திருப்பூர்,
நாட்டில் சிலரிடம் மட்டும் அதிகாரம் குவிந்து வரும் நிலை உள்ளது. இது மிகவும் ஆபத்தானது என்று காந்தி கிராம பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் ந.மார்க்கண்டன் கூறினார்.

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் செவ்வாயன்று இலவச காய்கறி கிராம விழிப்புணர்வு தொடக்க விழா கல்லூரி முதல்வர் எஸ்.இராமையா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை விழுதுகள் சமூக நல அமைப்பின் இயக்குநர் தங்கவேல் தொடங்கி வைத்தார். இதில் கிராம மேம்பாட்டு எழுத்தாளர் பாரதி சின்னசாமி எழுதிய “எல்லாமே இலவசம்” என்ற நூலை வெளியிட்டு காந்திகிராம பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் ந.மார்க்கண்டன் பேசினார்.அப்போது அவர் கூறுகையில், “உலகிலும், இந்தியாவிலும் சகிப்புத்தன்மை குறைந்து, ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருகிறது. வேலையின்மை பெருகி, ஊதியம் குறைந்து வருகிறது. செல்வச் செழிப்புள்ள சிலரிடம் அதிகாரம் குவிந்து வருவது ஆபத்தானது. எல்லாவற்றையும் மேலேயே குவித்துக் கொள்வது நல்லதல்ல. கீழிருந்து மாற்றம் வர வேண்டும். கிராமங்களுக்கு தேவையான பணிகளை அந்த கிராமங்களே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். குளத்தைத் தூர்வாருவதற்கு மத்திய அரசு மூலம் நிறைவேற்ற வேண்டியதில்லை. அந்தந்த கிராமமே என்னென்ன பணி தேவை என்று தீர்மானித்து நிறைவேற்றலாம்.

இந்தியா சுதந்திரம் பெறும்போது இருந்த நிலையில் இருந்து கீழிறங்கி வருகிறது. சாதிவெறி, மதவெறி தலை தூக்குகிறது. இன்றையஇளம் தலைமுறையினர் வன்முறையை நிராகரிக்க வேண்டும். நேர்மையுடனும், துணிவுடனும் மாற்றத்துக்காக பாடுபட வேண்டும் என்றார். இவ்விழாவில் கவிஞர் உமா மகேஸ்வரி, கவிஞர் வாளவாடி வண்ணநிலவன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.மோகன்குமார் வரவேற்றார். ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மாணவ, மாணவிகளுக்கு விதைகள் வழங்கப்பட்டது. எல்லாமே இலவசம் நூல் ஆசிரியர் பாரதி சின்னசாமி ஏற்புரை வழங்கினார். நிறைவாக விருதுகள் நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் கே.சந்திரா நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.