ஈரோடு,
ஆட்சியாளர்களின் நிர்பந்தத்திற்கு ஏற்ப வளைந்து நெளிந்து வரும் தீர்ப்புகளை பார்க்கையில் அதிகார வர்க்கத்தின் ஜனநாயகத்தில் நீதித்துறையும் சிக்கிக்கொண்டுள்ளதோ என்கிற ஐயம் ஏற்படுவதாக தமுஎகச பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சன்யா வேதனை தெரிவித்தார்.

ஜனநாயக உரிமைகளை பறிப்பதை எதிர்த்தும், கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான சிறப்பு மாநாடு ஈரோடு பெரியார் மன்றத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ப.மாரிமுத்து தலைமை வகித்தார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பா.லலிதா வரவேற்றார். முன்னதாக இக்கருத்தரங்கில் சிஐடியு மாநில துணைத் தலைவர் எஸ்.சுப்ரமணியன் தீர்மானத்தை முன்மொழிந்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ஏ.எம்.முனுசாமி தீர்மானத்தை வழிமொழிந்தார்.

இக்கருத்தரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சன்யா சிறப்புரையாற்றுகையில், இந்தியாவில் இன்று பத்திரிகையாளர்களை மிரட்டுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதுவும் ஆளுங்கட்சியினரால் அதிகமாக மிரட்டப்பட்டு வருகின்றனர். இவர்களின் மிரட்டலுக்கு பயந்துபோன ஊடகங்கள் வெகுமதியை விளம்பரத்தின் மூலம் பெற்றுக்கொண்டு உண்மைகளை மறைக்கும் நிலைக்கு ஆளாகிறார்கள். இதனை பகிரங்கமாக கூறும் நிலை தற்போது உருவாகியுள்ளது. ஜனநாயகத்தையும், உரிமைகளையும் ஊடகத்தை வைத்து விரட்டப்படுகிறது. அரசுதுறைக்கு சாதகமாக செய்திகளை மட்டுமே வெளியிட வேண்டும் என நிர்பந்திக்கப்படுகிறது.

இதற்கென ஒரு பெருந்தொகை கொடுக்கப்படுகிறது. இதில் பல பிரபல நிறுவனங்கள் பட்டியல் அம்பலத்திற்கு வந்துள்ளது. கேலிச்சித்திரம், கட்டுரைகள் போன்றவற்றை வெளியிடுவதும், மறுபுறம் சமூக வலைதளங்களான வாட்ஸ் அப், பேஸ் புக் போன்ற பலவற்றில் உண்மையைப் பொய்யாகவும், ஒரு பொய்யை உண்மையாகவும் மாற்ற முடிகிறது. இடதுசாரி இயக்கங்கள் நடத்தக்கூடிய பத்திரிகைகளில் மட்டுமே உண்மை செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

மக்களின் கடைசி நம்பிக்கையாக உள்ள நீதிமன்றத்தில் கூட நியாயம்மறுக்கப்படுகிறது. உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள், நீதிமன்றத்தின் முன் எதுவும் பேசமுடியாது வெளியே வந்து பேசுகிறேன் என கூறுகின்றனர். பல நேரங்களில் அரசியல் தலைவர்களை காவல்துறையும், ஆளுங் கட்சியினரும் மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர். அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆளுங்கட்சி மூலமாகவே ஏழைகளை உருவாக்குகிறார்கள். சாதகமான நீதிபதிகள் இருக்கும் போது மட்டுமே 8 வழிச்சாலை, நீட் தேர்வு என முக்கிய அறிவிப்புகளை நீதித்துறை வளைந்து நெளிந்து மாறிக்கொள்கிறது. அவர்களே அவர்கள் கோவிலுக்கு தீ வைக்கிறார்கள். இதன்பிறகு இஸ்லாமியர்கள் தீவைத்து விட்டதாக பிரச்சனையை கிளப்புகிறார்கள். இதன் உண்மைத்தன்மையை நீதித்துறையும் கண்டுகொள்ளாமல் தீர்ப்பை வழங்குகிறது. ஆட்சியாளர்களின் ஆட்டத்திற்கேற்ப தேவையான தீர்ப்பு வழங்கக் கூடியதாக உள்ளது. இது பல்வேறு விதமான இன்னல்களுக்கு ஆளாகி ஜனநாயகத்தில் நீதித்துறையும் சிக்கிக் கொண்டுள்ளது.

நாடாளுமன்றம், சட்டமன்றத்தை உடனே கூட்ட வேண்டும் என்று நினைக்கிறார்கள். பாஜக சார்பில் வெளியிடப்படும் வேட்பாளர் பட்டியலில் ஒருவர் கூட இஸ்லாமியர் இல்லை. அதிகாரத்தைக் கைப்பற்ற பெருன்பான்மையான இஸ்லாமியர்கள் இருக்கக்கூடிய பகுதிகளில் கூடஇஸ்லாமிய வேட்பாளர்கள் இல்லாமல் பல பகுதிகளை கைப்பற்றியுள்ளனர். பாஜக இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்காவைகூட கைப்பற்றி விடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஓட்டு இயந்திரத்தின் மூலமாக பல்வேறு மோசடிகளை செய்து கொண்டு இருக்கிறார்கள். நாடாளுமன்றம் என்பது மறைமுகமாகவும், சாத்தியமற்ற இடங்களில் நேரடியாகவும் அறிவிக்கப்பட்ட மாறியுள்ளது. ஆகவே, மத்தியில் இருக்கக்கூடிய அரசு சிறுபான்மை மக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எவ்வளவு விரோத போக்காக இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. இந்நிலையில் இருந்து நாம் ஜனநாயகத்தையும், கருத்துரிமையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது என உரையாற்றினார்.

முன்னதாக இக்கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், மத்திய, மாநில அரசுகள் ஜனநாயக உரிமைகள், கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையில், கடும் தாக்குதல் நடத்துகிறது. ஆட்சி மற்றும் ஆட்சியாளர்களின் தவறுகளை விமர்சித்தால் அல்லது போராடினால் தாக்கப்படுகிறார்கள். வழக்கு, கைது, வருமானவரித்துறை சோதனை என நடத்தப்படுகிறது. இப்போக்கை கைவிட வேண்டும். அரசியல் கட்சி, தொழிற்சங்கம், வர்த்தகர்களின் போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. அல்லது கைது செய்யப்படுகிறார்கள். விளை நிலங்களில் சாலை அமைத்தல், மின் கோபுரங்கள் அமைத்தல், பைப்லைன் அமைத்தல், மீன்தேன் எடுத்தல், நியூட்ரினோ திட்டங்களை செயல்படுத்துதல் என விவசாயத்துக்கு எதிரான செயல்பாடுகளை செய்து வருகின்றனர். இவற்றை நிறுத்திக் கொண்டு, மாற்று பாதையில் திட்டங்களை செயல்படுத்த முன்வர வேண்டும்.நிலங்களை இழப்போருக்கு உரிய இழப்பீடு வழங்குவதில்லை என்பதுடன், கடுமையாக தண்டிக்கப்படுகிறார்கள். இப்போக்கை கைவிட வேண்டும் எனக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.சண்முகவள்ளி நன்றி கூறினார். இதில் திரளானோர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.