===சாமி.நடராஜன்===                                                                                                       காவிரி படுகை மாவட்டங்களில் உள்ள விளை நிலங்களையும், இப்பகுதிநிலப்பரப்பு முழுவதையும் அதில் வசித்து வரும் மக்களையும் நாசப்படுத்திடும் திட்டங்களை அமல்படுத்திட தொடர்ந்து மத்திய அரசு முயற்சித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் கடந்த 2010ஆம் ஆண்டு (29-10-2010) முதன்முதலில் குஜராத்தை சேர்ந்த கிரேட் ஈஸ்டன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்திற்கு காவிரிப்படுகை மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கு அனுமதி வழங்கியது.

மீத்தேன் எடுக்கப்படுவதால் ஏற்படும் ஆபத்தை விவசாயிகளும், பொதுமக்களும் முதலில் அறிந்திருக்கவில்லை. தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும்,மற்ற அமைப்புகளும் தொடர்ந்து விவசாயிகளிடம் செய்த விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு பிறகு ஆபத்தை உணர்ந்து காவிரி டெல்டா மக்கள் முழுவதும் ஒன்றிணைந்து பரந்த எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

சட்டமன்றத்தில் இடதுசாரி உறுப்பினர்களும், குறிப்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவராக இருந்த தோழர்.கே.பாலகிருஷ்ணன் தொடர்ந்து வலியுறுத்திய பின்பு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஒரு நிபுணர் குழுவை அமைத்தார். அதன் பிறகு எக்காரணம் கொண்டும் தமிழகத்தில் மீத்தேன் திட்டம் செயல்படுத்த மாட்டோம் என்று சட்டமன்றத்தில் அறிவித்தார்.

இந்நிலையில் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என விவசாயிகள் எண்ணியிருந்த நேரத்தில் மத்திய அரசு மீண்டும் ஷேல் கேஷ் திட்டத்தை இப்பகுதியில் செயல்படுத்திட அரசின் பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசிக்கு அனுமதி வழங்க முயற்சித்தது. இதை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய பின்பு சம்பந்தப்பட்ட ஓஎன்ஜிசி நிறுவனம் நாங்கள் தற்போது எந்த புதிய திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என அவ்வப்போது அறிவித்து வந்தது. ஆனால் தற்போது காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அம்மா வழியில் ஆட்சி செய்வதாக கூறிவரும் தமிழக அரசு வாய் திறக்காமல் உள்ளது.

மத்திய அரசின் ஹெல்ப் எனும் ஒற்றை உரிமத் திட்டம்
மீத்தேன், ஷேல் கேஸ் போன்ற பூமிக்கடியில் உள்ள இயற்கை எரிவாயுக்களை எடுப்பதற்கு, தனித்தனியாக அனுமதி பெற வேண்டும். ஒரு நிறுவனம் எதற்கான அனுமதி பெறுகிறதோ, அதை மட்டும்தான் எடுக்க முடியும் என்ற நிலை 2017 வரை இருந்தது. இதை மத்திய பெட்ரோலியத் துறையின் பரிந்துரைப்படி மத்திய அரசு மாற்றி ஹெல்ப் எனப்படும் ஒற்றை உரிமைத்தை பெற்றால் போதும். ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான அனுமதியை பெற்றுக்கொண்டு பூமிக்கடியில் உள்ள எந்த இயற்கை வளங்களை வேண்டுமானாலும் எடுத்துக்
கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த புதிய சட்டத்தின் படி காவிரி டெல்டாவிலும், நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்கனவே செயல்பட்டுவரும் எரிவாயு மற்றும் எண்ணெய் எடுக்கும் கிணறுகளில் மீத்தேன், ஷேல் கேஸ் போன்ற எரிவாயுக்களையும் எடுக்கலாம். இவற்றை எடுப்பதற்கான தொழில் நுட்பத்தை
பயன்படுத்தும் போது, இப்பகுதி முழுவதும் உள்ள இயல்பான நிலையில் பல மாற்றங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது.

பன்னாட்டு முதலாளிகளுக்கான  மோடியின் புதிய சட்டம்                                                                                            ஏற்கனவே நடைமுறையில் இருந்த நெல்ப் முறையை மாற்றி ஹெல்ப் முறை கொண்டுவந்த மோடி அரசு மேலும் பன்னாட்டு முதலாளிகள் இந்திய இயற்கை எரிவாயு வளங்களை கொள்ளையடிப்பதற்காக மேலும் தளர்த்தப்பட்ட திறந்தவெளி அனுமதி திட்டம் என்ற புதிய கொள்கையின் படி எண்ணெய் வயல்களை மத்திய ஹைட்ரோ கார்பன் இயக்குநரகம் அடையாளம் செய்து அதை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விடும் முடிவுக்கு வந்துள்ளது. இதன்படி நாடு முழுவதும் 55 புதிய வட்டாரங்களில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டில் உலகளாவிய நிறுவனங்கள் பங்கேற்ற ஏலத்தை நடத்தியுள்ளது. இதில் 110 நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்ததில், மத்திய மோடி அரசு பரிசீலித்து 28- 08- 2018ல் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு 55 இடங்களை கீழ்கண்டவாறு ஒதுக்கீடு செய்துள்ளது.

நிறுவனம்                            இடங்கள்                            நிறுவனத்தின் தன்மை

வேதாந்தா                                  41                                       ஸ்டெர்லைட் புகழ்
பிபிஆர்எல்                                   1                                          பொதுத்துறை
கெயில்                                          1                                          பொதுத்துறை
ஓஎன்ஜிசி                                      2                                          பொதுத்துறை
ஆயில் இந்தியா                         9                                           பொதுத்துறை
ஹெச்ஓஇசி                                1                                           தனியார் நிறுவனம்

இந்த 55 இடங்களில் தமிழகத்தில் மூன்று வட்டாரங்கள் தேர்வு செய்யப்பட்டு அதில் இரண்டு வேதாந்தா நிறுவனத்திற்கும் ஒன்று ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களுடன் மத்திய அரசு ஒப்பந்தம் போட உள்ளது.

தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட வட்டாரம்
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏற்கனவே மரக்காணம் முதல் கன்னியாகுமரி வரை 2,40,000 சதுர கிமீ பரப்பளவிலான நிலம் மற்றும் கடல் பகுதிகள் வடி நிலப் பகுதியாக அறிவிக்கப்பட்டு நிலத்தடி எரிபொருள் வள இருப்பு மண்டலமாக அடையாளம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இப்பகுதியில்தான் ஹைட்ரோ கார்பன் எடுக்க மூன்று வட்டாரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் 1. நிலப்பகுதியிலும், 2 கடல் பகுதியிலும் வருகிறது.

நிலப்பகுதி: கடலூர் மாவட்டம் தியாகவள்ளியில் துவங்கி நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் வரையில் 731 சதுர கிமீ நிலப்பகுதியில் 120 கிணறுகள் தோண்ட உள்ளனர். இப்பகுதியில் பல்லாயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, சுற்றுச்சூழலும், மக்களின் இருப்பிட வசதிகளும் பாழ்பட உள்ளது.

கடல்பகுதி 1 : புதுச்சேரி அருகே மரக்காணத்தில் துவங்கி கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி இடம் வரை 1794 சதுர கி.மீ. கடல் பகுதியில் 4 கிணறுகள் அமைக்க உள்ளனர். இதில் புதுச்சேரி ஒரு பகுதி, விழுப்புரம் மாவட்ட கடல் பகுதி, கடலூர் மாவட்ட கடல் பகுதியில், இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

கடல்பகுதி 2: கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் துவங்கி, நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த புஷ்பவனம் வரை 2674 சதுர கிமீ கடல்பகுதியில் 10 கிணறுகள் அமைக்க உள்ளனர்.இந்த மூன்று வட்டாரங்களில் நிலப்பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள வட்டாரத்தை ஓஎன்ஜிசி.க்கும், கடல்பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள வட்டாரத்தை வேதாந்தா நிறுவனத்திற்கும் மோடி அரசு ஒதுக்கியுள்ளது.

விவசாயம் அழியும் – கடல் பாதிக்கும்
ஹைட்ரோகார்பன் என்ற ஒற்றை உரிமத்தை பெற்ற இந்நிறுவனங்கள் பூமிக்கு அடியில் ஆயிரக்கணக்கான அடிகளுக்கு துளையிட்டு அதன் பக்கவாட்டி லும் துளையிட்டு ஹைட்ராலிக்ஸ் பிராங்கிங் முறையில் வெடிப்புகளை உண்டாக்கி அதன் வழியாக வேதிப்
பொருட்கள் நிரம்பிய தண்ணீரை செலுத்தி, பாறைகளை உடைத்து அதன்கீழ் உள்ள ஷேல் கேஸ் மற்றும் மீத்தேன் போன்ற எரிவாயுக்களை எடுக்க திட்டமிட்டுள்ளனர். காவிரி டெல்டாவில் நிலப்பகுதியில் ஏற்கெனவே ஓஎன்ஜிசி செயல்படுத்திவரும் எண்ணெய் கிணறுகளிலும் மீத்தேன், ஷேல் கேஸ் எடுப்பார்கள். எனவே காவிரி டெல்டாவில் உள்ள பல லட்சம் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதோடு, சுற்றுச்சூழல் மாசுஅடைந்து மக்கள் வாழ்வதற்கு தகுதியற்ற பகுதியாக இதை மாற்ற முயற்சிக்கிறார்கள். கடல் பகுதியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதால் மீன் வளம் குறைந்து, மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படு
வதோடு நூற்றுக்கணக்கான மீனவக் கிராமங்கள் காலியாகும் அபாயம் உள்ளது. கடல் பகுதியின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு, கடல் சீற்றம் உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகள் அடிக்கடி உருவாகும் நிலை ஏற்படும்.

விவசாயிகள் – மீனவர்கள் – பொதுமக்களை திரட்டுவோம்
காவிரி டெல்டா பகுதி விளைநிலங்களையும் கடல்பகுதியையும் அழித்து ஒரு சிலர் கார்ப்பரேட் பெருமுதலாளிகள் கொள்ளை லாபம் பெறுவதற்காக இத்திட்டத்தை செயல்படுத்திட மோடி அரசு முயற்சிக்கிறது. இத்திட்டத்தை எதிர்த்து மக்களை ஓரணியில் திரட்டிட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தொடர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. 19-09-2018 அன்று சிதம்பரத்தில் பல்வேறு விவசாய அமைப்புகள், மீனவ அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தை நடத்தி சில முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி,

1. இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ள பகுதிகள் முழுவதிலும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது.

2. இத்திட்டத்தை செயல்படுத்திட மாநில அரசு அனுமதி வழங்கக்கூடாது என முதல்வரை சந்தித்து மனு அளிப்பது.

3. அக்டோபர் மாதம் 8ஆம் தேதி சென்னை சாஸ்திரிபவனை ஆயிரக்கணக்கான விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்களை திரட்டி முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது.வரப்போகும் ஹைட்ரோ கார்பன் எனும் பேரழிவிலிருந்து மண்ணையும், மக்களையும் பாதுகாத்திட கரம் கோர்ப்போம். களத்தில் எதிர்கொள்வோம்.

கட்டுரையாளர்: தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர்.

Leave a Reply

You must be logged in to post a comment.