தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருகே திருமலைச்சமுத்திரத்தில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள நிலத்தை நீதிமன்ற உத்தரவுப்படி மீட்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து கட்சியின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தஞ்சை மாவட்டம் வல்லத்தை அடுத்து திருமலைச்சமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் தஞ்சை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது சாஸ்த்ரா பல்கலைக்கழகம். கடந்த 30 ஆண்டுகளாக இப்பல்கலைக்கழகம் தமிழக அரசு திறந்தவெளிச் சிறை சாலைக்காக ஒதுக்கிய 58.17 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து 28 அடுக்குமாடி கட்டிடங்களை கட்டி வைத்துள்ளது.

அரசு நிலத்தை அபகரித்துள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகம், அவ்வப்போது மாறிவரும் ஆட்சியாளர்களின் அனுசரணையோடு இச்செயலை செய்துள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம், அரசு நிலம் ஆக்கிரமிப்பை கண்டித்ததுடன் உடனடியாக அப்புறப்படுத்தவும் ஆணை பிறப்பித்துள்ளது.

நீதிமன்ற ஆணையையும் அமல்படுத்த மறுத்து, அடம்பிடிக்கும் பல்கலைக்கழக நிர்வாகம் மீண்டும், மீண்டும் தனது ஆக்கிரமிப்பை உறுதிப்படுத்திட குறுக்கு வழியில் முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிகிறது. அரசு நிர்வாகத்தை தன்வயப்படுத்த, சட்டத்திற்கு புறம்பாக தமிழக கவர்னரை சந்திக்கிறது. மத்திய பா.ஜ.க அரசில் தனக்கிருக்கும் செல்வாக்கை பயன்படுத்துகிறது. தமிழக அரசோ நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த துரித நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிக்கிறது. உயர்நீதிமன்றம் கெடு விதித்தும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி இதுவரை நடைபெறவில்லை.

நீதிமன்ற தீர்ப்புக்கு பின் அப்பகுதி பொதுமக்கள் ஆக்கிரமிப்பு நிலத்தை அரசு உடன் கையகப்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் அரசு நில ஆக்கிரமிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டக் குழு வன்மையாக கண்டிக்கிறது. நீதிமன்றத் தீர்ப்பின் படி கால தாமதமின்றி ஆக்கிரமித்துள்ள அரசு நிலத்தை மாவட்ட நிர்வாகம் உடனே கைப்பற்றிட வேண்டும். இல்லை என்றால் ஆக்கிரமிப்பை அகற்றிட பொதுமக்கள் திரண்டு எழுவார்கள்”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அத்துமீறி ஆக்கிரமிப்பு
இதுகுறித்து தஞ்சை ஒன்றியச் செயலாளர் எம்.மாலதி விடுத்துள்ள அறிக்கையில், “இவ்வாக்கிரமிப்பு சட்டவிரோதமானது. தற்போது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை கண்டித்ததுடன், தமிழக அரசு உடனடியாக 30.9.18-க்குள் ஆக்கிரமிப்பை அகற்றி நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என ஆணையிட்டுள்ளது. ஆனால் இன்று வரை அரசு நிலத்தை, காலி செய்யாமல், நீதிமன்ற ஆணையை அவமதிக்கும் வகையில், சாஸ்த்ரா கல்வி நிறுவனம் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்திக் கொண்டு ஆளுநரை சந்திக்கிறது. சட்டத்தையும் மக்களையும் ஏமாற்றி, அரசு நிலத்தை அபகரிக்கும் முயற்சியை தொடர்கிறது.

மக்கள் உணர்வுகளை, நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத சாஸ்த்ரா கல்வி நிறுவனத்தை வன்மையாக கண்டிப்பதுடன், தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக அரசு நிலத்தை மீட்க வேண்டும். காலம் தாழ்த்தினால் மக்களே நிலத்தை கையகப்படுத்துவார்கள். இந்த, மக்கள் போராட்டத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையேற்று நடத்தும்”.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.