திருப்பூர், அக். 10 –

அரசு அறிவிக்கும் திட்டப் பணிகளை நிறைவேற்ற நெருக்கடி கொடுப்பதைக் கைவிட்டு, உரிய கால அவகாசம் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.ஞானசேகரன் தலைமை வகித்தார். இதில் ஊழியர் விரோதப் போக்குடன் செயல்படும் புதுக்கோட்டை மாவட்ட வளர்ச்சித்துறை திட்ட அலுவலர் சந்தோஷ்குமாரை பணி மாற்றம் செய்யவும், பிறதுறை அலுவலர்கள் மூலம் கள ஆய்வுக்கு உட்படுத்துவதை கைவிடவும், நீக்கப்பட்ட 31 ஊரக வளர்ச்சித்துறை உதவித் திட்ட அலுவலர் பணியிடங்களை மீண்டும் வழங்கவும், கோவை, திருச்சி மாவட்டங்களில் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையைக் கைவிடவும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் பி.செந்தில்குமார், போராட்டத்தை வாழ்த்தி வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் ச.முருகதாஸ், அரசு ஊழியர் சங்க மாநில நிர்வாகிகளில் ஒருவரான ஞானத்தம்பி ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.ரமேஷ் நிறைவுரை ஆற்றினார். மாவட்ட இணைச் செயலாளர் ந.மணிகண்டன் நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: