புதுதில்லி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் அக்டோபர் 6 – 8 தேதிகளில் புதுதில்லியில் உள்ள மத்தியக்குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவனில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு:

திரிபுரா
திரிபுரா மாநிலத்தில், பாஜக-ஐபிஎப்டி கூட்டணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததைத்தொடர்ந்து, அது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகத் தொடுத்துள்ள பாசிசத்தனமான தாக்குதல்கள் தொடர்வதை, மத்தியக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. அங்கு நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களை வேட்புமனு தாக்கல் செய்ய விடாமல் தடுத்ததன் மூலம், பாஜக 96 சதவீத இடங்களில் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் ஆர்எஸ்எஸ் – பாஜகவின் உண்மையான முகமாகும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்தித்தாளாகவும், மாநிலத்திலான விற்பனையில் இரண்டாவதாகவும் விளங்கிய தேசர்கதா நாளிதழின் பதிவு ரத்து செய்யப்பட்டிருப்பது, பத்திரிகை உரிமை மீதான எதேச்சதிகாரத் தாக்குதலாகும். ‘தேசர்கதா’ பதிவை ரத்து செய்திருக்கும் உத்தரவை மோடி அரசு திரும்பப் பெற வேண்டும்

கேரள வெள்ள நிவாரணம்
கேரள மாநிலத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பினைச் சமாளித்திட கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், கேரள மக்களும் ஒன்றுபட்டு நின்று அதனைச் சமாளித்திட்ட விதத்தினை, மத்தியக் குழு வெகுவாகப் பாராட்டுகிறது. கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்விற்காக நடவடிக்கைகளை எடுத்திருப்பதோடு மட்டுமல்லாமல், புதிய கேரளத்தையே மீண்டும் கட்டி எழுப்பிடவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள மக்களும், நாட்டிற்கு வெளியே உள்ள மக்களும் கூட, தங்கள் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று, மிகவும் ஆர்வத்துடன், முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு, நன்கொடை அளித்துள்ளதையும் மத்தியக்குழு வெகுவாகப் பாராட்டுகிறது.

சபரிமலைத் தீர்ப்பு
சபரிமலைக் கோவிலுக்கு, அனைத்து வயதுப் பெண்களும் செல்வதற்கு, உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து, பிறப்பித்துள்ள தீர்ப்பினை மத்தியக் குழு வரவேற்கிறது. இத்தீர்ப்பானது, பெண்களுக்கு சம உரிமைகளை உயர்த்திப்பிடிக்கிறது.

ஆர்எஸ்எஸ்சும், பாஜகவும் இந்தத் தீர்ப்பினை எதிர்த்துக் கொண்டிருக்கின்றன, கேரளாவில் இதற்கு எதிராக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை ஒரு முற்போக்கான நடவடிக்கை என்று வரவேற்றிருக்கிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் கேரளப் பிரிவு மட்டும், தீர்ப்பின் அமலாக்கத்தை எதிர்ப்பதுடன், பாஜக-வுடன் இணைந்து இதனை எதிர்ப்பதும் அதிர்ச்சியளிக்கிறது. இத்தகைய நிலைப்பாட்டின் மூலமாக, காங்கிரஸ் கட்சியானது மதச்சார்பற்ற ஜனநாயக மாண்புகளுக்கும் அரசமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள சம உரிமைகளுக்கும் எதிரான ஆர்எஸ்எஸ்-பாஜக கூட்டணியின், பிரச்சாரத்திற்கு உதவுவதற்குத்தான் வழிவகுக்கிறது.

குஜராத் மாநிலத்தில் இதர மாநிலத்தவர் மீதான தாக்குதல்கள்
குஜராத் மாநிலத்தில் இதர மாநிலத்தவர் மீது, குறிப்பாக பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த உழைப்பாளிகள் மீது, வன்முறை வெறியாட்டங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதை மத்தியக்குழுக் கண்டிக்கிறது. புலம்பெயர்ந்து வந்த ஒரு தொழிலாளியின் குழந்தை, வன்புணர்வுக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதையும் மத்தியக்குழுக் கண்டிக்கிறது. இத்தகைய வன்முறை வெறியாட்டங்கள் காரணமாக ஆயிரக்கணக்கான உழைப்பாளி மக்களும் அவர்தம் குடும்பத்தினரும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக மாநிலத்தைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். குஜராத்தில் ஆட்சி செய்யும் பாஜக அரசாங்கம் இவ்வன்முறையைக் கண்டிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் பதிலாக, பதற்ற நிலைமையை அதிகரித்திடவே அனுமதித்துக் கொண்டிருக்கிறது.

மாநிலத்தில் இயங்கிவரும் தாகூர் சேனா என்னும் அமைப்பு குஜராத்தி அல்லாதவர்களின் பாதுகாப்பின்மையை, தங்களுடைய வெறித்தனமான நடவடிக்கைகள் மூலமாக, எண்ணெய் ஊற்றி வளர்த்துக் கொண்டிருக்கிறது.

அசாம்: குடிமக்கள் தேசியப் பதிவேடு
அசாம் மாநிலத்தில் எந்தவொரு இந்தியப் பிரஜையும் குடிமக்கள் தேசியப் பதிவேட்டிலிருந்து விடுபடக்கூடாது என்கிற நிலைப்பாட்டை மத்தியக்குழு மீண்டும் வலியுறுத்துகிறது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, குடிமக்கள் தேசியப் பதிவேட்டிலிருந்து விடுபட்டுள்ள 40 லட்சம் மக்களின் மேல்முறையீடுகள் மீது தீர்வுகாண வேண்டியிருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, குடிமக்கள் தங்களை மெய்ப்பிப்பதற்காக, அடிப்படையாக அளிக்கப்பட்டுவந்த ஐந்து ஆவணங்களை விலக்கிக் கொள்வதற்கு உச்சநீதிமன்றம் ஏற்பளிப்பு அளித்திருக்கிறது. இதனைத் திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு விலக்கிக்கொண்டிருப்பதானது ஏராளமான மக்களை மிகவும் கடுமையாகப் பாதித்திடும்.

ரபேல் ஊழல்
மிகப்பெரும் ரபேல் ஊழலிலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக மோடி அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டபோதிலும், சமீபத்திய நிகழ்ச்சிப் போக்குகள் அனைத்தும், இந்த ஒப்பந்தமானது, பிரதமரின் கூட்டுக் களவாணியாக இருக்கிற கார்ப்பரேட் முதலாளி ஒருவருக்கு ஆதாயம் அளிப்பதற்காகவே மேற்கொள்ளப்பட்ட ஒன்று என்பது உறுதியாகி இருக்கிறது. நடைமுறையில், நம் நாட்டின் பாதுகாப்பு ஆபத்திற்குள்ளாகி இருக்கிறது. மேலும் இது ராணுவம் மற்றும் பாதுகாப்பு உற்பத்தித் துறையினைத் தனியாரிடம் மிகப்பெரிய அளவில் தாரைவார்த்திடவும் வழிவகுத்திருக்கிறது. இது நாட்டின் பாதுகாப்பு நலன்களுக்கு ஏற்புடையவை அல்ல.

இந்த அரசாங்கம் தேர்தல் பத்திரங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்ததன் மூலமாக அரசியல் ஊழலை நிறுவனமயப்படுத்தியதன் மூலமாக, இத்தகைய கூட்டுக்களவாணி முதலாளித்துவம் மூலமாக ஆளும் கட்சிக்கு நிதி சேர்ப்பதற்கு வழியேற்படுத்தித் தரப்பட்டிருக்கிறது. இதுகுறித்து எவரும் கேள்வி கேட்கவும் முடியாது, எவரும் மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய தேவையும் இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் முகமது யூசுப் தாரிகாமி, அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவிற்கு முதுகெலும்பாக இருந்திடும் மற்றும் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு சுயாட்சியை உத்தரவாதப்படுத்திடும் அரசமைப்புச் சட்டத்தின் 35-ஏ பிரிவினை நீக்குவதற்கு எதிரான மேல்முறையீட்டில் தன்னையும் ஒரு எதிர்மனுதாரராக இணைத்துக்கொண்டிருக்கிறார்.

காஷ்மீரில் இயங்கிடும் தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்றவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளபோதிலும், ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறார். முதல் கட்டத் தேர்தல் ஞாயிறன்று நடந்திருக்கிறது. பல இடங்களில் வன்முறை காரணமாக தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த இருவர் பலியாகி இருக்கின்றனர்.
மோடி அரசாங்கம், இத்தகைய கொந்தளிப்பான சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, நாடு முழுவதும் மதவெறிப் தீயை விசிறிவிட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மத்தியக்குழு அறைகூவல்
ஆகஸ்ட் 9 அன்று தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் சிறைநிரப்பும் போராட்டத்தின்போதும், செப்டம்பர் 5 நாடாளுமன்றம் நோக்கிய பேரணியின்போதும் பிரதிபலித்தபடி, அக்டோபர் 28 – 30 தேதிகளில் நடைபெறவுள்ள விவசாயிகளின் நீண்ட பயணத்திற்கும், நவம்பர் 3 அன்று “எங்கே எங்களுக்கு வேலை” என்ற முழக்கத்துடன் நடைபெறவுள்ள வாலிபர்களின் தில்லி நோக்கிய நீண்ட பயணத்திற்கும், மக்களின் பிரச்சனைகளை வலியுறுத்தி மக்கள் ஒற்றுமை மக்கள் அதிகாரம் இயக்கத்தின் அறைகூவலுக்கும், மத்தியத் தொழிற் சங்கங்கள் அறிவித்துள்ள 2019 ஜனவரி 8,9 வேலைநிறுத்த அறைகூவலுக்கும் மத்தியக்குழு தன் ஆதரவினை தெரிவிக்கிறது.

மோடி அரசாங்கத்தின் ஊழல் மற்றும் கூட்டுக்களவாணி முதலாளித்துவத்தை அம்பலப்படுத்தும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதர இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து, நாடு தழுவிய அளவில் பிரச்சாரத்தை மேற்கொள்ளும். இப்பிரச்சாரத்தின்போது ரபேல் ஊழல், கார்ப்பரேட்டுகளின் கடன் தள்ளுபடி மற்றும் மோடி அரசாங்கத்தால் ஆதரவு அளிக்கப்பட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச்சென்றுள்ள ஊழல்பேர்வழிகள் குறித்தும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.

இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நவம்பரில் நாடு முழுவதும் எதிர்ப்புக் கிளர்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்வதன் மூலமாக, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த துயரத்திலும் இரண்டாம் ஆண்டை அனுசரித்திடும்.
மதவெறிக்கு எதிரான பிரச்சாரத்தையும், இதர இடதுசாரி, ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகளுடன் இணைந்துநின்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேலும் வலுப்படுத்திடும்.

(தமிழில்: ச.வீரமணி)

Leave a Reply

You must be logged in to post a comment.