திருச்சிராப்பள்ளி:
தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் வியாழனன்று திருச்சி அருண் ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சுந்தரம்மாள் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாநில பொதுச்செயலாளர் நூர்ஜகான் பேசினார்.

கூட்டத்தில், சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய அரசு ஊழியருக்கு இணையான வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஒட்டுமொத்த தொகை ரூ. 5லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில துணைத்தலைவர்கள் அண்ணாதுரை, பாண்டி, தமிழரசன், சாவித்திரி, அமுதா, சசிகலா, மாநில செயலாளர்கள் ஆண்டாள், பெரியசாமி, சக்தி, அய்யம்மாள், மலர்விழி, சுபந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக திருச்சி மாவட்ட தலைவர் எலிசபெத்ராணி வரவேற்றார். மாநில பொருளாளர் பேயத்தேவன் நன்றி கூறினார்.

முன்னதாக மாநில பொதுச்செயலாளர் நூர்ஜகான், நிருபர்களிடம் கூறியதாவது:- சத்துணவு ஊழியர்கள் பணிக்கு சேர்ந்து 34 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் அரசு ஊழியர்களுக்கு இணையான வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கப்படவில்லை. அரசு ஊழியருக்கு இணையான வரையறுக்கப்பட்ட குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் 3-ம் கட்ட போராட்டங்களை அறைகூவல் தீர்மானங்களாக கொண்டு வந்தோம். ஆகஸ்ட் 30ம் தேதி ஒன்றிய அளவில் ஆர்ப்பாட்டமும், கடந்த 20ம் தேதி பேரணியும் நடத்தப்பட்டது. இதில் 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இரண்டு கட்ட போராட்டம் நடத்தியும் மாநில நிர்வாகிகளை அரசு அழைத்து பேசவில்லை. இதனால் 25.10.18 முதல் மாவட்ட தலைநகரங்களில் காத்திருப்பு போராட்டங்களை நடத்துவது என்று மாநில செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. எங்களது கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கும் வரை எங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.