திண்டுக்கல்: அண்ணா, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்களையடுத்து அனைத்து தண்டனை கைதிகளை விடுவிப்பது போல இஸ்லாமிய தண்டனை மற்றும் விசாரணை கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்று திண்டுக்கல் செய்தியாளர்கள் கூட்டத்தில் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். அது பற்றிய விவரம் வருமாறு.

உச்சநீதிமன்றmம் விசாரணைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏராளமான விசாரணைக் கைதிகள் விடுதலை செய்யாமல் சிறையில் அடைத்து உள்ளனர் தமிழக சிறைகளில் அப்பாவி ஏழைகள் ஆதரவற்ற பலர் விசாரணை கைதிகளாக உள்ளனர். அதே போல் இஸ்லாமிய சகோதரர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். அண்ணா நூற்றாண்டு விழாவையடுத்து பலருக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்கிறது அரசு. அதே போல் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையடுத்தும் பலருக்கு பொதுமன்னிப்பு வழங்கி அரசு விடுதலை செய்கிறது. 11 ஆண்டு சிறையிருந்த ஆயுள் தண்டனை கைதிகளைக் கூட விடுவிக்கிறார்கள். கொடூரமான குற்றங்களைச் செய்தவர்களைக் கூட விடுதலை செய்துள்ளது இந்த அரசு. இவர்களை விடுவிக்கக்கூடாது என்று நீதிமன்றம் சொன்னவர்களைக்கூட இந்த அரசு விடுவித்துள்ளது. இந்த மாதிரியான பொது மன்னிப்பு ஏன் இஸ்லாமியர்களுக்கு மட்டும் பொருந்துவதில்லை. இந்துக்களுக்கு இருக்கிற பொது மன்னிப்பு என்ற அளவுகோல் இஸ்லாமிய தண்டனை கைதிகளுக்கும் பொருந்த வேண்டும் அல்லவா? இதுவரை ஒரு இஸ்லாமிய தண்டனை கைதிகள் கூட விடுதலை செய்யப்படவில்லை. இருவரை உயர்நீதிமன்றமே விடுதலை செய்ய வேண்டும் என்று சொல்லியுள்ளது. ஆனால் இந்த அரசு ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி யாரையாவது விட்டு நீதிபதியிடம் மனுகொடுக்க வைத்து இவரை விடுதலை செய்தால் சட்டம் ஒழுங்கு உருவாகும் என்ற முகாந்திரத்தை உருவாக்கி விடுவிக்க மறுக்கிறது. இது ஒரு பாரபட்சமான அணுகுமுறையாகும். இஸ்லாமிய விசாரணை கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும். தண்டனை கைதிகளாக உள்ள இஸ்லாமியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும்.

அரசாங்கமே உயர்நீதிமன்றம்
தமிழகத்தில் எந்த போராட்டத்திற்கும் அனுமதியில்லை. எத்தனை பிரச்சனைக்கு நாங்கள் உயர்நீதிமன்றம் செல்ல முடியும். எங்கள் கட்சியின் சார்பாக இரண்டு பிரச்சனைக்கு உயர்நீதிமன்றம் சென்றிருக்கிறோம். ஒரு ஆர்ப்பாட்டம் என்றால் உயர்நீதிமன்றம் போக வேண்டும். உண்ணாவிரதம் என்றால் உயர்நீதிமன்றம் போக வேண்டும். அரசாங்கமே உயர்நீதிமன்றம் தான் என்றாகிவிடும் போலிருக்கு. இது என்ன ஜனநாயகம். 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக நடைபயணம் செல்ல 3 மாதமாக அனுமதி கேட்கிறோம். தமிழக அரசு தரவில்லை. இப்போது நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறோம். 10ம் தேதி விசாரணை நடைபெறுகிறது. திமுக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி தரவில்லை. இதனையடுத்து திமுக உயர்நீதிமன்றம் சென்று 102 இடத்திற்கு அனுமதி பெற்றுள்ளார்கள். அப்புறம் எதுக்கு அரசாங்கம் சட்டம் ஒழுங்கு காவல்துறை என்று வைத்துள்ளார்கள். உயர் நீதிமன்றத்திற்குத் தான் எல்லாரும் செல்ல வேண்டும் என்றால் இந்த அரசாங்கம் ராஜிநாமா செய்துவிட்டு போக வேண்டியது தானே என்றார். தமிழகத்தில் ஜனநாயகம் இருக்கிறதா? கருத்துரிமை இருக்கிறதா? பேச்சுரிமை இருக்கிறதா? எழுத்துரிமை இருக்கிறதா? மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. இந்த போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டில் உள்ள எல்லா கட்சிகளும் சேர்ந்து பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமையை பாதுகாக்க இணைந்து போராட முன்வரவேண்டும். சிபிஎம் சார்பாக எல்லா அரசியல் கட்சிகளுடன் இது குறித்து கலந்து பேச உள்ளோம்.

ஹைட்ரோகார்பனுக்கு மோடி அனுமதி
தமிழகத்தில் மூன்று மண்டலங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மோடி அரசு அனுமதித்துள்ளது இரண்டு மண்டலத்தில் வேதாந்தா நிறுவனத்திற்கும் குள்ளஞ்சாவயிலிருந்து வேதாரண்யம் வரையிலான ஒரு மண்டலத்திற்கு இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இரண்டு அமைப்புகளும் பணிகளை துவக்கப் போவதாக அறிவித்துள்ளன. ஏற்கனவே நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது. அதை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று இந்த அரசாங்கம் சொன்னது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறும் போது நாங்கள் அனுமதி தர மாட்டோம். நீங்கள் போராட்டத்தை திரும்ப பெறுங்கள் என்று சொன்னார். அதையெல்லாம் மீறி இந்தியாவில் 55 மண்டலங்களுக்கு அனுமதி தந்திருக்கிறார்கள். அதில் தமிழகத்தில் 3 மண்டலங்களுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது மத்திய அரசு. ஹைட்ரோகார்பன் குறித்து உலகளவில் பரிசீலனை செய்து பார்த்தால் மக்கள் நெருக்கமாக வாழாத பகுதிகளில் தான் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் அதில் இருந்து வெளியாகும் கழிவு பொருட்கள், கசியும் வாயுக்கள், பெரும் பாதிப்புகளை உருவாக்கும் என்று ஏற்கனவே பல ஆய்வுகள் சொல்லுகின்றன. இவ்வளவுக்கும் பிறகு மத்திய அரசு அறிவித்துள்ள இந்த பகுதிகள் மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளாக உள்ளன. இதில் காவிரி டெல்டா, கடலூர் மாவட்டம் முழுதாக வருகிறது. புதுச்சேரி மாநிலம் முழுதாக வருகிறது. எனவே இந்த திட்டம் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும், விவசாயத்தை பாதிக்கும். சுற்றுச்சூழல் பாதிப்பை உருவாக்கி பல விதமான நோய்களை உருவாக்கும். எனவே இந்த திட்டத்திற்கு நாங்கள் அனுமதி கொடுக்க மாட்டோம் என்று தமிழக அரசு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். இப்போதே டெல்டா மாவட்ட விவசாயிகள் கொந்தளிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இன்னும் போக போக சிபிஎம் உட்பட ஒரு வலுமிக்க போராட்டத்தை நடத்த உள்ளோம்.

அதிகாரிகளுடன் நீதிபதி கூட்டு உயர்நீதிமன்றம் குட்டு
மணல் கடத்தலில் ஈடுபட்டால் அவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று ஒரு நீதிபதி உத்தரவு போடுகிறார். நீதிபதியாக இந்த உத்தரவு போடவில்லை. அதிகாரிகள் எல்லாம் சேர்ந்து செய்த ஏற்பாடு தான் அந்த உத்தரவு. நல்ல வேளை உயர்நீதிமன்றம் தலையிட்டு. அதிகாரிகள் மணல் கொள்ளையில் தலையிட வேண்டாம் என்று உத்தரவு போட உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்து என்று ரத்து செய்துள்ளது மணல் கொள்ளை மற்றும் மணல் திருட்டு ஆளுங்கட்சியும் அரசாங்கமும் சம்மந்தம் இல்லாமல் செய்ய முடியாது. அரசாங்கத்தின் ஒப்புதலோடு தான் மணல் கொள்ளை நடைபெறுகிறது.

அரசு இறக்குமதி மணல் கூடுதல் விலை
வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்ய வேண்டும் என்று அரசு சொல்கிறது. ஏற்கனவே தனியார் வெளிநாட்டு மணலை இறக்குமதி செய்யும் போது அந்த மணலை விற்கக்கூடாது, அது தரம் தாழ்ந்த மண், அதில் சிலிக்கான் இருக்கிறது விற்கக்கூடாது என்று சொன்னார்கள். இப்போது அரசாங்கமே இறக்குமதி செய்ய டெண்டர் அறிவிக்கிறது. ஏற்கனவே தனியார் ஒரு யூனிட்டுக்கு ரூ.5 ஆயிரம், ரூ.4 ஆயிரம் தான் விற்பதாக கூறினார்கள். இப்போது அரசு இறக்குமதி செய்த ஒரு யூனிட் மணலுக்கு ரூ.10 ஆயிரம் என்கிறது. தனியார் இறக்குமதி செய்த மணல் குறைவாக விற்கப்படுகிறது. அரசு இறக்குமதி செய்தால் ஏன் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது.

அரசு ஒப்புதலோடு மணல் கொள்ளை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மணல் வியாபாரத்தை அரசுடமையாக மாற்றினார். அதனால் அரசுக்கு வருமானம் வரும் என்று அனைவரும் வரவேற்றோம். ஆனால் இந்த 8 ஆண்டுகளில் அரசுக்கு பெரியதாக இந்த மணலால் வருமானம் இல்லை. இதில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கும், ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கும் கமிஷனாக பல ஆயிரம் கோடிகள் போய் சேருகிறது. மணல் கொள்ளையை தாசில்தார் தடுக்கப் போகிறார். அவர் மீது லாரியை ஏற்றி கொள்கிறார்கள். எந்த தைரியத்தில் செய்கிறார்கள். ஆகவே பகிரங்கமாக அரசாங்கத்தின் ஒப்புதலோடு மணல் கொள்ளை நடைபெறுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம்.

தனிநபர் பழிவாங்கும் போக்குக்கு கண்டனம்
ஏற்கனவே ஒரு வழக்கில் கருணாஸ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளார். இப்போது முதலமைச்சரை எதிர்த்து பேசுகிறார், சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானங்களை கொண்டு வந்திருக்கிறார் என்று கூறி எப்போதோ அவர் மீது போடப்பட்ட ஒரு பழைய வழக்கு. அதில் இவர் இருந்தாரா இல்லையா என்பது தெரியாது, ஆனால் அதில் இவர் மீது வழக்கு போடப்படுகிறது. அதனையடுத்து இரவோடு இரவாக அவரை கைது செய்வது வன்மையான கண்டனத்திற்கு உரியது. ஆகவே ஆளுங்கட்சிக்கு ஆதரவாக யார் வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் பேசலாம். ஒரு அமைச்சரே எதிர்க்கட்சித் தலைவரைப் பார்த்து நாக்கை அறுத்துவிடுவேன் என்கிறார். அவர் மீது வழக்கு போடவில்லை. காவல்துறையை வைத்துக்கொண்டு எச்.ராஜா காவல்துறை கேவலமாக பேசுகிறார். உயர்நீதிமன்றத்தை கேவலமாக பேசுகிறார். அவர் மீதும் எந்த வழக்கும் கிடையாது, கைது கிடையாது. ஆனால் மாணவி சோபியாவை கைது செய்வார்கள். எதிர்க்கட்சியினர் அனைவரையும் கைது செய்வார்கள். எச்.ராஜாவை மட்டும் கைது செய்ய மாட்டார்கள். ஆனால் தனி நபர் பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த அரசு செயல்படுவது கண்டனத்திற்குரியது. எனவே கருணாஸ் கைது செய்வதை கைவிட வேண்டும்.

எச்.ராஜாவை தேடுவதாக கூறுவது உலக மகா ஜோக்
ஏன் எச்.ராஜாவை கைதுசெய்யவில்லை என்று நிருபர்கள் கேட்டால் ஒரு அமைச்சர் சொல்கிறார் அவர் தேசிய செயலாளராம் அதனால் கைது செய்யவில்லையாம். தேசியச் செயலாளர் என்றால் யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? ஓவ்வொருவர் மீதும் வழக்குபோடும் போது அவரிடம் கேட்டுக்கொண்டா போடுகிறது அரசு. கருணாஸ் மீது வழக்கு போட்டார்கள் அவரிடம் கேட்டா போட்டார்கள். சோபியா மீது வழக்கு போட்டார்கள் அவரிடம் கேட்டா போட்டாங்க. எனவே தமிழக அரசு வித்தியாசமான அணுகுமுறையை கையாள்கிறது. போலீசு பாதுகாப்பில் இருக்கிற ஒருத்தரை 2 தனிப்படை குழு அமைத்து நாங்கள் தேடுவதாக கூறுவது மிக மிக வெட்கக் கேடானது. இதைவிட உலக மகா ஜோக் ஏதாவது உண்டா? இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார். இந்த சந்திப்பில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண், மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் பங்கேற்றனர்.

(நநி)

Leave a Reply

You must be logged in to post a comment.