மேட்டுப்பாளையம்,
கோவை காரமடை அரங்கநாதர் கோவிலில் செவ்வாயன்று நீதிபதி ராமநாதன் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளை நீதிமன்றமான மதுரை நீதிமன்றத்தின் உத்தரவின்படி மேட்டுப்பாளையத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டின் கீழ் வரும் மூன்று திருக்கோவில்களில் செவ்வாயன்று மேட்டுப்பாளையம் சார்பு நீதிமன்றத்தின் நீதிபதி ராமநாதன் ஆய்வு மேற்கொண்டார். முதலில், காரமடையில் உள்ள அரங்கநாதர் கோவிலில் ஆய்வு மேற்கொண்ட நீதிபதி ராமநாதன், கோவிலில் உள்ள பக்தர்களுக்கான குடிநீர் வசதி, அன்னதான கூடம், கழிவறைகள் உள்ளிட்டவைகளை முதலில் ஆய்வு செய்தார். பின்னர் கோவிலில் உள்ள அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் எண்ணிக்கையை கேட்டறிந்த நீதிபதி இவர்களில் எத்தனை பேர் இந்து அறநிலையத்துறையால் நியமிக்கப்பட்டவர்கள் என்பதையும், தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள் குறித்தும் விசாரித்தார்.

மேலும், கோவிலுக்கு வரும்பக்தர்களுக்கு சாமி தரிசனத்திற்காக பெறப்படும் வசூல் கட்டணம் மற்றும் அர்ச்சனை ரசீதுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா எனஆய்வு மேற்கொண்ட நீதிபதி கோவில் பிரகாரங்கள் வழியேசென்று அங்கு வந்த பக்தர்களிடமும் கோவிலில் ஏற்படுத்தபட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் கோவிலின் அலுவலகம் சென்ற நீதிபதி கடைசியாக எப்போது இந்து அறநிலையத்துறை அதிகாரிகளால் கோவில் ஆய்வு செய்யப்பட்டது மற்றும் ஊழியர்கள் குறித்த விபரங்களை கோவில் செயல் அலுவலரிடம் எழுத்து பூர்வமாக பெற்றுகொண்டார். இதனையடுத்து மேட்டுப்பாளையத்தில் உள்ள அருள்மிகு வன பத்திரகாளியம்மன் கோவில் மற்றும் இடுகம்பாளையம் ஆஞ்சநேயர் கோவிலிலும் தனது அடுத்தகட்ட ஆய்வு பணியினை தொடர்ந்தார். இக்கோவில்களில் மேற்கொண்ட ஆய்வு அறிக்கையை உத்தரவின்படி உயர் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ளதாக நீதிபதி ராமநாதன் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.