===பேராசிரியர் கே. ராஜு===                                                                                                                                                      பெயர் பெற்ற கல்வியாளரும் அறிவியல் நிறுவன நிர்வாகியுமான பேரா. விஜய் ராகவன் உயிரியல் தொழில்நுட்பத் துறையின் முன்னாள் செயலாளராகத் தடம் பதித்தவர். அண்மையில் இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். நாடெங்கிலும் அறிவியல் பணிகளைத் திட்டமிட்டு அவற்றை மேம்படுத்தும் சவால் அவருக்குக் காத்திருக்கிறது. கேந்திரமான தொழில்நுட்ப, சமூக பொருளாதாரத் துறைகளில் பல்வேறு திட்டங்களை அவர் ஒருங்கிணைக்க வேண்டியிருக்கும்.

பெரும்பாலான மக்கள் அறிவியல் என்றால் அதை விண்வெளி அல்லது பாதுகாப்புத் துறை சம்பந்தமானதாகப் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் விஜய்ராகவன் தனது ஆராய்ச்சிக்கு வாழ்வியல் தொடர்பான அறிவியலைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர். உயிரியல் தொழில்நுட்பத் துறையின் செயலாளராக இருந்தபோது அதை சாதாரண மக்களிடம் எடுத்துச் சென்றார். ட்ரீம் 2047 அறிவியல் இதழு க்காக நவ்நீத் குமார் குப்தா எடுத்த நேர்காணல் ஜூன் மாத இதழில் வெளியாகியுள்ளது.

பேரா.விஜய் ராகவன் அளித்த பதில்களிலிருந்து முக்கியமான சில பகுதிகள் :
சாதனைகள் : சுதந்திரம் அடைந்ததிலிருந்து விண்வெளித் துறை நாட்டின் பெருமிதத்திற்குரிய பீடமாக விளங்கி வருகிறது… நாம் செலுத்திய ராக்கெட்டுகள் விண்வெளியை நோக்கிச்
செல்லும்போது அவை நமது குடிமக்களின் மனஉறு தியை மேம்படுத்துகின்றன என்பது உண்மைதான். ஆனால் அறிவியலின் மற்ற துறைகளிலும் இந்தியா உயரிய இடத்தைப் பெற வேண்டும். அப்படி வேறு சில துறைகளில் நாம் சாதனை படைக்கவும் செய்திருக்கிறோம்.

பெரியம்மை, போலியோ போன்ற கொடிய நோய்களை வென்றிருக்கிறோம். பிரசவகால உடல்நலனை மேம்படுத்தியிருக்கிறோம். சுதந்திரம் அடைந்தபோது இருந்த சராசரி ஆயுட்காலம் 32 ஆண்டுகள்தான். 2012-ம் ஆண்டில் அது 65 ஆக உயர்ந்தது. சுதந்திர தினத்தின் 75-வது தினத்தைக் கொண்டாடப் போகும் 2022-ல் அது 75 ஆக உயர நாம் முயற்சி செய்ய வேண்டும்.

தாய்மொழியின் பங்கு : நம் நாட்டில் தாய்மொழி களைப் புறக்கணித்து ஆங்கிலத்தை உயர்த்திப் பிடிக்கும் குணம் ஒரு காலனிய ஆதிக்க காலத்து மனப்பான்மை. உதாரணமாக, ஜார்க்கண்ட் அல்லது கர்நாடகா போன்றதொரு மாநிலத்தில் உள்ள ஆங்கிலப்
பின்னணி இல்லாத ஒரு பள்ளியில் படித்த மாணவர்கள் அறிவியலைப் படிப்பதற்காக ஆங்கிலத்தைக் கற்றுக்கொண்டே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு ஆளா கிறார்கள். தங்களது சொந்த மொழிகளில் அறி வியலுக்கு மிகப் பெரிய பங்களிப்பு செய்த பல அறிவாளிகள் இல்லையா? இருக்கிறார்கள்.

ஸ்வீடன், டென்மார்க், நெதர்லாந்து போன்ற பல நாடுகளில் அவர்களது தாய்மொழிகள் வழியாகத்தான் மக்கள் அறிவியலைக் கற்றுக் கொள்கிறார்கள். அவர்களுக்கு ஆங்கில மொழியும் ஒரு மொழியாகக் கற்பிக்கப்படுகிறது. உலகில் உள்ள வேறு நாடுகளுக்கு தங்கள் அறிவியல் பணியைக் கொண்டு செல்லும்போது ஆங்கிலம் அவர்களுக்கு ஒரு ஊடகமாகக் பயன்படுகிறது. அவ்வளவுதான். இந்த நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள். ஆனால் அவர்களது சிந்தனை வேர்கொண்டிருப்பதென்னவோ அவர்களது சொந்த சமூகத்திலும் பண்பாட்டிலும்தான்.

தாய்மொழிகளில் அறிவியலைக் கற்பிப்பது இந்த நாடுகளுக்கு ஏராளமான நற்பயன்களை அளித்திருக்கிறது. இப்படிச் சொல்வதால் ஆங்கிலத்தை அகற்ற வேண்டும் என்று நான் சொல்வதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஆங்கிலத்தை ஒரு மொழியாக அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் நம் சொந்த மொழிகளில்தான் அறிவியல் செய்திகளைப் பரப்ப முயல வேண்டும். ஆராய்ச்சித் துறையில் பெண்களின் பங்கு: அறிவியல் துறையில் பெண்கள் சிறந்து விளங்கு கிறார்கள். ஆனால் ஆராய்ச்சித் துறைகளில் அவர்களது பங்கேற்பு இன்னமும் குறைவாகவே இருக்கிறது. இதற்கு பல காரணங்கள் உண்டு. பி.எஸ்.சி. படிப்பு வரை ஏராளமான பெண்கள் படிக்கிறார்கள். ஆனால் உயர்கல்வி என வரும்போது அவர்களின் எண்ணிக்கை குறைகிறது. நமது உயர்கல்வி நிறுவனங்கள் மென் மேலும் பெண்களுக்கேற்ற இடங்களாக மாறவேண்டும். பெண் ஆராய்ச்சியாளர்களுக்கு வேலைநேரம், வயது வரம்பு சம்பந்தமான விதிகள் தளர்த்தப்பட வேண்டும்.

குழந்தைக் காப்பகங்கள், உணவகங்கள் போன்ற சில வசதிகள் அவர்களுக்கென தனி கவனம் எடுத்து செய்து தரப்பட வேண்டும். பிரசவம், குழந்தை வளர்ப்பு போன்ற சில பொறுப்புகளை அவர்கள் நிறைவேற்ற நேரும்போது ஆராய்ச்சிப் பணியில் ஒரு தற்காலிக விடுப்பு
அனுமதிக்கப்பட வேண்டும். உயர் பதவிகளிலும் உயர்நிர்வாகக் குழுக்களிலும் பெண்களுக்கு மேலும் அதிக இடம் கொடுக்கப்பட வேண்டும். இம்மாதிரியான சில நடவடிக்கைகள் ஆராய்ச்சித் துறையில் பெண்களின் பங்கேற்பை அதிகப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. நமது பண்பாட்டில் பெண்களுக்கு உயரிய இடம் கொடுக்கப் பட்டிருக்கிறது. ஆனால் எல்லாம்
எழுத்தில்தான். நடைமுறையில் அவர்கள் அனுபவிக்கும் இன்னல்கள் பல. அவர்கள் தங்கள் பணிகளை நிறைவேற்ற சுதந்திரமான வெளிகளை ஆண்கள் உருவாக்கித்தரவேண்டும்.
(அடுத்த வாரமும் தொடரும்)

Leave a Reply

You must be logged in to post a comment.