சத்தியமங்கலம் :

சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதையில் 26 ஆவது வளைவில் திரும்பும்போது பனிமூட்டம் காரணமாக மைசூரில் இருந்து வந்த  தனியார் பேருந்து பக்கவாட்டு சுவரை உடைத்துக் கொண்டு 200 அடி பள்ளத்தில் விழுந்தது. இதில்  ஈரோட்டைச் சேர்ந்த முத்து, துரைசாமி ஆகியோர்  உயிரிழந்தனர். மேலும், 22 பேர் காயமடைந்தனர். மேலும், காணாமல்போன இருவரை தேடும் பணி நடந்து வருகிறது.

மைசூரில் இருந்து புறப்பட்ட தனியார் பயணிகள் பேருந்து வெள்ளிக்கிழமை இரவு தாளவாடியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு திம்பம் வழியாக சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநர் கெளதம் ஓட்டினார் மற்றும் நடத்துனர் ராஜூ உடன் வந்தார். பேருந்தில் மொத்தமாக 26 பேர் இருந்தனர். அதில் பெண்கள் 3 பேர்  பயணித்தனர். கடந்த சில நாள்களாக மழை பெய்ததால் திம்பம் மலைப்பாதையில் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. எதிரே  செல்லும் வாகனங்கள் தெரியாதபடி பனிமூட்டமாக இருந்தது. பேருந்து 26 ஆவது வளைவில் திரும்பும்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 200 அடி பள்ளத்தில் விழுந்தது.

ஒவ்வொரு மரமாக உடைத்துக் கொண்டு சென்ற பேருந்து 3 வது மரத்தின்மீது மோதி நின்றது. விபத்தில் சிக்கிய பயணிகள் காப்பாற்றும் படி அபாயக்குரல் எழுப்பினர். அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தீயணைப்பு மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அதிரடிப்படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். ராட்சத விளக்குகள் போட்டு பேருந்தில் சிக்கியவர்களை கயிறு கட்டி மீட்கும் பணி நடைபெற்றது. 3 மணிநேர போராட்டத்திற்கு பின் பயணிகள் இருவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதில் 22 பேர் மீட்கப்பட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சத்தியமங்கலம்,பவானிசாகர், கடம்பூர், புன்செய் புளியம்பட்டி மற்றும் தனியார் ஆம்புலனஸ்  என 10க்கு மேற்பட்ட ஆம்புலன்ஸ் மூலம்  விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சத்தியமங்கலம் அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்ட 22  பேரில் 20  பேர் கோவை மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.