ஈரோடு,
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்து கோபிச்செட்டிப்பாளையம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னட நடிகர் ராஜ்குமார், கடந்த 2000-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி தொட்டா கஜ்ஜனூர் கிராமத்தில் உள்ள அவரது பண்ணை இல்லத்திலிருந்து கடத்தப்பட்டார். அவரை கடத்திய வீரப்பன், 108 நாட்கள் அவரை காட்டுக்குள் வைத்திருந்தார். நவம்பர் 15-ம் தேதி, வீரப்பன் ராஜ்குமாரை விடுவித்தார். தல்வாடி போலீசார் ராஜ்குமார் கடத்தப்பட்ட சம்பவத்தில் வீரப்பன் மற்றும் அவருடன் தொடர்புடைய 11 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

2004-ம் ஆண்டு சிறப்பு அதிரடிப் படையினர் நடத்திய தாக்குதலில் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு அடுத்து 2 ஆண்டுகளில் ராஜ்குமாரும் இறந்துவிட்டார். மேலும், இந்த வழக்கு விசாரணையில் இருந்தபோதே, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களான சேத்துக்க்குளி கோவிந்தன் மற்றும் ரங்கசாமியும் இறந்துவிட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கு திங்கள் கிழமை ஈரோடு,  கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்களில் கோவிந்தராஜ், அந்தில், பசுவண்ணா, குப்புசுவாமி மற்றும் கல்மாடி ராமன் ஆகிய 5 பேரும் நேரில் ஆஜராகினர். அப்போது நீதிபதி மணி இவ்வழக்கில் 25-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும், குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதி, வீரப்பனுக்கும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான தொடர்பு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

Leave A Reply

%d bloggers like this: