உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில், ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரியாக இருந்த, 38 வயதுடைய, விவேக் திவாரி, உ.பி. காவல்துறையினரால் ரத்தத்தை உறையவைக்கும் விதத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வானது, மக்கள் மத்தியில் கடும் சீற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் போலீசார் நடத்திவரும் “என்கவுண்டர் கொலைகள்” வரிசையில் இதுவும் ஒன்று என்ற போதிலும், இந்த நிகழ்வு, ஊடகங்கள் மூலமாக மிகவும் விரிவான முறையில் மக்களிடையே எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

ஆதித்யநாத் 2017 மார்ச்சில் முதலமைச்சரான பின்னர், கிரிமினல்களைச் சமாளித்திட எவ்வித நடவடிக்கையும் எடுத்திடலாம் என்பது போல் காவல்துறையினருக்குச் சுதந்திரம் அளித்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினரும் தங்கள் என்கவுண்டர் கொலைகளை, “ஆபரேஷன் கிளீன்” என்று பெயரிட்டு, படிப்படியாக மேற்கொண்டனர்.  இவ்வாறு இவர்கள் 2017 மார்ச்சுக்குப் பின்னர் 1,500 என்கவுண்டர்களை நடத்தி, 66 “கிரிமினல்களை” கொன்றுள்ளனர், 700க்கும் மேற்பட்டோரைக் காயங்களுக்கு உட்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு நடைபெற்ற கொலைகள் அனைத்துமே, என்கவுண்டர்கள் என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன. பல சமயங்களில், விசாரணைக் கைதிகளை, அல்லது,  கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டிருப்பவர்களை, அவர்களுடைய வீடுகளிலிருந்து இழுத்துச் சென்று, என்கவுண்டர்கள் நடத்தி, சுட்டுக் கொன்றுள்ளனர்.  இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தார்களில் சிலர், எங்ஙனம் தங்கள் மகன்கள் அல்லது கணவர்கள் காவல்துறையினரால் வீடுகளிலிருந்து இழுத்துச் செல்லப்பட்டார்கள் என்று சாட்சியம் அளித்திருக்கிறார்கள்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ்  நாளிதழ் மேற்கொண்ட ஓர் ஆய்வின்படி, என்கவுண்டர்கள் சம்பந்தமாகப் பதிவு செய்யப்பட்ட 20 முதல் தகவல் அறிக்கைகளில், (இவற்றின்படி 21 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்), காவல்துறையினர் தங்கள் என்கவுண்டர் நடவடிக்கைகளை விவரிக்கும்போது,  ஒரே மாதிரியான வாசகங்களைப் பயன்படுத்தி இருப்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது.

என்கவுண்டர் கொலைகள் செய்திடும் காவல்துறையினருக்கு, மாநில முதல்வர் முழுமையாக ஆதரவு அளித்துவந்ததால், அவர்கள் மிகவும் தைரியம் பெற்றிருந்தனர். முதல்வர் ஆதித்யநாத், சட்டமன்றத்திலேயே என்கவுண்டர்களை நியாயப்படுத்திப் பேசியதுடன், எதிர்க்கட்சியினர் கிரிமினல்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் குற்றஞ்சாட்டி இருந்தார். முந்தைய அரசாங்கங்களில் குண்டர்கள் ராஜ்ஜியம்தான் நடந்து கொண்டிருந்ததாகவும், காவல்துறையினரின் நடவடிக்கை என்பது குற்றங்களை ஒழிப்பதைக் குறியாகக் கொண்டிருக்கிறது என்றும் பாஜக மாநில அரசாங்கம் திரும்பத்திரும்ப சொல்லி வந்தது.

இவ்வாறாக, உத்தரப்பிரதேச காவல்துறை, எவ்விதமான சட்டத்திற்கும் உட்பட்டு நடக்காததுடன்,  கிரிமினல்மயமாகிவிட்டது.  மாநிலத்தின் சில பகுதிகளில், போலீஸ் அதிகாரிகள், என்கவுண்டர் கொலைகளைச் செய்வதற்காக, பணத்திற்கு, “ஒப்பந்தக் கொலைகாரர்களை” அமர்த்திடக்கூடத் தயங்கிடவில்லை. இந்த ஆண்டு ஆகஸ்டில் வெளியான,  இந்தியா டுடே ஏட்டில் வெளிவந்த புலனாய்வு செய்தி ஒன்றின்படி, ஆக்ரா மண்டலத்தில் உள்ள ஒரு காவல்நிலையத்தின் மூன்றுு காவல் உதவி ஆய்வாளர்கள், அப்பாவி மக்கள் எவரை வேண்டுமானாலும் கொல்வதற்கு 6 முதல் 8 லட்சம் ரூபாய் வரை கொடுத்து ஒப்பந்த அடிப்படையில் கொலைகாரர்களை நியமனம் செய்து வந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இவ்வாறு ஊடகம் காவல்துறையில் நடந்துவந்ததை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தபின்னர், இந்த மூன்ற காவல் உதவி ஆய்வாளர்களும் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வாறு என்கவுண்டர்களை நடத்திடும் காவல்துறை அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு என்பது வழங்கப்பட்டு வந்ததும் அனைவரும் அறிந்த ஒன்றுதான். பல வழக்குகளில், என்கவுண்டர்கள் முடிந்தவுடனேயே, அதனைச் செய்திட்ட காவல்துறை அதிகாரிக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு, கவுரவிக்கப்பட்டதைப் பார்க்க முடிந்தது.

உத்தரப்பிரதேச காவல்துறையினரிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையமோ அல்லது உச்சநீதிமன்றமோ எவ்வளவுதான் வினாக்களைத் தொடுத்தபோதிலும், உ.பி. போலீஸ் அதற்கெல்லாம் அசைந்துகொடுக்கவே இல்லை. சமீபத்தில், செப்டம்பர் 20 அன்று,  அலிகார் அருகில் இரு நபர்களை என்கவுண்டர் மூலம் கொல்லப்போகிறோம் என்று கூறி,  ஊடகவியலாளர்களை வரவழைத்து அவர்கள் முன்னிலையிலேயே போலீசார், அவர்கள் இருவரையும் சுட்டுக்கொன்றுள்ளனர். முஸ்தகீம் மற்றும் நௌஷத் என்பது அவர்களின் பெயர்களாகும்.

விவேக் திவாரி கொல்லப்பட்ட சம்பவத்தைப் பொறுத்தவரையில், உ.பி. அரசாங்கம், கொலையைக் கண்டித்திட உடனடியாக முன்வந்திருப்பதுடன், விவேக் திவாரியின் குடும்பத்தாரை ஆதித்யநாத்தே நேரில் சென்று சந்தித்து, இதற்கான இழப்பீடு, வீடு மற்றும் வேலை அளிப்பதாக உறுதி அளித்திருக்கிறார்.  போலீசாரின் அட்டூழியத்திற்குப் பலியான நபர், ஓர் உயர்சாதியைச் சேர்ந்தவர் என்பதும், பன்னாட்டு நிறுவனத்தின் ஓர்  அதிகாரி என்பதும்தான் அரசாங்கத்தின் உடனடியான நடவடிக்கைக்குக் காரணமாகும். ஆயினும், உ.பி.யில் நடைபெற்ற என்கவுண்டர்களில் பலியானவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் முஸ்லீம்கள், தலித்துகள் மற்றும் ஏழை மக்களாவார்கள். கொல்லப்பட்டவர்களில் கணிசமானவர்கள், முஸ்லீம்களாவார்கள். ஒரு மதிப்பீட்டின்படி கொல்லப்பட்டவர்களில் 24 பேர் முஸ்லீம்கள். உ.பி. காவல்துறை எந்த  அளவிற்கு இந்துத்துவா மதவெறி அடிப்படையில் நிறுவனமயப் படுத்தப்பட்டிருக்கிறது என்பதையே இது தோலுரித்துக்காட்டுகிறது.

உ.பி.காவல்துறையினர் எவரை வேண்டுமானாலும் “கொல்வதற்கு உரிமம் வழங்கப்பட்டிருப்பது” உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டியது அவசியமாகும். ஏற்கனவே, சில என்கவுண்டர் கொலைகள் குறித்து புலன்விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. அவை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு, குற்றம் புரிந்த கயவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். உச்சநீதிமன்றம், என்கவுண்டர் கொலைகள் சம்பந்தமாக தங்கள் முன் வந்துள்ள வழக்கில், தலையிட்டு,  அரசே முன்னின்று நடத்தும் இத்தகைய கொலைகளைத் தடுத்திட முன்வர வேண்டும்.

தமிழில்: ச. வீரமணி

Leave a Reply

You must be logged in to post a comment.