திருப்பூர், அக். 10 –

திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சிட்கோ பின்னலாடை தொழிற்பேட்டை பகுதியில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்னாபுரம் கிளை சார்பில் திருப்பூர் ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

சிட்கோ பகுதியில் பின்னலாடை தொழிற்சாலைகள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரிகள் இயங்கி வருகின்றன. நூற்றுக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள், அரசு மற்றும் பள்ளி பேருந்துகள் அதிக அளவில் வந்த செல்கின்றன. ஆனால் சிட்கோ பேருந்து நிறுத்தத்தில் இருந்து தொழிற்பேட்டை பிரதான நுழைவாயில் வரை சாலையின் இருபுறமும் சாலை படுமோசமாக சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளன. இந்த சாலையில் செல்லும்போது விபத்து நேரிடும் ஆபத்து உள்ளது. எனவே உடனடியாக இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

சிட்கோ பேருந்து நிறுத்தத்தில் இருக்கும் கோபுர மின் விளக்கு மூன்று மாதங்களாக எரியவில்லை. வெளியூர் மற்றும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் நிறைந்த பகுதியில் இரவு நேரங்களில் பணி முடித்து வீட்டிற்குச் செல்வதற்கு அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே உடனடியாக கோபுர மின் விளக்கை சரி செய்து தர வேண்டும் என்றும் பொன்னாபுரம் கிளைச் செயலாளர் ஆ.செல்வன் இம்மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.