அடக்குமுறையை கையாளும் தமிழக அரசுக்குதமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எட்டுவழிச்சாலை எதிர்ப்பு கூட்டியக்கம் சார்பில் சேலத்தில் இன்று எட்டுவழிச்சாலை திட்டத்தை எதிர்த்து பொதுமக்களிடம் கையெழுத்து பெரும் இயக்கம் நடைபெற்றது. தமிழக அரசு, பலநூற்றுக்கணக்கான காவலர்களை குவித்து இந்த கையெழுத்து பெரும் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க சேலம் மாவட்டச் செயலாளர் திரு.ராமமூர்த்தி உள்ளிட்ட தலைவர்களையும், விவசாயிகளையும் கைது செய்துள்ளது. தமிழக அரசின் இத்தகைய அடக்குமுறையை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையான அம்சம் மாற்று கருத்துகளுக்கு இடமளிப்பது ஆகும். ஆனால், தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு எட்டு வழிச்சாலையை எதிர்த்த எந்த நடவடிக்கையையும் அனுமதிப்பதில்லை என்று ஜனநாயக விரோதமான முறையில் நடந்து வருகிறது. உயர்நீதிமன்றம் தலையிட்டு, அடக்குமுறையை ஏவக்கூடாது என்று சுட்டிக்காட்டியதற்குப் பிறகும், தமிழக அரசின் அணுகுமுறையில் மாற்றமில்லை என்பதையே இச்சம்பவம் வெளிப்படுத்துகிறது.
எனவே, தமிழக அரசின் இந்த அடக்குமுறைக்கு எதிராகவும், விவசாயிகளின் நில உரிமையை பறிக்கும் எட்டுவழிச்சாலைக்கு எதிராகவும் அனைத்து அமைப்புகளும் கண்டனக்குரலெழுப்புமாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம். 

Leave A Reply

%d bloggers like this: