மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலை இன்று காலையில் சென்னை விமான நிலையத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்ற பேராசிரியர் நிர்மலாதேவி விவகாரத்தில் தமிழ ஆளுநருக்கு தொடர்பு இருப்பதாக புகார் இருந்து வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து நக்கீரன் இதழில் தொடர்ந்து கட்டுரைகள் வந்து கொண்டு இருக்கிறது. இந்த கட்டுரைகளின் வாயிலாக ஆளுநருக்கு எதிராக அவதூறு பரப்புவதாகவும், ஆளுநரின் பணியில் பத்திரிகை தலையிடுவதாகவும் ஆளுநர் மாளிகையில் இருந்து காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த புகாரை தொடர்ந்து  நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால் இன்று சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

இன்று காலை  சென்னை விமான நிலையத்திலிருந்து புனே செல்லவதற்காக  நக்கீரன் கோபால் விமான நிலையம் சென்றார. அங்கு ஏற்கனவே காத்திருந்த காவல்துறையினர் அவரை சுற்றி வளைத்து விமானத்திற்கு செல்ல விடாமல் தடுத்தனர். பின்னர் விசாரிக்க வேண்டும் என கூறி ஒரு மணி நேரம் சென்னை விமான நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனர். அதன் பின்னர் அவரை கைது செய்து சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.  தொடர்ந்து காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆளுநர் ஒருவர் பத்திரிகை மீது புகார் அளித்து பத்திரிகை ஆசிரியர் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.