாராட்டுரை வழங்கிய தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ்.

டீக்கடை பஞ்சாயத்து:
“சொந்த சாதிக்குள்ளேயே திருமணம் செய்து கொண்டவர்கள் நல்ல குடும்பம் என்கிறார்கள். அதற்கு மாறாக ‘மானங்கெட்டவர்களாக’ மாறுங்கள் என்று டீக்கடையில் வைத்து பஞ்சாயத்து பேசியிருக்கிறது பரியேறும் பெருமாள்” என்று எள்ளலோடு பாராட்டை தொடங்கிய தமுஎகச பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா, “நாட்டில் நடக்கும் அவலங்களை பார்த்து வாங்க உட்கார்ந்து பேசிக்கொள்ளலாம் என நீதிபதிகளே அழைக்கிறார்கள். எனவே பொதுவெளியில் திறந்த மனதோடு உரையாடுவோம்” என்று சமகால நிகழ்வோடு இணைத்தார். (தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால் எழும்பூர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அந்த விசாரணையின்போது பத்திரிகையாளர் என்.ராம் கருத்துக்கூற அனுமதிக்கப்பட்டார்).

“படைப்பாளி தனது இருப்பை எங்கும் வெளிப்படுத்தும் நளினத்தை அறிந்து வைத்திருப்பவன். சமூகத்தின் கருத்துரிமை, பேச்சுரிமை பறிக்கப்படும்போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. தத்துவத்தை அறிந்த நாங்களும், அதை மக்கள் மொழியில் வெளிப்படுத்த தெரிந்த நீங்களும் இணைந்து சமூக மாற்றத்திற்கான பாதையில் பயணிப்போம்.” என்று ஆதவன் தீட்சண்யா கலைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

‘மாரி’யின் தாண்டம்:
படத்தின் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் தமது ஏற்புரையில், “நடுத்தர மக்களிடத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் கொரில்லா தாக்குதல் நடத்தியிருக்கிறார். தீவிர சாதி வெறியர்கள் படத்தை பார்த்துவிட்டு செல்கிறார்கள். நடுத்தர மக்களிடத்தில் பரியேறும் பெருமாள் பெருத்த விவாதத்தை உருவாக்கியுள்ளது” என்றார். “காலனிக்குள் பேசுகிற வார்த்தைகளை ஒரு வேட்பாளர் ஏன் ஊருக்குள் சென்று பேச மறுக்கிறார். ஏன் இந்த முரண்பாடு? குறைந்தபட்சம் எனது நண்பனிடமாவது சாதியைப் பற்றி விவாதிக்க வேண்டாமா? முரண்பட்ட இருவர்களிடத்தில் விவாதத்தை உருவாக்கும் வகையிலேயே எனது சினிமா இருக்கும். எனது சினிமா எதிர்த்துதான் பேசும். ஒருபோதும் அடங்கிப்போகாது” என்று அவர் பிரகடனம் செய்தார்.

“சாதி ஒவ்வாமையை தணிக்க என்ன செய்யப் போகிறோம்? ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் சாதியை பற்றி பேசாத சூழலை உருவாக்க வேண்டியது சமூகத்தின் பொறுப்பு. ‘மாரி’க்கும் நிறைய கோவம் வரும். மாரியின் தாண்டவத்தை அடுத்தடுத்த படங்களில் பார்க்கலாம்” என்றும் ரஞ்சித் கூறினார்.

மவுன சமூகத்திடம் உரையாடல்;
“எனக்கு இசங்கள் தெரியாது. மனிதர்களின் நிஜம் தெரியும். கண்ணால் கண்டுணர்ந்ததை படமாக எடுத்தேன். சிறிதளவும் நேர்மை குறையாமல் காட்சிப்படுத்தினேன். முழு படத்திற்கு செலவிட்ட உழைப்பை விட ‘நான் யார்…’ பாடலுக்கு அதிக உழைப்பை செலவிட்டேன்” என்று குறிப்பிட்ட மாரி செல்வராஜ், “அடக்குமுறை நிகழ்த்துவதும், அடக்குமுறைக்கு உள்ளாவதும் காலங்காலமாக இருக்கிறது. மவுன சமூகம்தான் இவர்கள் இருவரையும் அப்படியே வைத்துக் கொண்டு இருக்கிறது. மவுனமாக இருப்பவர்கள் பெரும் சமூகமாக இருக்கிறார்கள். ஜல்லிக்கட்டுக்காக திரள்கிற மக்கள் ஏன் கொடூரமான சாதிக் கொலைகள் நிகழும்போது திரள மறுக்கிறார்கள். எனவே மவுன சமூகத்திடம் உரையாட விரும்பினேன். எனவே, நிஜத்தை நேர்மையாக பதிவு செய்தேன். மக்களை பின்னோக்கி இழுக்கிற வசனம், காட்சி ஒன்றுகூட எனது படத்தில் இடம்பெறாது” என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.