சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் அரசியல் சுய லாபத்திற்காக பிரச்சனையை உருவாக்குபவர்களுக்கு கேரள அரசு ஒருபோதும் அடிபணியாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதுக்குள்பட்ட பெண்களுக்கு தடை இருந்து வந்தது. இந்நிலையில், அதுதொடர்பான வழக்கில் கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை அமலாக்கும் முயற்சியில் கேரள மாநில அரசு ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையே  ஆர்எஸ்எஸ் மற்றும் சங்பரிவார் அமைப்பினர் இதையே காரணமாக வைத்து எப்படியாவது வன்முறையை உருவாக்கி, அரசிற்கு எதிராக மக்களை திசைதிருப்ப வேண்டும் என்று முயற்சியில் இறங்கியிருக்கிறது. அதற்காக எதையும் செய்யும் அளவிற்கு பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி தீர்ப்பிற்கு எதிராக மறுசீராய்வு செய்யப்போவதில்லை என கேரள அரசு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவில் தேவசம் போர்டும் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என அறிவித்திருந்தது.

இந்நிலையில், சபரிமலை தந்திரி குடும்பம், பந்தள ராஜ குடும்பம், நாயர் சேவை சொசைட்டி (என்எஸ்எஸ்) மற்றும் பல்வேறு ஆர்எஸ்எஸ் தொடர்புடைய பல்வேறு அமைப்புகள் சார்பில் அரசிற்கு எதிராக போராட்டம் தூண்டிவிடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக  தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்டவர்கள்  சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மறுசீராய் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கேரள அரசு அமல்படுத்தும்.  மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது கேரள அரசின் நிலைப்பாட்டிற்கு எதிரானது. சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில், கேரள அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய பொறுப்பு கேரள அரசுக்கு உள்ளது. நம்பிக்கையாளர்களின் உணர்வுகளை எதிர்த்து போராடுவது அரசின் நோக்கம் இல்லை. அவர்களின் நலன் பாதுகாக்கப்படும். அதேநேரம் சபரிமலை பிரச்சினையை சிலர் அரசியலாக்க முனைகின்றனர். அவர்களுக்கு பணிந்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி கேரள அரசின் சார்பில் மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்போவதில்லை. பல்வேறு கலாச்சாரங்கள் கொண்ட கேரளாவின் பன்முகத்தன்மை சீர்குலைக்க சில சக்திகள் முயலுகின்றன. மக்கள் அவர்களுக்கு இடம் தரக்கூடாது.  எத்தனையோ சீர்திருத்த இயக்கங்கள் கேரளாவில் நடந்துள்ளன. பெண்களுக்கு எதிரான பலவித கொடுமைளை எதிர்த்து போராடிய மாநிலம் இது. சமூக சீ்ர்த்திருத்தங்களை நாங்கள் எப்போதுமே ஆதரிக்கிறோம்.

போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல் லாபத்திற்காக பிரச்னைகளை ஏற்படுத்துவோருக்கு அரசு அடிபணியாது. அரசும், அரசியல் கட்சிகளும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பக்கம் உள்ளோம். இதனை எதிர்த்து போராட்டம் நடத்துவது கண்டனத்திற்குரியது என்றார்.

Leave A Reply

%d bloggers like this: