ஈரோடு
ஈரோட்டில் வியாழக்கிழமை கூடிய மாட்டுச்சந்தையில் பசு, எருமை கறவை மாடுகள், வளர்ப்புக் கன்றுக் குட்டிகள் ஆகியவை ரூ.2.5 கோடிக்கு விற்பனையாகின.

ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையத்தில் காவிரிக் கரை சோதனைச்சாவடி அருகே வாரந்தோறும் புதன், வியாழன் ஆகிய இரு நாட்களில் மாட்டுச் சந்தை நடைபெறுகிறது. அதில், புதனன்று வளர்ப்பு மாடுகளும், வியாழனன்று கறவைப் பசு மாடுகளும், எருமை மாடுகள், வளர்ப்பு கன்றுக்குட்டிகளும் விற்பனை செய்யப்படுகின்றன. தென்னிந்தியாவின் மிகப்பெரிய இச்சந்தைக்கு, ஈரோடு மட்டுமின்றி நாமக்கல், சேலம், திருப்பூர், திண்டுக்கல், கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் விற்பனைக்காகவும் வாங்கிச் செல்வதற்காகவும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இங்கு கொண்டுவரப்படும் மாடுகள் தரமானதாக உள்ள காரணத்தால் அவற்றை கொள்முதல் செய்ய கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் வருகின்றனர். வாரந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், வியாழனன்று நடைபெற்றசந்தைக்கு அனைத்து மாநில வியாபாரிகளும், மாடுகள் வரத்தும் கணிசமாகவே இருந்தது.

இதுகுறித்து, மாட்டுச்சந்தை மேலாளர் ஆர்.முருகன் கூறுகையில், தென் மாநிலங்களைச் சார்ந்த கேரளா, கர்நாடகா மாநில வியாபாரிகள் இந்த வாரம் வரவில்லை. பிற மாநில வியாபாரிகள் வழக்கம் போல் வந்திருந்தனர். இந்த வாரச் சந்தையில் 350 பசு மாடுகள், 300 எருமைகள், 200 வளர்ப்புக் கன்றுகள் விற்பனை செய்யப்பட்டன. இதில், பசுமாடு ரூ.16 ஆயிரம் முதல் ரூ.34 ஆயிரம் வரையிலும், எருமை மாடு ரூ.18 ஆயிரம் முதல் ரூ.36 ஆயிரம் வரையிலும், வளர்ப்பு கன்றுகள் ரூ. 2 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரையிலும் விற்பனை ஆகியுள்ளது. மொத்தத்தில் சுமார் ரூ.2.5கோடிக்கு வணிகம் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: