வேலூர்.
வேலூர் மாவட்டம், வாலாஜா தாலுகா கவரப்பாளையம் கிராமத்தில் வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் மீது வனத்துறையினரும், காவல்துறையினரும் இணைந்து, பொய் வழக்குகளை போட்டு பணம் பறிப்பது, நள்ளிரவில் வீடு புகுந்து தேடுவது போன்ற அராஜக அத்துமீறல்களை கண்டித்து வெள்ளிக்கிழமை (செப்28) ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்க சார்பில் நடந்த இப்போராட்டத்துக்கு சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எம்.சேட்டு தலைமை தாங்கினார். அகில இந்திய ஆதிவாசி மக்களின் உரிமைக்கான தேசிய மேடை மத்தியக் குழு உறுப்பினர். ஏ.வி. சண்முகம், வேட்டைக்காரன் பழங்குடி சங்க மாநிலச் செயலாளர் இ.கெங்காதுரை, சிபிஎம் வேலூர் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எல்.சி.மணி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி வேலூர் மாவட்டத் தலைவர் தா. வெங்கடேசன், நிலவு குப்புசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்று காவல்துறை மற்றும் வனத்துறையினரின் அடாவடிச் செயலை கண்டித்து முழக்கமிட்டனர்.  இதுகுறித்து சங்க மாநிலச் செயலாளர் இ. கெங்காதுரை கூறுகையில்,“கடந்த 6 ஆம் தேதி வனப் பகுதியில் ஆடு ஒன்று இறந்து போனது. இது சம்பந்தமாக அதேப்பகுதியைச் சேர்ந்த ஆர்.ஏழுமலையை (23) அழைத்துச் சென்ற வனத்துறையினர், காட்டுப் பன்றிக்கு வைத்த வெடியில் ஆடு இறந்துவிட்ட தாகக் கூறி அபராதமாக ரூ. 12,000த்தை மிரட்டி பறித்துள்ளனர்.

பின்னர், சந்தேகத்தின் பெயரில் ஏழுமலை மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த நான்கு பேரை விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற ரத்தினகிரி காவல் துறையினர் இரண்டு நாட்களுக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துவிட்டனர். மேலும், சந்தேகத்தின் பெயரில் இரவு நேரத்தில் அத்துமீறி வீடுகளுக்குள் புகுந்து காவல்துறையினர் அடாவடி செய்து வருகின்றனர். இதுகுறித்து ராணிப்பேட்டை வட்டாட்சியரிடம் புகார் அளித்தும் பலன் இல்லை. காவல்துறையின் தடையை மீறி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம்” என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.