உலகில் முதலீடுகளுக்கான தலைசிறந்த இடமாக இந்தியாவை கடந்த நான்காண்டுகளில் மாற்றிவிட்டோம் என்று, உத்தர்கண்ட் மாநிலத்தின் முதலாவது முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்.

ஜிஎஸ்டி அமலாக்கம் மூலம் இந்தியாவை ஒரே சந்தையாக மாற்றிவிட்டதாகவும், உள்கட்டமைப்பு வசதிகளை பிரம்மாண்டமாக செய்து முடித்துவிட்டதாகவும், இனி 100 புதிய விமான நிலையங்கள் மற்றும் ஹெலிபேடுகள் அமைத்து நகரங்களை இணைக்க வேண்டியதுதான் பாக்கி என்றும் பெருமிதப்பட்டிருக்கிறார். பிரதமரின் உரை வெளியான அதே வேளையில், நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் 348 உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான செலவுகள் ரூ.3 லட்சம் கோடி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், உள்கட்டமைப்பு துறையில் தனியார் முதலீடுகள் பெருமளவு சரிவடையும் சூழலே உள்ளது எனவும் இரண்டு முக்கிய விபரங்கள் வெளியாகியுள்ளன.

நாட்டில் ரூ.150 கோடி மற்றும் அதற்கு மேலான மதிப்பில் மேற்கொள்ளப்படுகிற உள்கட்டமைப்புத் திட்டங்கள் அனைத்தையும் புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் கண்காணிக்கிறது. இதன்படி நாடு முழுவதும் சுமார் 348 உள்கட்டமைப்புத் திட்டங்கள் ரூ.150 கோடி மற்றும் அதற்கு மேலான மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தத் திட்டங்களுக்கான பணிகள் தாமதமாகி வருவதால், இதன் மொத்த மதிப்பில் ரூ.3 லட்சம் கோடி அதிகரிக்கும் என்று புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் கூறியுள்ளது. ரூ.15,72,066.02 கோடி மதிப்பீட்டில் 1,351 திட்டங்கள் நாடு முழுவதும் மேற்கொள்ளப் பட்டுள்ளது. ஆனால் உரிய காலத்தில் அப்பணிகள் முடியாமல், தற்போது இத்திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.18,72,201.51 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது இத்திட்டங்களுக்கான செலவு ரூ.3,00,135.49 கோடி அதிகரித்துள்ளது. இது திட்டமிடப்பட்ட செலவைக் காட்டிலும் 19.09 விழுக்காடு அதிகமாகும். இதில் 348 திட்டங்களுக்கான செலவுகள் மிகவும் அதிகரித்துள்ளது’ என்று தெரியவருகிறது.

அதேபோல, கிரிசில் இன்ஃப்ரா இண்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உள்கட்டமைப்புத்துறையில் தனியார் முதலீடுகள் குறைந்துள்ளன. 2017-18ஆம் ஆண்டில் உள்கட்டமைப்புத் துறையின் மொத்த முதலீடுகளில் தனியார் முதலீடுகளின் அளவு 25 விழுக்காடாகக் குறைந்துள்ளது. 2008ஆம் ஆண்டில் உள்கட்டமைப்புத் துறையில் தனியார் முதலீடுகளின் பங்கு 37 விழுக்காடாக இருந்தது. 2008ஆம் ஆண்டிலிருந்து 2013ஆம் ஆண்டுக்குள் தனியார் முதலீடுகளின் அளவு 600 அடிப்படைப் புள்ளிகள் சரிந்தது. அதற்குப் பிறகு 2017ஆம் ஆண்டு வரையில் மீண்டும் 600 அடிப்படைப் புள்ளிகள் சரிவடைந்துள்ளது. ஒட்டுமொத்தமாகக் கடந்த 10 ஆண்டுகளில் தனியார் முதலீடுகள் 1200 அடிப்படைப்புள்ளிகள் சரிவைக் கண்டுள்ளன” என்று கூறப்பட்டுள்ளது. பாவம் பிரதமர் மோடி, கனவுலகிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

Leave a Reply

You must be logged in to post a comment.