நாகர்கோவில்:
விவசாயத் தொழிலாளர்கள், ஆதரவற்ற முதியோர், விதவைகள், மாற்றுத் திறனாளிகள், முதிர்கன்னிகள், தனித்து வாழும் பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோர், கொடிய நோயால் பாதிக்கப்பட்டோர், கேன்சர், பக்கவாதம், விபத்து ஊனம், படுக்கையில் கிடப்பு நிலையில் உள்ளோர் உள்ளிட்ட அனைவருக்கும் நிபந்தனையற்ற ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் வியாழக்கிழமையன்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு, விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் மலைவிளை பாசி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ரெகுபதி ஆகியோர் தலைமை வகித்தனர். மாதர் சங்க அகில இந்திய துணைத்தலைவர் உ.வாசுகி, மாநில துணைத் தலைவர் என்.உஷா பாசி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் என்.எஸ்.கண்ணன், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில பொருளாளர் எம்.அகமது உசேன் ஆகியோர் உரையாற்றினர். போராட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோர் மத்தியில் உ.வாசுகி பேசியதாவது:
அரசாங்கத்தின் வரவு செலவு கணக்கைப் பார்த்தால் மாதம் 1000 ரூபாய் என்பது மிக மிகக் குறைந்த தொகை. ஆனால் இதை நமக்கு கொடுப்பதற்கு ஆயிரம் தடைகளை மத்திய மாநில அரசுகள் போடுகின்றன. எனவேதான் நாம், 1000 ரூபாய் உதவித்தொகை வழங்க நிபந்தனைகள் கூடாது என ஒரே குரலில் கேட்கிறோம். 1000 ரூபாய் உதவித்தொகைக்கு வசதி படைத்தவர்கள் யார் அலையப் போகிறார்கள்? நமக்கு வேறு கதி இல்லை, வேறு வழி இல்லை என்பதால் அரசின் இந்தத் திட்டம் நமக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக வந்திருக்கிறோம்.

10 கோடி வேலை எங்கே?
மோடி ஆட்சியின் 5 வருடம் முடிய போகும் தருவாயில் உள்ளது. அடுத்த தேர்தலும் வரப்போகிறது. கடந்த தேர்தலின் போது நிறைய வாக்குறுதிகளை நமக்கு கொடுத்தார்கள். விலைவாசியை கட்டுப்படுத்துவோம் என்றார்கள். கட்டுப்படுத்தினார்களா? கடையில் சென்று பொருட்கள் வாங்க முடியாத அளவுக்கு விலைகள் உயர உயர பறக்கின்றன. வருடத்திற்கு 2 கோடிப் பேருக்கு வேலை கொடுப்போம் என்று வாக்குறுதி அளித்தார்கள். அவர்கள் கூறியது போல் வருடத்திற்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுத்திருந்தால் 5 வருடத்தில் 10 கோடி பேருக்கு வேலை கொடுத்திருக்க முடியும். அதில் குமரி மாவட்டத்தில் சில ஆயிரம் பேருக்கு நல்ல வேலை கிடைத்திருக்காதா? கிடைக்கவில்லையே எனவே தான் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நவம்பர் மாதம் நாட்டில் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்களும் இளம்பெண்களும் தில்லியில் அணிவகுத்து எங்கே என் வேலை என முழக்கமிட்டு போராட உள்ளனர்.

மோடிக்குப் பிடிக்காத விஷயம்
போகிற இடங்களில் எல்லாம் பாஜகவினரை பார்த்து எங்கே வேலை என எல்லாரும் கேட்கிறார்கள். இந்த கேள்வியைக் கேட்பதே மோடிக்கும், அவரது பாஜக கட்சியினருக்கும் பிடிக்காத விஷயம். நரேந்திர மோடி பிரதமரான பிறகு எங்கேனும் மக்கள் இருக்கிற இடங்களுக்கு வந்து உங்களுக்கு என்ன பிரச்சினை என கேட்டிருப்பாரா? மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறியிருப்பாரா. அவர் மன் கி பாத்தில் பேசுவார். நாம் கேட்போம். நாம் பேசுவது எதுவும் அவர் காதில் விழுவது கிடையாது.

பாஜக மாநில தலைவர் தமிழிசை, மோடியின் மீது மக்களுக்கு அன்பும், பாசமும் பெருக்கெடுத்து ஓடுகிறது; அவருக்கு ஓட்டுபோட அனைவரும் தயாராகி விட்டார்கள் என கூறுகிறார். அந்த காலத்தில் மன்னர்கள், தங்கள் ஆட்சியை பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரிந்து கொள்ள மாறுவேடத்தில் நகர்வலம் வருவது போல மோடியும் மாறுவேடத்தில் தமிழகத்திற்கு வந்து, தனது ஆட்சி குறித்து மக்களிடம் கேட்டால், மக்கள் திட்டுவது கேட்டு அவரது இரண்டு காதுகளும் கிழிந்து ரத்தம் வரும் அளவுக்கு இங்கு நிலைமைகள் இருக்கிறது.

‘சும்மா சொன்னோம்’!
கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு ஏழையின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் கொடுப்போம் என வாக்குறுதி அளித்தார்கள். இதுவரை 15 பைசா கூட வரவில்லை. ஆனால் அதேநேரத்தில் வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு 500 ரூபாய் வைக்கவில்லை எனக் கூறி வங்கியில் 100 ரூபாய் அபராதம் வசூலிக்கின்றனர். இப்படி ஏழைகளிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பணம் ஒரு வருடத்தில் மட்டும் 12 ஆயிரம் கோடி ரூபாய். பாஜக தலைவர் அமித்ஷா, ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் அளிப்போம் எனக் கூறியது, தேர்தல் சமயத்தில் நாங்கள் சும்மா சொன்னது, அதை எல்லாம் சீரியஸாக எடுத்து கொண்டு ஏன் எங்களிடம் கேள்வி கேட்கிறீர்கள் எனக் கூறுகிறார். பாஜக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, கடந்த தேர்தலின்போது ஆட்சியைப் பிடிப்போம் என தெரியாது. எனவே எங்கள் தலைமை கூறியபடி வாக்குறுதிகளை அள்ளிவீசினோம். ஆனால் நாங்கள் வெற்றி பெற்றோம். தற்போது மக்கள் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து எங்களிடம் கேட்டால், நாங்கள் சிரித்து கொண்டே கடந்து செல்கிறோம் எனக் கூறுகிறார். அப்படியென்றால் இந்திய மக்களையும், தமிழக மக்களையும் இவர்கள் ஏமாளிகள் என்றல்லவா நினைத்திருக்கிறார்கள்.

ஓட ஓட விரட்டுவோம்
இதே மோடி வரும் 2019 தேர்தலில் ஆட்சிக்கு வர நாம் அனுமதித்தால் நமது நிலைமை இன்னும் பலமடங்கு மோசமாகும். கிடைக்கிற 1000 ரூபாயும் கிடைக்காது என்பதை நாம் மனதில் வைத்து கொள்ள வேண்டும். தேர்தல் வரும் போது நாம் நிமிர்ந்து நின்று மோடியின் கூட்டத்தை ஓட ஓட விரட்டியடிப்பதை நமது முதல் கடமையாக ஏற்போம். மக்கள் ஏமாளிகள் அல்ல என்பதை பாஜக ஆட்சியாளர்களுக்கு உணர்த்துவோம்.இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.