திருப்பூர், அக். 10 –

திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுடன் இணைந்து இயங்கி வரும் சட்டத்துக்குப் புறம்பான மதுக்கூடங்களை (பார்) அகற்றுமாறு திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் (சிஐடியு) வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக புதன்கிழமை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமியிடம் டாஸ்மாக் ஊழியர் சங்கத் தலைவர் எம்.ஆறுமுகம், செயலாளர் ஒய்.அன்பு ஆகியோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகரம், உடுமலை, தாராபுரம், காங்கயம், அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளி, வெள்ளகோவில், முத்தூர் மற்றும் மூலனூர் உள்ளிட்ட நகரங்களில் ஏறத்தாழ 238 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளுடன் இணைந்து இயங்கி வரும் மது அருந்தும் கூடங்கள் (பார்) 97 மட்டுமே முறையான அனுமதி பெற்றவை. மீதமுள்ள 141 பார்கள் முறையான அனுமதி இல்லாமல், மற்றும் அனுமதிக்கப்பட்ட காலத்திற்குப் பின்னும் புதுப்பிக்கப்படாமல் சட்டத்துக்குப் புறம்பாக இயங்கி வரும் நிலை தொடர்கிறது. இந்த பார்களில் விற்பனை நேரத்தைக் காட்டிலும் கூடுதலாக, அதாவது 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படும் நிலை தொடர்கிறது.

பார் உரிமையாளர்கள் அதன் அருகிலுள்ள டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்களிடம் சரக்குகளைக் கேட்டு மிரட்டுவதும், பயமுறுத்தி சரக்குகளைப் பெற்றுக் கொள்வதும், தகராறு செய்வதும் நீடித்து வருகிறது. இதனால் ஊழியர்கள் பணிகளில் முழுமையாக ஈடுபட இயலாத நிலையும், அன்றாட மன உளைச்சலுக்கும் ஆளாகி தொடர்ந்து சிரமப்படுகின்றனர். சட்டவிரோத பார்களால் அரசுக்கு வருமான இழப்பு ஏற்படுத்துவதுடன் தனிநபர்கள் முறைகேடாக வருமானம் சேர்க்கின்றனர். எனவே இந்த பார்களை தயக்கமின்றி அகற்றி, அரசுக்கு வருமானம் ஏற்படுத்தும் முறையான பார்களை உருவாக்க நிர்வாகம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் கேட்டுக் கொண்டது.

இக்கோரிக்கையை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், உடனடியாக சார் ஆட்சியர், டாஸ்மாக் மேலாளர் உள்ளிட்டோருக்கு நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைப்பதாக தெரிவித்ததாக டாஸ்மாக் ஊழியர் சங்க செயலாளர் ஒய்.அன்பு கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.