திருவில்லிபுத்தூர்;
கடந்த பத்து ஆண்டுகளாக மிதிவண்டியில் வியாபாரம் பார்க்கும் வியாபாரிகளை கிராமப்புறத்தில் கூட மிக அரிதாகவே பார்க்கும் சூழல் நிலவியது. தற்போது மீண்டும் மிதிவண்டியில் வியாபாரம் செய்பவர்களை பெருமளவில் பார்க்க முடிகிறது.

ஏன் இந்த திடீர் திருப்பம்
“பதனீர் கிடைக்கும் காலத்தில் பதனீர் வியாபாரமும்,பதனீர் கிடைக்காத காலங்களில் காய்கறி வியாபாரமும் பார்ப்பேன். மோட்டார் சைக்கிளில் தான் இந்த இரண்டு வியாபாரத்துக்கும் போவேன். இந்த ஆண்டு பதனீர் வியாபாரத்துக்கு மோட்டார் சைக்கிளில் தான் போனேன்.

பெட்ரோல் போட்டு முடியாததால தான் இரண்டு நாளிலே சைக்கிளுக்கு மாறிட்டேன். அன்னையில இருந்து இன்னைக்கு வரைக்கும் வியாபாரத்துக்கு சைக்கிளில் தான் போறேன்.
அதற்கு காரணம் பெட்ரோல் விலையேற்றம் தான்.பதனீ ர் எடுக்க போகையில 100 ரூபாய கொடுத்து ஒரு ஆயிலும், பெட்ரோலும் போட்டா.. பந்தப் பாறைப் போயிட்டு வந்து மறுநாள் காலையில வியாபாரம் பார்த்திட்டு அதற்கடுத்த நாள் பதனீர் எடுக்க பந்தப்பாறைக்கு போகையில 100 ரூபாய்க்கு பெட்ரோல் போடுவேன்.

ஒரு நாளைக்கு 100 ரூபாய்க்கு பதிலாக 150 ரூபாய்க்கு பெட்ரோலும், ஆயிலும் போட்டாலும் வண்டி இடையில பெட்ரோல் இல்லாம நிக்கவும் தான் சைக்கிளுக்கு மாறினேன்” என்கிறார் தற்போது பனம் பழம் வியாபாரம் பார்க்கும் நூர்சாகிபுரத்தைச் சேர்ந்த கி.முத்திருள்.
“பால் கறவை இருக்கிற இடங்களில் பாலை வாங்கி சில்லறைக்கு பால் வாங்குறவுங்களுக்கு ஊத்தின பால் போக மீதியிருக்கும் பால டவுண்ல உள்ள டிப்போவுக்கு போய் கொடுத்திட்டு கணக்கும் கொடுத்திட்டு வரணும்; காலையும், மாலையும் இப்படி நாப்பது கிலோ மீட்டருக்கு மேல அலைய வேண்டியிருக்குன்னு மூணு ஆண்டு முன்னாடி தான் மோட்டர் சைக்கிள் வாங்கினேன்.ஒரு நாளைக்கு பெட்ரோலுக்கே 150 ரூபாய்க்கு மேல செலவு ஆகிறதால வாங்குற சம்பளத்துக்கு கட்டுபடியாகவில்லை. நாலு காசு மிச்சம் பண்ணவும் முடியல… அதனால தான் மோட்டார் சைக்கிள வீட்டுல நிப்பாட்டிட்டு சைக்கிள்ல போறேன். கஷ்டப் பட்டு சம்பாதிச்ச பணத்த பெட்ரோலுக்கே போட்டுட்டு குடுபத்துக்கு எதை கொடுக்கன்னு நினைச்சுகிட்டே சைக்கிள மிதிக்கேன்.” என்கிறார் பெருமாள் தேவன்பட்டியை சேர்ந்த செல்வராஜ்.

“விருதுநகரில் உள்ள கல்லூரிக்கு போவதற்கு ரயில்வே நிலையம் வரைக்கும் பைக்குல தான் போவேன். பைக்க ரயில்வே ஸ்டாண்டுல போட்டுட்டு திரும்பி வரையில பைக்க எடுத்து வீட்டுக்கு வருவேன்.

அதே மாதிரி தான் வீட்டுக் காரம்மாவும் சிவகாசியில உள்ள கல்லூரிக்கு பைக்குல தான் போயி வருவாங்க. இருவருக்கும் பெட்ரோலுக்கு மட்டும் மாதம் நாலாயிரத்துல இருந்து ஐந்தாயிரத்துக்குள்ள முடிஞ்சிடும். கடந்த ஜனவரியில இருந்து 5,500 இருந்து ஆறாயிரத்த தாண்ட ஆரம்பிச்சப்ப தான் பைக்கு நமக்கு தேவையான்னு யோசிச்சேன்.

காற்று மாசாலும், ஒலி மாசாலும் சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. சைக்கிளில் போனால் சுற்றுச் சூழல் சீர்கெடுவது குறையும், நம் நாடு இறக்குமதிய குறைச்சி அன்னிய செலவாணியையும் மிச்சம் பிடிக்கலாம். சிறு துளி தான் பெரு வெள்ளமாகும் என்பதால், நான் ரயில் நிலையம் வரை போயி வருவதற்கு சைக்கிள பயன்படுத்த ஆரம்பிச்சேன். சைக்கிள் மிதிப்பது உடம்புக்கு உடற்பயிற்சியாகவும் இருக்குது; பணமும் மிச்சமாகுது.

இதைப்பார்த்த என் வீட்டுக்காரம்மாவும் இன்னொரு உதவி போராசிரியையும் இணைந்து ஒரே பைக்கல இப்ப போறங்க. அவுங்க பங்குக்கு பெட்ரோல் செலவ மிச்சம் பிடிக்க ஆரம்பிச்சிட்டாங்க; எனக்கு போட்டியாக!” என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத உதவி பேராசிரியர் ஒருவர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பல அத்தியாவாசிப் பொருட்களின் விலையேற்றம் பொதுமக்களை அச்சுறுத்தும் வேளையில், பலரையும் மிதிவண்டி பக்கம் கவனத்தை திருப்பியுள்ளது.

இந்நிலையில் மிதிவண்டிக்கான உதிரிபாகங்கள், ஆயத்தமாக இருக்கும் மிதிவண்டிக்களுக்கான ஜி.எஸ்.டி வரியை 5 சதவீதத்திற்குள் கொண்டு வந்து மிதிவண்டி போக்குவரத்தை ஊக்குவிக்க மத்திய,- மாநில அரசுகள் பரிசீலனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.