திருவண்ணாமலை;
பாலியல் குற்றச்சாட்டு கூறினால், படிப்பை நிறுத்திவிட வேண்டுமா என, திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் வேளாண் கல்லூரி மாணவி கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையை அடுத்த வாழவச்சனூர் அரசு வேளாண்மை கல்லூரியில் சென்னையை சேர்ந்த மாணவி, 2ஆம் ஆண்டு படித்து வந்தார். உதவி பேராசிரியராக பணிபுரியும் தங்கபாண்டியன் என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறினார். மேலும் அந்த மாணவி தங்கியிருந்த விடுதியில் வார்டன்களாக இருந்த பேராசிரியைகள், உதவி பேராசிரியர் தங்கபாண்டியனுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி உத்தரவின் பேரில் திருவண்ணாமலை கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர் வனிதா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் சமீபத்தில் திருச்சியில் உள்ள அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரிக்கு அந்த மாணவி திடீரென மாற்றப்பட்டார். இந்த ஆணையை ஏற்க மறுத்து அந்த மாணவி வாழவச்சனூரில் உள்ள கல்லூரிக்கு தினமும் சென்றார். ஆனால், வகுப்பறைக்குள் மாணவி சென்றவுடன் மற்ற மாணவ, மாணவிகளை அழைத்துக் கொண்டு பேராசிரியர்கள் வெளியில் சென்றனர். செவ்வாயன்றும் மாணவி வகுப்பறைக்கு வந்தவுடன் மற்ற மாணவ, மாணவிகள் வகுப்புகளுக்கு வராமல் புறக்கணித்தனர்.

இந்த நிலையில் செவ்வாய், மதியம் சுமார் 3 மணியளவில் விசாரணைக்காக திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாணவி வந்தார். மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி முன்னிலையில் மாணவியிடம் விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்து வெளியே வந்த மாணவி செய்தியாளர்களிடம் கூறியபோது, கல்லூரியில் உதவி பேராசிரியர் என்னிடம் பாலியல் தொல்லை தந்ததாக நான் குற்றச்சாட்டு தெரிவித்தேன். என் குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணை நடத்தி மேல் நடவடிக்கை எடுப்பதை விடுத்து, கல்லூரி நிர்வாகம், பல்கலைக்கழக நிர்வாகம், காவல்துறையினர் உட்பட, என்னை வேறு கல்லூரிக்கு இடமாற்றம் செய்வதிலேயே குறிக்கோளாக உள்ளனர்.

நான் இங்கேயே தொடர்ந்து படிக்க விரும்புகிறேன். என் புகார் குறித்து மாவட்ட காவல்துறை சரியாக விசாரணை நடத்தவில்லை. ஒரு தலைபட்சமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நியாயம் கிடைக்கவில்லையென்றால், படிப்பை பாதியில் நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: