டாக்கா:
வங்கதேசத்தில் கடந்த 2004-ம் ஆண்டு நடந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்த வழக்கில் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் உள்ளிட்ட 19 பேருக்கு ஆயுள் சிறையும், மற்ற 19 பேருக்கு மரண தண்டனையும் விதித்து டாக்கா நீதிமன்றம் புதனன்று தீர்ப்பளித்தது.

கடந்த 2004-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி சார்பில் தலைநகர் டாக்காவில் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் சக்தி வாய்ந்த குண்டுவெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 24 பேர் கொல்லப்பட்டனர், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பில் தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவும் காயமடைந்தார். அவருக்கு ஒரு பக்கம் காதுகேட்கும் திறன் பாதிக்கப்பட்டது.இந்நிலையில், டாக்காவில் உள்ள விரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான், அப்போதைய அமைச்சர்கள் 4 பேர், புலனாய்வுத் துறை அதிகாரிகள் 2 பேர் என மொத்தம் 49 பேர் சேர்க்கப்பட்டனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் இந்த குண்டுவெடிப்புக்கு மூளையாக இருந்து செயல்பட்டது வங்கதேசத்தில் உள்ள ஹர்கதுல் ஜிஹாத் அல் இஸ்லாமி எனும் தீவிரவாத அமைப்பாகும். இந்தத் தீவிரவாத அமைப்புக்கு முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் ரஹ்மான் ஆதரவு அளித்து வந்தது தெரியவந்தது.

மேலும், இந்த குண்டுவெடிப்பில் முக்கிய இலக்காக இருந்தது ஷேக் ஹசீனாதான். ஆனால், குண்டுவெடிப்பி்ல படுகாயத்துடன் அவர் உயிர்பிழைத்தார் என்றும் அவரது அவாமி லீக் கட்சியின் முன்னாள் தலைவர் ஜில்லூர் ரஹ்மான், அவரது மனைவி இவி ரஹ்மான் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

கடந்த 14 ஆண்டுகளாக டாக்காவில் உள்ள விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடந்துவந்த நிலையில் புதனன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட 49 குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர். முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் உள்பட 19 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், 19 பேருக்குத் தூக்கு தண்டனையும் விதித்து, நீதிபதி ஷாகித் நூருதீன் தீர்ப்பளித்தார்.கலிதா ஜியா மகன் தாரிக் ரஹ்மான் தற்போது லண்டனில் தலைமறைவாக உள்ளார். அந்நாட்டு அரசிடம் தனக்கு புகலிடமும் கேட்டுள்ளார். இதனால், தாரிக் ரஹ்மான் வசிக்கும் இடம்குறித்து தெரிவிக்க இங்கிலாந்து அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.இதற்கிடையே ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று முன்னாள் பிரதமர்  கலிதா ஜியா சிறையில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத்தீர்ப்பு குறித்து வங்கதேச உள்துறை அமைச்சர் அசாதுஜமான் கான் கமல் கூறுகையில், வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து இங்கு கொண்டுவர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.
(பிடிஐ)

Leave A Reply

%d bloggers like this: