நாகர்கோவில்:
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் தோழர் டி.ஆர்.மேரி சனிக்கிழமை காலை குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி, திருவனந்தபுரம் மாவட்டச் செயலாளர் ஆனாவூர் நாகப்பன், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.முருகேசன், விஜயமோகனன், வட்டார செயலாளர் சிதம்பர கிருஷ்ணன், மாதர் சங்க மாநில துணை செயலாளர் உஷா பாசி, மாவட்டச் செயலாளர் ரெகுபதி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் மலைவிளை பாசி மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். நித்திரவிளையில் ஞாயிறன்று காலை 10 மணிக்கு இரங்கல் கூட்டமும் அதைத் தெடர்ந்து 11 மணிக்கு அருகில் உள்ள பள்ளிக்கல்லில் இறுதி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதில் மாதர் சங்க மாநிலச் செயலாளர் ஆர்.சுகந்தி, மத்தியக்குழு உறுப்பினர் என்.அமிர்தம் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

கட்சிக்காக அர்ப்பணிப்பு
தோழர் டி.ஆர். மேரி மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். திருமணம் செய்து கொள்ளாமல் இறுதி வரை கட்சிப் பணியாற்றியவர் எனவும், மாவட்ட, மாநில அளவில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று திறம்பட பணியாற்றினார் எனவும் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தோழர் டி.ஆர்.மேரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில துணை தலைவராகவும், மாவட்டத்தலைவராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினராகவும், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகியாகவும் சிறப்பாக செயலாற்றியவர். ஏழையின் குமுறல் என்கிற மாத இதழை 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வந்துள்ளார். தோழர் மேரியின் சகோதரி மற்றும் உறவினருக்கு கட்சியின் மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவிப்பதாக கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.