===எஸ். குணசேகரன்===
தமிழகம் முழுவதும் உள்ள சுமைப்பணித் தொழிலாளர்களை ஒருங்கிணைப்பதற்கும், மாநில அளவிலான அவர்களின் கோரிக்கைகளை அரசுகளுக்கு எடுத்துச் சொல்வதற்கும் 1995-ஆம் ஆண்டில் சேலத்தில் மாநாடு நடத்தி, ஒரு மாநில ஒருங்கிணைப்புக்குழு தேர்வு செய்யப்பட்டது. சேலம் ஆர். வெங்கடபதி ஒருங்கிணைப்பாளராகத் தேர்வு செய்யப்பட்டார். மாவட்டங்களில் உள்ள சுமைப்பணி சங்க தலைமை தோழர்கள் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்களாக இருந்தனர்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 1998-ஆம் ஆண்டில் ஈரோட்டில் மாநில ஒருங்கிணைப்புக்குழு 2வது மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் ஈரோடு ப.மாரிமுத்து ஒருங்கிணைப்பாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.

1992-ஆம் ஆண்டில் சேலம், ஈரோடு போன்ற மாவட்டங்களில் மாநாட்டில் முதன் முதலாக, சுமைப்பணித் தொழிலாளர்களுக்குத் தனி நலவாரியம் வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் நடைபெற்ற மாவட்ட மாநாடுகளில் இந்தத் தீர்மானம் தொடர்ச்சியாக நிறைவேற்றப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அரசு தனி நலவாரியம் அமைக்க வாய்ப்பு இல்லை. இது அரசின் கொள்கை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்று பதில் அனுப்பியுள்ளது.

1997-க்கு பிறகு, தமிழக அரசு பலவகைப்பட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிற முறைசாராத் தொழிலாளர்களுக்கும் தனியாக நலவாரியம் அமைத்துக் கொடுத்தது. ஆனால், சுமைப்பணித் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கை ஏற்கப்படவில்லை.

எனவே, 1998 மாநில மாநாட்டிலும், சுமைப்பணி தொழிலாளர்களுக்குத் தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மீது தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமைப்பணித் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, போராட்டத்தில் இறக்கிட முடிவு செய்தோம். இதற்கு துணையாக கேரளத்தில், சுமைப்பணித் தொழிலாளர்களுக்கு 1982 முதல் செயல்பட்டு வருகிற நலவாரியத்தில் கிடைக்கும் சலுகைகளைப் பற்றி விரிவான பிரச்சாரத்தைத் தமிழகத்தில் நடத்திட முடிவு செய்தோம்.

அதையடுத்து ப. மாரிமுத்து கேரள மாநிலத்திற்கு சென்று, நலவாரிய அதிகாரிகளைச் சந்தித்து, அதன் செயல்பாடுகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார். அரசு வெளியிட்டுள்ள துண்டுப் பிரசுரங்கள், அரசாணைகள் முதலியவற்றையும் சேகரித்தார். பிறகு, கேரளாவில் பல இடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களைச் சந்தித்து அவர்களுடைய நேரடி அனுபவங்களையும் கேட்டறிந்தார். இவைகளை உள்ளடக்கி, 10ஆயிரம் புத்தகங்கள் அச்சிடப்பட்டு, மாநிலம் முழுவதும் பிரச்சாரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. இது பல மாவட்டங்களில் நல்ல உடனடி பலனைத் தந்தது.

பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்ல, சுமைப்பணி சங்க சம்மேளனக்குழு மாநிலக்குழு கேரளா பயணம் சென்று வாரிய அலுவலகம், தொழிலாளர்கள் சந்திப்பு என்று கேரள மாநிலத்தில் உள்ள நலவாரிய அலுவலகம் சென்று நலவாரிய செயல்பாடுகள் சம்பந்தமாக கேட்டறிந்தோம்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமைப்பணித் தொழிலாளர்களின் வேலை நிலைமை மற்றும் கூலி உயர்வு குறித்து மாநில ஒருங்கிணைப்புக்குழு கவனம் செலுத்திப் பணியாற்றியது.

மாநில ஒருங்கிணைப்புக்குழுவில் இருந்த சென்னை தோழர்கள் (எல்.சுந்தர்ராஜன், ஐ.ஆரோக்கியசாமி) மத்திய வேர்ஹவுஸ் கிடங்கில் வேலை செய்கிற சுமைப்பணி தொழிலாளர்கள் மத்தியில் தொடர்புகள் வைத்திருந்தனர். மாநில அளவில், வேர்ஹவுஸ் சுமைப்பணித் தொழிலாளர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று ஆலோசனையை முன்வைத்தார்கள். அதை ஏற்றுக் கொண்டு மாநில அளவில் மத்திய வேர்ஹவுஸ் சுமைப்பணித் தொழிலாளர்களை ஒருங்கிணைத்தோம்.

அந்தக் காலத்தில், சென்னை பகுதியில் இருந்த கிடங்குகளில் மட்டும் இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி, வருங்கால வைப்பு நிதி பிடித்தம், போனஸ் போன்றவற்றைத் தொழிலாளர்கள் பெற்று வந்தார்கள். தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும், இந்தச் சட்டப்பூர்வமான கோரிக்கைகளை வலியுறுத்துவது என்று முடிவு செய்து, அதற்கான பணிகளில் இறங்கினோம்.

இந்தக் காலத்தில், மாநில ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மாநில சிஐடியு பொதுச் செயலாளர் டி.கே.ரங்கராஜன் கலந்து கொண்டார். சம்மேளனத்தின் செயல்பாடுகளைப் பற்றி வந்த விமர்சனங்களை ஊன்றிக் கேட்டார். அவர் பேசும் போது, மத்திய வேர்ஹவுஸ் சுமைப்பணித் தொழிலாளர்களைப் போலவே, ரயில்வே குட்ஸ்செட், டாஸ்மாக், ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், சிவில் சப்ளை கிடங்குகள் போன்ற அரசுக் கிடங்குகளில் பணிபுரியும் சுமைப்பணித் தொழிலாளர்களைத் திரட்ட வேண்டும் என்றும், மாநிலம் முழுவதும் அவர்களுக்குக் குறைந்த பட்ச சட்டச்சலுகை அமலாக்கப்பட வேண்டும் என்றும் வழிகாட்டினார். இது நல்ல பலனைக் கொடுத்தது.

டி.கே.ரங்கராஜனின் ஆலோசனைப்படி அரசுக் கிடங்குகள் வாரியாக ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. குட்ஸ்செட், டாஸ்மாக், வேர்ஹவுஸ் உள்ளிட்ட ஒருங்கிணைப்புக்குழுக்களுக்கு, தனி ஒருங்கிணைப்பாளரும் நியமிக்கப்பட்டார்கள்.
தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும், எல்லாக் கிடங்குகளிலும் உள்ள தொழிலாளர்கள் பல்வேறு சங்கத் தலைமையின் கீழ் இருந்தார்கள் அல்லது தொழிலாளர்கள் அமைப்பே இல்லாமல் இருந்தார்கள்.

1998-ல் மதுரையில் மாமுலுக்கான போராட்டம் ஒரு வாரம் வேலை நிறுத்தம் நடைபெற்றது. தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தில் இருந்து மாமுல் கொடுக்க இயலாது என்றனர். இறுதியில் அன்றைய ஆட்சியர் காசிவிஸ்வநாதன் தலையிட்டு மாமுல் என்பது மடிப்புக் கூலி கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்திய பின் இரவு 2 மணிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்தத் தன்மைகளை எல்லாம் கணக்கில் வைத்துக் கொண்டு, அவர்களுடைய உணர்வுகளுக்கும், தனித்தன்மைக்கும் பாதகம் இல்லாமல், மாநில அளவிலான கோரிக்கைகளை உருவாக்கினோம். அதன்மீது தொடர்ச்சியான போராட்டங்களையும் நடத்தினோம். இது நல்ல பலனைக் கொடுத்தது.

ஓய்வறை, குடிநீர் வசதி, குளியல் அறை, கழிப்பறை வசதிகள், இ.எஸ்.ஐ, வருங்கால வைப்புநிதி, போனஸ் போன்ற சட்டப்பூர்வமான உரிமைகள் மாநிலம் முழுவதும் போராடிப் பெற்றோம். இது தொழிலாளர்களுக்கு நம்பிக்கையூட்டியது. இதன் காரணமாக, பல மாவட்டங்களில் வேறு தலைமையின் கீழ் செயல்பட்ட சங்கங்கள், நமது தலைமையை ஏற்றுக் கொண்டன. சங்கம் இல்லாத இடங்களில் சங்கம் அமைக்கவும் இந்த அணுகுமுறை பயன்பட்டது. ஈரோடு, மதுரை போன்ற மாவட்டங்களில் தொழிலாளர்கள் ஜாதிய ரீதியாக இருந்தாலும் நமது செயல்பாட்டின் காரணமாக சிஐடியு பக்கம் திரண்டனர்.

மறுபுறம், மாவட்டங்களில் கூலிப் பிரச்சனை வருகிறபோது, சுமைப்பணி சம்மேளன மாநிலத் தலைமை அவற்றில் தலையிட்டது. திண்டுக்கல், மதுரை, சேலம், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில், அரசு அறிவித்துள்ள குறைந்த பட்சக்கூலி கூட இல்லாமல் – அதைப்பற்றிய விழிப்புணர்வு கூட இல்லாமல் – தொழிலாளர்கள் கூலி உயர்வு பெற்று வந்தார்கள். நமது மாநில அமைப்பு, மிகவும் குறைவான கூலி வழங்கப்பட்டு வந்த இடங்களில் தலையிட்டு, குறைந்தபட்ச கூலிச் சட்டத்தை விளக்கிச் சொல்லி, அதற்கும் மேலான கூலி உயர்வைப் பெற்றோம். சில மாவட்டங்களில் 2 ஆண்டுக்கு ஒரு முறைகூலி உயர்வு என்று ஒப்பந்தமும் போடப்பட்டது.

இந்தச் செயல்பாடுகளால் வேகமான வளர்ச்சி அடைந்தோம். எனவே, மாநில அளவில் ஒரு சம்மேளனமாகச் செயல்பட வேண்டும். என்று சிஐடியு மாநிலக்குழு முடிவு எடுத்தது.அதன்பின் கோவையில் நடைபெற்ற 3வது மாநாடு மாநில மாநாட்டில் சென்னை எல். சுந்தர்ராஜன் மாநிலத் தலைவராகவும், ப. மாரிமுத்து (ஈரோடு) பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டார்கள். மாநிலக்குழுவில் தொழிலாளர்கள் வரை உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டார்கள்.4வது மாநாடு திருச்சியில் நடைபெற்றது.

5வது மாநாடு 2008 ஜூலை 20, 21 தேதிகளில் சேலத்தில் நடைபெற்றது. ப.மாரிமுத்து (ஈரோடு) சம்மேளனத் தலைவராகவும், எல். சுந்தர்ராஜன் (சென்னை) சம்மேளன பொதுச் செயலாளராகவும்,எம். பிரதாப் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். பேரணியில் 6000 பேர் கலந்து கொண்டனர்.

6வது மாநாடு 2012 ஏப்ரல் 22, 23 தேதிகளில் திருப்பூரில் நடைபெற்றது. இதில் சம்மேளனத் தலைவராக எஸ்.குணசேகரன் (மதுரை), பொதுச்செயலாளராக ஆர்.வெங்கடபதி (சேலம்), பொருளாளராக ஆர்.அருள்குமார் (சென்னை) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 4000 பேர் பேரணியில் கலந்து கொண்டனர்.

7வது மாநாடு 2015 ஆகஸ்ட் 16,17 தேதிகளில் மதுரையில் நடைபெற்றது. இதில் சம்மேளனத் தலைவராக எஸ்.குணசேகரன், பொதுச் செயலாளராக ஆர்.வெங்கடபதி, பொருளாளராக ஆர். அருள்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பேரணியில் 60 பெண்கள் உள்பட 5000 பேர் பங்கேற்றனர்.

4வது மாநாடு திருச்சியில் நடைபெற்ற பிறகு சென்னை சிஐடியு மாநிலக்குழு அலுவலகத்தில் நமது மாநில அலுவலகம் செயல்பட்டது. சம்மேளனத்தை தனியாக பதிவு செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு 3026~ CN1 இணைப்பு சிஐடியு என்று பதிவு செய்யப்பட்டது.
சுமைப்பணித் தொழிலாளர்கள் 55 கிலோ மூடை தான் சுமக்க வேண்டும் என்று I.L.G. (உலகத்தொழிலாளர் அமைப்பு) பரிந்துரைத்தது. இந்த ஐ.எல்.ஒ. பரிந்துரையை 1985-ல் மத்திய அரசின் தொழிலாளர் அமைச்சர் சி.ஐ.ஷன்மா ஏற்றுக் கொண்டார். அது தான் இன்றைக்கு அரசு நிறுவனங்கள் 50 கிலோ, 60 கிலோ மூடைகளாக மாற்றியுள்ளது. தனியார் நிறுவனங்கள், மார்க்கெட் உள்ளிட்டு இன்னும் 100 கிலோ மூடைகள் வந்து கொண்டிருக்கின்றன. இதை எதிர்த்து போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

மேலும், நமது சம்மேளனம் அரசு கிட்டங்கிகளில் பணி செய்யக் கூடியவர்களை தனித்தனியாக திரட்டி அவர்களது கோரிக்கைகளை முன்வைத்து அவர்களை நமது சிஐடியு சங்கத்தின் பக்கம் திரட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதையடுத்து சென்ட்ரல் வேர்ஹவுஸ், குட்செட், டாஸ்மாக் போன்ற துறைகளில் பணி செய்யும் சுமைப்பணித் தொழிலாளர்களுக்கு தனித்தனி ஒருங்கிணைப்புக்குழு அமைத்து அதற்குத் தனியாக பொறுப்பாளர்கள் நிச்சயம் செய்தோம். அவ்வாறு அமைத்ததின் காரணமாக தமிழகத்தில் குட்செட், டாஸ்மாக் குடோன்களில் உள்ள சுமைப்பணித் தொழிலாளர்களை சிஐடியு பக்கம் ஈர்க்க முடிந்தது. சேலம், காட்பாடி, ஈரோடு, திருப்பூர், மதுரை, விருதுநகர் போன்ற ரயில்வே குட்செட்டுகளில் நமது சங்கம் ஏற்படுத்தப்பட்டு கூலி, போனஸ், இஎஸ்ஐ, பிஎப் போன்ற சலுகைகள் பெற்றுத்தரப்பட்டு சுமைப்பணித் தொழிலாளர்கள் பயன் அடைந்து கொண்டிருக்கிறார்கள்.

டாஸ்மாக் சம்பந்தமாக தர்மபுரியில் தோழர். மாரியப்பன் ஏற்பாட்டில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது, கிருஷ்ணகிரியில் 90 ஆயிரம் கூலி பாக்கி இருந்தது. உடனடியாக வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் 500 வால்போஸ்டர் போடப்பட்டது. 90 ஆயிரம் பாக்கியும் வழங்கப்பட்டது.

அதேபோல், டாஸ்மாக் ஒருங்கிணைப்புக்குழு 2012-ல் அமைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் 5 மண்டலங்கள் உள்ளதில் 4 மண்டலங்களில் அதாவது 43 குடோன்களில் 32 குடோன்களில் சிஐடியு உறுப்பினர்களாக அந்தந்த மாவட்டத்தில் இணைந்துள்ளனர். இவர்களுக்கு பிஎப், இஎஸ்ஐ 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயர்வு, குடோன் மாறினாலும் ஏற்கனவே வேலை செய்தவர்கள் தான் வேலை செய்வார்கள் என்ற உறுதியை போராட்டத்தின் வாயிலாகவும், நீதிமன்றத்தின் வாயிலாகவும் பெற்று தந்துள்ளோம். 2003 நவம்பர் 29-ல் டாஸ்மாக் அரசுடமையானது.

2003-ல் சென்னை அம்பத்தூரில் உள்ளவர்கள் வேறு தனியாக சிஐடியு அல்லாத ஒரு மாநாட்டை நடத்தினார்கள். அன்றைக்கே தமிழகம் முழுவதும் 42 குடோன்கள் இருந்தது. சிஐடியு அல்லாத அமைப்பின் மூலமாக தமிழகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு எந்தவிதமான சலுகைகளையும் பெற்றுத்தர முடியவில்லை.
24.04.2009-ல் தேனி குடோன் மாறும் போது பிரச்சனை ஏற்பட்டு, ஏற்கனவே வேலை செய்தவர்கள் தான் வேலை செய்வோம் என்று மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டும் ஏற்கனவே வேலை செய்தவர்கள் தான் வேலை செய்வோம் என்று தீர்ப்பும் பெற்றோம்.

2003-ல் ஒரு பெட்டிக்கு ரூ.1.25 பைசா இறக்குக்கூலியாக இருந்தது.2007-ல் இருந்து பிஎப் ஆரம்பிக்கப்பட்டது.2012-ல் டாஸ்மாக் குடோன் சுமைப்பணித் தொழிலாளர்கள் சிஐடியுவில் அதிகமாக இணைந்திருந்தார்கள். அன்றைக்கு 0.25 பைசா என்ற அடிப்படையில் படிப்படியாக உயர்ந்து ரூ.1.25 பைசாவில் இருந்து ரூ. 2.50 பைசா வரை பெற்று வந்தனர். 15.08.2013-ல் டாஸ்மாக் சுமைப்பணித் தொழிலாளர் மாநாடு மதுரையில் நடத்தினோம். வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தினோம்.

05.11.2014-ல் இறக்குக்கூலி ஒரு பெட்டிக்கு ரூ.2.50-ல் இருந்து ரூ.3.50 ஆக பெற்றோம்.
05.03.2017-ல் நெல்லையில் டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர் மாநாட்டை நடத்தினோம். 2 நாட்கள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தினோம். லிகர் பெட்டிக்கு மட்டும் ரூ.0.50 பைசா உயர்வு என்றனர். உயர்வை பெற மறுத்தோம்.2017 டிசம்பரில் ஒரு பெட்டிக்கு இறக்குக்கூலி ரூ.3.50-ல் இருந்து ரூ.4.50 பைசாவாக உயர்ந்தது. பீர் பெட்டிக்கு மட்டும் ரூ.0.50 பைசா உயர்ந்து ரூ.3.50-ல் இருந்து ரூ.4.00 ஆனது.

சிஐடியு அமைப்பாக திரண்ட பிறகு தற்போது ஒரு பெட்டிக்கு இறக்குக்கூலி ரூ.4.50 பெற்று வருகிறார்கள். இதில், நமது சம்மேளனம் தனிக்கவனம் செலுத்தியது. ஆகவே, இன்று பிஎப், இஎஸ்ஐ சலுகைகளும் பெற்றுத்தரப்பட்டுள்ளது. 2013-ல் ஞாயிற்றுக்கிழமை வார விடுப்பையும் பெற்றோம். சில குடோன்களில் குடிதண்ணீர், ஓய்வறை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.
சுமைப்பணித் தொழிலாளர்களின் பிரச்சனைக்காக திருச்சியில் மார்க்கெட் சுமைப்பணி தொழிலாளியும், நமது சம்மேளனத் தலைவர்களில் ஒருவரான அன்பழகனை சமூக விரோதிகள் வெட்டி கொலை செய்தனர். அதேபோல் மதுரை கூடல்நகர் ரயில்வே குட்செட்டில் கூலியும், பிஎப் சுரண்டப்படுவதை எதிர்த்துக் கேட்ட நமது சம்மேளனக் குழு உறுப்பினர் ஆர்.பாலமுருகன் வெட்டி கொலை செய்யப்பட்டார். இவ்வாறு சுமைப்பணி சங்க மாநிலத் தோழர்களை இழந்து தியாகம் செய்து சம்மேளனம் வளர்ந்து வருகிறது.

தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம் என்று ஆரம்பிப்பதற்கு முன்பு தமிழகம் முழுவதும் வெறும் 5000 உறுப்பினர்கள் தான் இருந்தது. தற்போது, பொதுத் தொழிலாளர் சங்கத்தில் உள்ள சுமைப்பணி தொழிலாளர்கள் உள்ளிட்டு 30 ஆயிரம் பேர் மாவட்டங்களில் சிஐடியு உறுப்பினர்களாக உள்ளனர். தனி தொழிற்சங்க பதிவு இல்லாத மாவட்டங்களில் அந்தந்த மாவட்டங்களில் பேசி சில மாவட்டங்களில் பதிவை ஏற்படுத்தியுள்ளோம். இவ்வாறு மாநிலம் முழுவதும் சிறு, சிறு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம் உள்ளது.

கட்டுரையாளர் : சுமைப்பணித் தொழிலாளர் சம்மேளன தலைவர்

Leave a Reply

You must be logged in to post a comment.