சென்னை,
நகரப் பேருந்துகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகைக் கட்டணம் அளிக்க விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தமிழக அரசின் போக்குவரத்துத் துறை செயலாளர் பி.டபிள்யூ.சி. டேவிதார், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க நிர்வாகிகளிடம் வாக்குறுதி அளித்துள்ளார்.

நகரப்பேருந்துகளில் கட்டணச் சலுகை வழங்க மறுப்பதை கண்டித்து செவ்வாயன்று (செப்.25) மாநகரப் போக்குவரத்து கழக தலைமையகமான பல்லவன் இல்லம் முன்பு மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர். அரசுப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 75 விழுக்காடு கட்டணச் சலுகையோடு பயணிக்க 2008ஆம் அண்டு சமூகநலத்துறை அரசாணை (எண்: 153) வெளி யிட்டது. எனினும், கடந்த 10 ஆண்டு களாக நகரப் பேருந்துகளில் இந்தச்சலுகை மறுக்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் இந்தச்சலுகையால் கழகத்திற்கு ஏற்படும் இழப்பை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஈடு செய்கிறது. இருப்பினும், கட்டணச்சலுகை அளிக்க மறுக்கின்றனர். எனவே அரசாணைப்படி நகரப் பேருந்துகளில் கட்டணச்சலுகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி தலைமையில் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது.

மாற்றுத்திறனாளிகள் பயன் படுத்தும் வகையில் வாய்ப்புள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போக்குவரத்து சாதனங்களை உருவாக்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் (2016) பிரிவு 41பி உள்ளது. இதனை கண்டு கொள்ளாமல், மாற்றுத்திறனாளிகளுக்கு போதிய வசதிகளை ஏற்படுத்தாமல் 590 புதிய பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. மாற்றுத் திறனாளிகள் சட்டத்தை மதிக்காமல் செயல்பட்ட போக்குவரத்துதுறை அதிகாரிகள் மீது பிரிவு 89ன் படி அபராதம் விதிக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து சங்கத்தின் தலைவர் ப.ஜான்சிராணி, பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன், நிர்வாகிகள் பி.ஜீவா, டி.வில்சன், பேரா.ராஜா, எஸ்.சண்முகம், பகத்சிங், அப்பு உள்ளிட்டோருடன் தலைமைச் செயலகத்தில் போக்கு வரத்து துறை செயலாளர் டேவிதார் பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பேச்சுவார்த்தையில், மாற்றுத்திறனாளிதுறை அதிகாரிகளிடம் பேசி விரைவில் நகரப் பேருந்துகளிலும் சலுகைக் கட்டணம் அளிக்க நடவடிக்கை எடுப்பதாகவும், புதிதாக வாங்க உள்ள 3 ஆயிரம் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படும் என்றும் டேவிதார் உறுதி அளித்தாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலரும் வாக்குறுதி:
இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் விஜயராஜ் குமாரை சங்கநிர்வாகிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அவரும், போக்குவரத்துத்துறை உயர் அதிகாரிகளிடம் பேசி விரைவில் நகரப் பேருந்துகளிலும் சலுகைக் கட்டணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாக நிர்வாகிகள் கூறினர். இதனைத் தொடர்ந்து காத்திருக்கும் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.