தரங்கம்பாடி:
நாகை மாவட்டம்,தரங்கம்பாடியில் உள்ள ஆசியாவின் முதல் புராட்டஸ்டாண்டு(சீர்திருத்த) ஆலயமான புதிய எருசலேம் கட்டப்பட்டு 300 ஆவது ஆண்டு நிறைவு விழா வியாழனன்று நடைபெற்றது. கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக டென்மார்க் நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட ஜெர்மனியை சேர்ந்த மதபோதகர் சீகன்பால்குவால் கட்டப்பட்ட இந்த தேவாலயம் தான் ஆசியா கண்டத்திற்கே முதல் சீர்திருத்த ஆலயமாகும். 11-10-1718ல் திறக்கப்பட்ட தினத்தை நினைவுகூரும் வகையில் தரங்கம்பாடி ஜெபமாலை அன்னை ஆலயத்திலிருந்து ஒற்றுமையை வலியுறுத்தி 2ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பேரணியை, தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் நிர்வாகியும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான வெங்கட்ராமன் துவக்கி வைத்தார்.

திருச்சபையின் ஆன்மீக தலைவர் எட்வின் ஜெயக்குமார், ஆலய ஆயர் நவராஜ்ஆபிரகாம், ஆலய நிர்வாகிகள் ஜெயகரன்,ஜெஸ்டின்,பேரணி ஒருங்கினைப்பாளரும், பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியருமான ஜான் சைமன் மற்றும் ஆயர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள்,பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள்,பொதுமக்கள் பேரணியில் கலந்து கொண்டனர். கடைவீதி,இராஜ வீதி வழியாக கடற்கரையோரம் உள்ள சீகன்பால்கு வந்திறங்கிய நினைவிடம், சீகன்பால்கு சிலை ஆகியவற்றில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து புதிய எருசலேம் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தமிழறிஞர் சீகன்பால்குவை நினைவுகூர்ந்து புதிய எருசலேம் ஆலயத்தை நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டுமென்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.