விருதுநகர்:
தமிழகம் முழுவதும் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள தெரு விளக்குடன் கூடிய மின் கம்பங்களில் எர்த் கம்பி அமைப்பதற்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. தரமற்ற முறையில் இப்பணிகள் செய்யப்பட்டதால், இதில் கோடிக் கணக்கான ரூபாய் வரிப்பணம் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், ஊராட்சி ஒன்றியங்களில் எல்.இ.டி விளக்குகள் உள்ள மின் கம்பங்களில் ‘புவித் தொகுப்பு’ அதாவது எர்த் கொடுப்பதற்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாவும், அதற்கு உரிய தொகையை ஊராட்சிகள் வழங்க வேண்டுமென உயர் அதிகாரிகள் மூலம் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாத காரணத்தால், மத்திய அரசிடமிருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் உள்ளாட்சிகளுக்கு வழங்கப்படவில்லை. இதனால், உள்ளாட்சி அமைப்புகள் போதிய நிதியின்றி தள்ளாடி வருகின்றன. அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாத நிலை உள்ளது. மின் மோட்டாரில் பழுது ஏற்பட்டால் கூட அதை சீர் செய்ய உள்ளாட்சி அமைப்புகளிடம் நிதி இல்லை.

ஆனால், “எரிகிற வீட்டில் உருவியது வரை லாபம்“ என்ற பழமொழிக்கு ஏற்ப தமிழக அரசு மற்றும் அதிகாரிகள் கூட்டுச் சேர்ந்து பல திட்டங்களைத் தீட்டி மக்களின் வரிப் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். குறிப்பாக விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் ஊராட்சி பகுதியில் மின் கம்பங்களில் எர்த் போடும் பணியை குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திற்கு டென்டர் விட்டுள்ளனர். இதில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது.
உதாரணத்திற்கு விருதுநகர் மாவட்டத்தில் 450 ஊராட்சிகள் உள்ளன.

அதில் 600க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் உள்ளன. இதில் எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்பட்ட மின்சார வயரில் இருந்து கீழ் வரை எர்த் வயர் குழாய் மூலம் கொண்டு வர வேண்டும். அதனுடன் இணைத்து 2.5 அடி ஆழம் தோண்டி அதில் இரும்பு குழாய் பதித்து வயரை இணைக்க வேண்டும். ஆனால், ஒப்பந்தகாரரோ, மின் கம்பத்தின் அடிப்பகுதியில் இரும்புக் கம்பிகளை அரை அடி ஆழத்தில் ஊன்றி, அதில், பிளாஸ்டிக் குழாய் பதித்து அதில், வயர் ஒன்றை செலுத்தி, மின் விளக்குடன் இணைத்துள்ளனர். இதனால், மழைக் காலங்களில் மின்சாரம் தரைக்குள் செல்ல வாய்ப்பில்லை.

தரையின் மேற்பரப்பில் மின்சாரம் பரவி உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், தரமற்ற குழாய்கள் கொண்டு முறையற்ற பணிகள் செய்த தனியார் நிறுவனத்திற்கு கோடிக் கணக்கான ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு மின் கம்பத்தில் எர்த் போடுவதற்கு மட்டும் ரூ.700க்கு மிகாமல் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டதால், அந்நிறுவனம் மின் கம்பம் ஒன்றுக்கு ரூ.695 க்கு டென்டர் எடுத்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும், முதற் கட்டமாக ரூ.25 லட்சத்திற்கு மேல் அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணா ஏஜென்சி என்ற தனியார் நிறுவனத்திற்கு இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இந்நிறுவனத்திற்கே டென்டர் வழங்கப்பட்டு தரமற்ற பணிகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் கோடிக் கணக்கான ரூபாய் மக்கள் வரிப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.

எனவே, தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில் நடைபெற்றுள்ள இப்பணியை ஆய்வு செய்வதோடு, ஊழலுக்கு துணை போன உயர் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாகும்.
ந.நி.

Leave a Reply

You must be logged in to post a comment.