Infrastructure, Leasing and Financial Services உள் கட்டமைப்பு ஒப்பந்தம் மற்றும் நிதி சேவை என்ற நிறுவனம் 1987ல் பொதுத்துறையாக உருவாக்கப்பட்டது

.பின்னர் இந்த நிறுவனம் ஜப்பான் நாட்டு ஒரிக்ஸ், அபுதாபி இன்வெஸ்ட் மென்ட் நமது நாட்டு எல்.ஐ.சி, தனியார்துறை நிறுவனங்கள், இன்ஃபராஸ்டரக்ச்சர் நிறுவன ஊழியர்களின் பென்ஷன் நிதி, வங்கி முதலீடுகளைக் கொண்ட மாபெரும் முப்பெரும் கூட்டு ( பொதுத்துறை, தனியார், அந்நியமுதலீடு) நிறுவனமாக உயர்ந்தது.
. இன்று 256 நிறுவனங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் நிர்வகிக்கும் பகாசூர நிறுவனமாக உயர்ந்து இந்திய மண்ணில் நவீன தொழில்கள் வேகமாக வளர கட்டமைப்பு வசதிகளை செய்தசாதனைப் பட்டியலை வெளியிட்டு நெஞ்சுயர்த்தி நிற்கிறது.. எட்டுவழி- குகைவழி- விமான நிலையம் அதி வேகரயில் திட்டம்- பலவிதமான மின்நிலையங்கள் போன்ற பெருமளவு நிதி தேவைப்படும் கட்டமைப்பு வசதிகளை செய்து முடிக்க தேவைப்படும் தொழில் நுட்ப ஆலோசனைகளும் நிதியும் தொழில் முனைவோருக்கு ஏற்பாடு செய்வதில் வரலாறு படைக்கிறது.
கடந்த 30 ஆண்டுகளில் அதன் சாதனைகள் ஏராளம். 2017ல் பிரதமர் மோடி திறந்துவைத்த ஜம்முவையும் ஶ்ரீநகரையும் இணைக்கும் 9 கிலோமீட்டர் மலையை குடைந்த குகை வழி இதன் சாதனைகளில் ஒன்று.
சிறந்த நிர்வாகம் என்ற வகையில் பணக்கார நாடுகளின் பங்குசந்தைகளில் மூன்று “ஏ” சான்றிதழை பெற்றது. பிற பன்னாட்டு நிறுவனங்களைவிட பங்குகளுக்கு கூடுதல் ஈவு கொடுத்ததால் பங்குகளில் டாலர் முதலீடு வந்து நமது அந்நிய செலவாணி இருப்பு வற்றாமல் இருக்க உதவியது.
திறமையானவர்களை ஈர்ப்பதற்கு கொழுத்த சம்பளம் கொடுத்தது. முதலீடு செய்தவர்களுக்கு நல்ல லாபம் கிடைத்தது. நிர்வாகிகளும் கொழுத்த சம்பளம் பெற்றனர்.
இந்த சாதனைகள் 2018 அக்டோபரில் வரலாறாகி அந்த பகாசூர நிறுவனம் இன்று 91ஆயிரம் கோடி திரண்ட கடனும் நடப்பாண்டில் 16500 கோடி கடனும் ஆக மொத்தம் ஒருலட்சத்தி ஏழாயிரத்து ஐநூறு கோடிகடனை அடைக்க முடியாமல் குடை சாய்ந்து கிடக்கிறது..
மோடி அரசு வேறு வழி இல்லாமல் இந்த நிறுவனத்தை அரசுடமையாக்கி புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் மக்கள் வரிப்பணத்தை வைத்து தூக்கி நிறுத்த முயல்கிறது.
இதில் முதலீடு செய்த அந்நிய, இந்திய,தனியார் எவருக்கும் எந்த நட்டமும் இல்லை அவர்கள் போட்ட பங்கிற்கு ஈவாக (டிவைடென்ட்) சம்பாதித்துவிட்டனர். ஊழியர்களின் பென்ஷன் நிதியும்(ஏன்எனில் இதன் பங்கிற்கு கிடைக்கும் ஈவு மறுமுதலீடாகிவிடும்) கடன்மட்டும் கொடுத்த நிதி நிறுவனங்களும் (இதில் எத்தனைபோலியானவையோ) மாட்டிக்கொண்டன.

நெருங்கி ஆராய்ந்தால் மேலை நாட்டு முதலாளித்துவ உற்பத்தி முறை அதாவது தனியார்மயமும் தாராளமயமும் இந்தியாவிற்கு பொருந்தாது என்பதைக் காணமுடியும் பலப்பல ரகமான மல்லையாக்களும் மோடிகளும் எல்லா இடங்களிலும் ஒட்டுண்ணியாக நிறைந்து கிடப்பதை காணலாம்.
இன்றைய இந்தியாவில் நேர்மையான தொழிலை நேசிக்கிற பண்பாடுள்ள தனிநபர்களின் கைகளுக்கு தொழில் நிறுவனங்கள் போவதில்லை. மல்லையாக்கள் – மோடிகள் போல் அவர்களே ஒரு நிறுவனங்களை உருவாக்கி சுரண்டித்தின்றுவிட்டு நிறுவனத்தை எலும்பு கூடாக்கி ஓடிவிடும் நபர்களாக இருக்கினறனர்.
இன்று தனியார் மின் நிலையங்கள் கட்டமைப்பிற்கு முதலீட்டிற்கு பங்களிக்காமலே போட்டதாக பொய் சொல்லி வங்கி கடனை வாங்கி நட்டக்கணக்கெழுதி கடனை அடைக்காமல் ஏமாற்றுகின்றனர் ( மின்ட் மார்ச் 5, 2018 ) அல்லது லாபம் சம்பாதிக்கும் நிறுவனங்களுக்குள் டார்வின் குறிப்பிடும் இச்நியுமானிட் ரக வண்டுகள்போல் புகுந்து நிறுவனத்தை எலும்பு கூடாக்கிவிடும் நபர்களாக உள்ளனர் (இச்நியுமானிட் வண்டு மிருகங்கள் புல் உண்ணும் பொழுது முட்டைகளாக வயிற்றில் புகுந்து புழுக்களாகி அந்த மிருகம் உயிர் வாழ அவசிமான உறுப்புக்களைத் தவிர மற்றவற்றை முதலில் தின்றுவிடும். மிருகம் செத்தவுடன் வண்டாக வெளியேறி தன் சந்ததி விருத்திக்காக புல்லில் முட்டைகளை இடும்)
நாட்டை ஆளுவோர் முதலாளிகளின் பிரதிநிதிகளாக இருக்கிறவரை இநத ஒட்டுண்ணி தொழில் முனைவோர்கள் எண்ணிக்கை பெருகுவதையும். மக்களின் வரிப்பணம் தனியார் சொத்தாக குவிவதையும் தடுக்க இயலாது.

–  Meenatchi Sundaram

Leave a Reply

You must be logged in to post a comment.