திருப்பூர்:
திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முப்பெரும் விழா அக்டோபர் 14ஆம் தேதி ஞாயிறன்று கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் திரிபுரா மாநில முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான மாணிக் சர்க்கார் பங்கேற்கிறார்.

மனிதகுல வரலாற்றில் சோசலிச விடியலை நடைமுறைப்படுத்திக் காட்டிய மாபெரும் நவம்பர் புரட்சியின் 101ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு செந்தொண்டர்களின் மாபெரும் பேரணி, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவரான தோழர் ஹரிகிஷன் சிங் சுர்ஜித் நினைவாக தில்லியில் கட்டப்படும் சுர்ஜித் பவன் கட்டிட நிதி ஒப்படைப்பு மற்றும் தமிழகத்தில் உழைக்கும் மக்களின் உரிமைக் குரலாக ஒலித்து வரும் தீக்கதிர் நாளிதழுக்கு, திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட ஆயிரக்கணக்கான சந்தா ஒப்படைப்பு ஆகிய மூன்று பெரும் நிகழ்வுகள் மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அக்டோபர் 14ஆம் தேதி ஞாயிறன்று மாலை திருப்பூர் மங்கலம் சாலை கே.ஆர்.சி. சிட்டி சென்டர் முன்பிருந்து செந்தொண்டர் பேரணி தொடங்குகிறது. ராயபுரம் ரவுண்டானாவில் நிறைவடையும் இந்த பேரணியின் முடிவில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த விழாவில் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், இந்திய அரசியலில் சம காலத்தில் மிக எளிமையான, ஏழை முதல்வராக முன்னுதாரணமாக திகழ்ந்தவருமான மாணிக் சர்க்கார் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.தங்கவேல், கே.கனகராஜ், என்.குணசேகரன் உள்பட மாநில, மாவட்டத் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.

இதில் மாவட்டம் முழுவதும் இருந்து கட்சி அணியினர் குடும்பம், குடும்பமாகப் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்பதென்றும், கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக கொண்டாடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் இந்த முப்பெரும் விழாவுக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.