ஈரோடு,
கடம்பூர் மலையில் பிளாஸ்டிக் பயன்பாடு தடுக்கப்பட்டு ஒழிக்கப்பட வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளார்.

சத்தியமங்கலம் தாலுகா கடம்பூர் மலைப்பகுதியில் கடந்த மாதம் முழுவதும் கனமழை பெய்தது. இதனால் மல்லியம்மன் துர்கம் மலைபகுதியில் இருந்து மழை வெள்ளம் கடம்பூர் செல்லும் சாலையில் பல்வேறு இடங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் மலைப்பகுதி முழுவதும் குளிர்ந்த காலநிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் தற்போது அதிகளவில் வந்து செல்கின்றனர். குறிப்பாக, கே.என்.பாளையம், சத்தியமங்கலம், கோபி, ஈரோடு போன்ற மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் கடம்பூர் இயற்கை அழகை ரசிப்பதற்காக வந்து செல்கிறார்கள். அதேநேரம், இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள், பிளாஸ்டிக் கவர்களில் உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை எடுத்து வந்து அதனை வனப்பகுதியில் வீசி செல்கின்றனர். இதனை தடுக்க சத்தியமங்கலம் வனத்துறை சார்பிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் வனத்தையொட்டிய பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் குவிந்து வருகின்றன. ஆகவே, வனப்பகுதியில் பிளாஸ்டிக் பொருள்களை கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும், இந்த வனப்பகுதியில் யானை, கரடி, பன்றி, காட்டெருமைகள் போன்ற விலங்குகள் ஏராளமானவைகள் காணப்படுகிறது. இச்சூழலில் சுற்றுலா பயணிகள் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு அடர்ந்த காட்டிற்குள் ஆபத்தான நிலையில் சென்று வருகிறார்கள். இதேபோல் புகைப்படம் எடுப்பதற்காக அருவியின் மேல் பகுதியில் ஏறும் நிலையும் காணப்படுகிறது. ஆகவே, இதனை தடுத்திடவும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.  இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், சுற்றுலா பயணிகளுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும், வனப்பகுதியில் போடப்பட்டுள்ள பிளாஸ்டிக் குப்பைகளை தொண்டு நிறுவனங்கள் மற்றும் வனத்துறை ஊழியர்களை வைத்து எடுத்து சத்தி நகராட்சி குப்பை கிடங்கிற்கு அனுப்பப்படுகிறது. இதேபோல் வனப்பகுதியையொட்டி வாகனத்தை நிறுத்தி அத்துமீறி வனத்திற்குள் செல்லும் நபர்களை எச்சரித்து அனுப்பி வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.