மீரட்:
முஸ்லிம் இளைஞருடன் பேசியதற்காக இளம்பெண் ஒருவரை, மீரட் காவல்துறையினர், அடித்து உதைத்து இழுத்துச் செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில், பாஜக ஆட்சிக்கு வந்தபின், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, மத அடிப்படையிலான வன்முறைகள் பல மடங்கு அதிகரித்து விட்டன. குறிப்பாக, முஸ்லிம்கள் கடும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். ஆர்எஸ்எஸ் துணை அமைப்புக்களும், விஎச்பி போன்ற இந்துத்துவா அமைப்புக்களும் நடத்தும் இந்த வன்முறைக்கு, உத்தரப்பிரதேச பாஜக அரசும் உடந்தையாக இருந்து வருகிறது.இந்நிலையில்தான், மீரட் நகர போலீசார், மருத்துவ மாணவி ஒருவரை அடித்து இழுத்துச் செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அதில், மாணவியை, அடித்து உதைத்து ஜீப்பில் ஏற்றும், காவல்துறையினர், “நீ இந்துவாக இருந்து கொண்டு ஒரு முஸ்லிம் இளைஞனோடு ஏன் பழகுகிறாய்; இந்து இளைஞர்கள் யாரும் கிடைக்கவில்லையா?” என்று கேட்டு அந்த பெண்ணை மீண்டும் மீண்டும் தாக்குகின்றனர். பெண் காவலரும் ஒருவரும் அந்தப் பெண்ணைக் கன்னத்தில் அறைகிறார்.

இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தாக்குதலின் பின்னணி தற்போது வெளியாகியுள்ளது.மீரட்டில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, மருத்துவம் படிக்கும் முஸ்லிம் மாணவரும், அவரது வகுப்புத் தோழியும் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது, அங்கே வந்த விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த குண்டர்கள், அவர்கள் இருவரையும் தாக்கி, இவர்கள் ‘லவ் ஜிகாத்தில்’ ஈடுபட்டுள்ளனர் என்று கூறி காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

காவல்துறையினரும் அவர்கள் இருவரையும் தனித்தனி வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். முன்னதாக, மருத்துவ மாணவி, துணியால் முகத்தை மூடிக்கொண்டு காவல்துறை வாகனத்தில் ஏறியபோதுதான், பெண் காவலர் உட்பட காவல்துறையினர் 3 பேரும், அந்த மருத்துவ மாணவியை தாக்கியுள்ளனர். “உனக்கு பழகுவதற்கு இந்து இளைஞர்கள் இல்லையா? எதற்காக இஸ்லாமிய இளைஞருடன் பழகுகிறாய்…” என்று கேட்டு கன்னத்தில் அறைந்துள்ளனர்.மீரட் நகர காவல்துறையின் தலைமைக் காவலர் சலேக் சந்த், கான்ஸ்டபிள் நீது சிங், பெண் போலீஸ் பிரியங்கா ஆகியோர் தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: