===உ.வாசுகி===
‘‘18வது பொறந்த நாள கொண்டாடி ரெண்டு நாள் கூட ஆகல, வாய் பேச வராத என் பொண்ண கெடுத்து கொலையே பண்ணிட்டானே, அவனுக்கு தூக்கு தண்டனை வாங்கிக் கொடுங்கம்மா….”

‘‘பள்ளிக்கூடத்தில படிக்கிற என் பொண்ணு கிட்ட ஹெட்மாஸ்டர் தப்பா நடந்துக்கிட்டாருன்னு போலீஸ் ஸ்டேஷன்ல புகார் குடுத்தா, இன்ஸ்பெக்டர் – உன் புள்ள படத்த பெரிசு படுத்தி, லாரன்ஸ் எட்வர்டால கெடுக்கப்பட்டவர்னு ஸ்டேஷன் வாசல்ல பேனர் வக்கவான்னு கேக்கராரு. என் மேல பொய் வழக்கு போட்டிருக்காங்க. என் பயிரெல்லாம் அழிச்சி நாசம் பண்ணிட்டாங்க. எனக்கு நியாயம் கிடைக்கணும்.

”நான் ஒரு டீச்சர். ஹெட் மாஸ்டரும், துணை ஹெட் மாஸ்டரும் பாலியல் துன்புறுத்தல் பண்றாங்கன்னு பெட்டிஷன் போட்டதால, என்னை சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க. என் கணவர் இருதய நோயாளி. என் சம்பளத்த நம்பி தான் குடும்பம் நடக்குது. இது இல்லேன்னா என்னால வாழவே முடியாது.”

”எனக்கு ஒரே ஒரு பாப்பாங்க. 13 வயசு. எட்டாவது படிச்சுதுங்க. ஒரு நாள் ராங் நம்பர் கால் வந்துருக்கு. அதுக்கு பிறகு அவன் தொடர்ந்து பேசி, ஒரு நாள், என்னைய கல்யாணம் பண்ணிக்கன்னு சொல்லிருக்கான். பாப்பா பயந்து போய், நான் 8வது தான் படிக்கிறேன், அப்படீன்னு எல்லாம் சொல்லிருக்கு. நான் வீட்டு பக்கம் வந்துகிட்டே இருக்கேன், உன்னய வீட்லேருந்து தூக்கிடுவேன், உன் அப்பா குறுக்க வந்தா அவர கொன்னுடுவேன்னு சொல்லவும் பயந்து போய், மண்ணெண்ணெய ஊத்திகிட்டு கொளுத்திகிச்சுங்க. எனக்கு தகவல் வந்து, ஆஸ்பத்ரிக்கு ஓடி, என்ன பாப்பா, அப்பா கிட்ட சொல்ல கூடாதான்னு கேட்டேன். இல்லப்பா, உங்களயும் கொன்னுடுவேன்னு சொன்னான், அதனால பயந்துட்டேம்பா அப்படீன்னு பாப்பா சொல்லிட்டு செத்துடுச்சும்மா… விசாரணையெல்லாம் முடிஞ்சிருச்சு. அரசாங்க வக்கீல், மனசாட்சி படி(?) வாதாடியிருக்கேன்னு சொல்றாரு. என்ன நடக்குமோ தெரியல..”

சிவகங்கை மாவட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தால் நடத்தப்பட்ட பொது விசாரணையில் எடுக்கப்பட்ட 13 வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் குடும்பத்தினர் கொடுத்த சில வாக்குமூலங்கள் தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ளன. கேட்கக் கேட்க நெஞ்சு பற்றி எரிகிறது. அரசின் அனைத்து அங்கங்களும் பாதிக்கப்பட்டவரை பதம் பார்த்தால் எங்கு தான் போவார்கள்? சட்டங்களும், நீதியும் காகிதத்தில் தானோ? இவ்வளவுக்குப்பிறகும் போராடிக்கொண்டிருக்கிறார்களே, உண்மையில் அவர்களின் தைரியம் மெச்சத் தகுந்தது.
பொது விசாரணையின் நடுவர்களாக, மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றி டிபேன், ஜனநாயக மாதர் சங்கத்தின் உ.வாசுகி, மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஷாஜி செல்லன், அகில இந்திய வழக்கறிஞர் சங்க சிவகங்கை மாவட்டச் செயலாளர் ராஜசேகரன், மதுரை மனநல மருத்துவர் சுகதேவ் ஆகியோர் இருந்தனர்.

மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் வாலண்டினா, பொதுச் செயலாளர் சுகந்தி, மாநில நிர்வாகி சசிகலா, சிவகங்கை மாவட்டக்குழு தலைவர் காந்திமதி, செயலாளர் சண்முகப் பிரியா, நிர்வாகி சாந்தி ஆகியோர் பங்களிப்பு செய்தனர். வழக்கறிஞர்கள் மதி, இளையராஜா, சொர்ணம் ஆகியோர் அனைத்து விதங்களிலும் இந்நிகழ்வுக்கு உதவினர். 15 வழக்குகளில் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் – 3, சாதி ஆணவக் கொலை – 1, சிறுமிகள் பாதிப்பு – 3, பாலியல் வல்லுறவு – 4, கந்துவட்டி தற்கொலை – 1, குடும்ப வன்முறை – 4, சாதிய ஒடுக்குமுறை – 2

காவல்துறையின் அலட்சியம்:
நடுங்க வைக்கும் கச்சநத்தம் தலித் இளைஞர்கள் படுகொலையில், முன்னதாகவே தாக்குதல்கள், மிரட்டல்கள் குறித்து பலப் புகார்கள் காவல்துறைக்குப் போயிருக்கின்றன. அத்தனையும் விழலுக்கு இறைத்த நீர் தான். ஒன்றின் மீதும் நடவடிக்கை இல்லை. எடுத்திருந்தால், 3 உயிர்களைக் காப்பாற்றி இருக்க முடியும். இது வெறும் அலட்சியம் அல்ல, அப்பட்டமான சாதியக் கண்ணோட்டம் ஏற்கனவே குறிப்பிட்ட மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி ஏற்கனவே வேறு சிலரைப் பாலியல் துன்புறுத்தல் செய்திருக்கிறான். அப்போதெல்லாம் கட்டப் பஞ்சாயத்து நடத்தி ‘சுமுகமாக’ முடிக்கப்பட்டிருக்கிறது. முறையாக நடவடிக்கை எடுத்திருந்தால் சிறுமியின் உயிர் மிஞ்சியிருக்கும். குண்டர் சட்டத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டிருந்தாலும், தேசிய மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தின் பிரிவுகளை சேர்க்கவில்லை.

ஈசனூரில் செருவலிங்க அய்யனாருக்கு புரவி எடுப்பதற்கு தலித் மக்கள் தொடர்ந்து தடுக்கப்பட்ட சூழலில், அவர்கள் தனியாகப் புரவி எடுப்பு விழா நடக்க முயற்சி செய்ததே பெரும் குற்றமாகக் கருதப்பட்டு, இரண்டு தலித் பெண்கள் துரத்தி துரத்தித் தாக்கப்படுகின்றனர். தாக்கப்பட்டவர்கள் காவல்நிலையம் சென்று புகார் கொடுக்கின்றனர். உடனே, தாக்கியவர்கள் கவுண்டர் பெட்டிஷன் கொடுக்க ஏற்பாடு நடக்கிறது. தாக்குதலுக்கு உள்ளான தலித் பெண்கள், உங்களால் தான் விழா நடக்காமல் போய் விட்டது என்று மிரட்டியவாறே, கம்பு எடுத்துத் தாக்கினர் என்று (இப்படி நடக்குமா!!) புகார் வாங்கி, இவர்கள் மீது, கொலை முயற்சி பிரிவு – இபிகோ 307இன் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது. பத்திரிகைகள் பொதுவாக இச்செய்தியை, இரு தரப்புக்கிடையே மோதல், கருத்து வேறுபாடு என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியே கொடுக்கின்றன. ஒடுக்குபவர், ஒடுக்கப்படுபவர் என்ற வேறுபாடு ஊடகச் செய்திகளில் திட்டமிட்டே மறைக்கப்படுகிறது என்பதை நடுவர்கள் எடுத்துக் காட்டினர்.

அனைத்து அதிகார மையங்களும் தாக்கும் போது….
துப்புறவு தொழிலாளி அன்னம்மாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கதை உண்மையிலேயே பெரும் துயரம். குற்றவாளிகளுடன் சேர்த்து, காவல்துறை, கல்வித் துறை, குழந்தைகள் நலத்துறை மூன்றின் மோசமான அணுகுமுறையையும் எதிர்கொண்டு வருகிறார். துணை தலைமை ஆசிரியர், இவர் மகள் உட்பட பல மாணவிகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துகிறார். இவர் புகார் கொடுக்கிறார். மேலே கூறிய படி, இன்ஸ்பெக்டர், மகள் படத்தைப் போட்டு, கெடுக்கப்பட்டவர் என பேனர் வைக்கட்டுமா என மிரட்டுகிறார்.

அடுத்து, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரும், அவர் அடிப்பொடியும் சேர்ந்து இவரைத் தாக்குகிறார்கள். அன்னம்மா புகார் கொடுக்கிறார். ஒரு நடவடிக்கையும் இல்லை. பிறகு இவர் பயிர் செய்த வயலுக்கு நெருப்பு வைக்கப்படுகிறது. இதற்கும் புகார் கொடுக்கிறார். வழக்கம் போல் காவல்துறை கும்பகர்ண உறக்கம். ஆனால் அன்னம்மா தாக்கியதாக, பிடிஏ தலைவர் புகார் கொடுக்கிறார். அதை வாங்கி, கருமமே கண்ணாக அன்னம்மா மீது காவல்துறை பொய் வழக்கு பதிவு செய்கிறது.

மாதர் சங்கத்தின் பல கட்ட போராட்டத்தின் காரணமாகத் தான் துணை தலைமை ஆசிரியர் மீது எஃப்.ஐ.ஆர். பதியப்படுகிறது. பிரச்னை குழந்தைகள் நலக்குழுவுக்குப் போகிறது. அதன் தலைவர், உன் மகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவோம். அவளுக்கு எதுவும் ஆகவில்லை என்று ரிப்போர்ட் வந்தால், உன் மீது வழக்கு போட்டு உள்ளே தள்ளுவோம் என்கிறார். பாலியல் துன்புறுத்தலில் எதற்கு மருத்துவ பரிசோதனை? தேவையே இல்லை. ஆனாலும் மிரட்டப்படுகிறார்கள். குழந்தைகள் நலக் குழு இதற்காகவா அமைக்கப்பட்டது?
இதற்கிடையே, அங்கு வேலை பார்த்த பெண் ஆசிரியர், இதே துணை தலைமை ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் தம் மீது பாலியல் துன்புறுத்தல் செய்கிறார்கள் எனப்புகார் கொடுக்கிறார்.

உடனே, புகார் கொடுத்த பெண் ஆசிரியரும், இன்னொரு ஆண் ஆசிரியரும் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள். பிறகு பணி இடைநீக்கமும் செய்யப்படுகிறார்கள். கோர்ட்டில் வழக்குப் போட்டு விட்டு அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் பெண் ஆசிரியர் கொடுத்த பாலியல் புகார் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை. கல்வித்துறையில் விஷாகா கமிட்டியே அமைக்கப்படவில்லை. பள்ளிக்கல்வித்துறை செயலாளர், சட்டப்படி ரூ.50000 அபராதம் கட்ட வேண்டாமா?

கல்வித்துறையால் இந்தப் பெண் ஆசிரியருக்கு அளிக்கப்பட்ட இடைநீக்க மெமோவைப் பார்க்க வேண்டுமே? சுத்த அயோக்கியத் தனம்! பாலியல் துன்புறுத்தல் என்று புகார் சொன்ன மாணவிகளை, குழந்தைகள் நலக்குழுவிடம் போய் சொல்லுமாறு வழிகாட்டியது குற்றமாம், இதன் மூலம் மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தை போதிக்க வேண்டிய ஆசிரியர் தனது பொறுப்பு மற்றும் கடமையிலிருந்து தவறியுள்ளாராம். என்ன சொல்ல வருகிறது கல்வித்துறை? குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலை மூடி மறைக்கச் சொல்கிறதா? போக்சோ சட்டப்படி, குற்றம் நடந்தது அல்லது நடக்கவிருக்கிறது என்று தெரிகிற நபர்கள் கண்டிப்பாகப் புகார் கொடுக்க வேண்டும். இல்லையேல் அவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம். கல்வித்துறையின் இடை நீக்க உத்தரவு போக்சோ சட்டப் பிரிவுக்கு முரணாக உள்ளது.

அடுத்த குற்றச்சாட்டைப் பாருங்கள் – “மாணவ மாணவிகளின் கல்வி நலன் பாதிக்கும் வகையில் அவர்களை மிரட்டி, அவர்களிடம் தம் எதிர்காலம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தி, அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளார். இதன் மூலம் தான் ஒரு அரசு ஊழியர் என்ற நிலையினை மறந்து செயல்பட்டுள்ளார்.” குற்றம் புரியும் துணை தலைமை ஆசிரியர் இவர் அறையைப் பூட்டி வைத்துக் கொண்டு, பல மணி நேரம் வெளியே நிற்க வைத்ததை, இவர் தட்டிக் கேட்டது குற்றமா? அப்படிக் கேட்டதே மாணவியருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி விட்டதா? பெற்றோர் ஆசிரியர் சங்கம் புகார் கொடுத்ததாம், சில மாணவிகளும் புகார் கொடுத்தார்களாம். இவை தான் ஆதாரமாம். கல்வித்துறை கடிதத்தில் இவை குறிப்பிடப்பட்டுள்ளன.

சில மாணவிகளிடம் கட்டாயப்படுத்தி எழுதி வாங்கியதே ஆதாரம் என்றால், துணை தலைமை ஆசிரியர் பாலியல் துன்புறுத்தல் செய்தார் என 31 மாணவிகள் குழந்தைகள் நலத்துறையிடம் எழுதிக் கொடுத்திருக்கிறார்களே… (பிறகு நிர்ப்பந்தப்படுத்தி வாபஸ் வாங்க வைத்து விட்டார்கள் என்பது வேறு கதை) அந்த ஆதாரத்தை வைத்து, அவர் மீது ஒரு மெமோ கிடையாது, ஒரு சஸ்பென்ஷன் கிடையாது. ஓய்வு பெற்று அனைத்து ஓய்வூதிய பலன்களையும் பெற்றுக் கொண்டு விட்டார். போதாக்குறைக்கு அருகிலுள்ள நெற்குப்பை கிராமத்தில் மேலும் இரண்டு ஆண்டுகள் இந்த லாரன்ஸ் எட்வர்டு சிறப்பு ஆசிரியராகப் பணியாற்ற கல்வித்துறை உத்தரவு போட்டிருக்கிறது. அன்னம்மா மீதோ பொய் வழக்கு, பெண் ஆசிரியருக்கோ பணி இடைநீக்கம். பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கோ நியாயம் கிடைக்கவில்லை. இவருக்கு எவ்வித சேதாரமும் இல்லை.

சாதி ஆணவக் கொலை:
காதலித்து மணந்த மனைவியை சாதிப் பேய்க்குப் பறி கொடுத்த பூமிநாதன் கண்ணீருடன் பேசினார். அவர் சொல்ல சொல்ல உள்ளம் நடுங்கியது. முதல் தகவல் அறிக்கையில், தன் மகள் தமிழ்செல்வியை எப்படிக் கொன்றோம் என அவள் தந்தை கூறியிருப்பதைப் படித்தாலே மனம் ஜில்லிட்டுப் போகிறது. “என் மகளின் தலை மற்றும் மூக்கை நான் பிடித்துக் கொண்டேன். கலைச்செல்வம் என் மகள் துள்ளாதபடி கால் இரண்டையும் அழுத்திப் பிடித்துக் கொண்டான். பாலமுருகன் கையில் வைத்திருந்த கயிற்றை எடுத்துக் கழுத்தில் போட்டு இறுக்கினான்.

தங்கபாண்டியன், தங்கமணி, பாலமுத்து மூவரும் செல்வம் என்பவரின் வயலில் கிடந்த விறகுகளை அள்ளிக் கொண்டு வந்தார்கள். சிறிது நேரத்தில் என் மகள் பேச்சு மூச்சு இல்லாமல் இறந்து போனது. பச்சை கலர் நைட்டி போட்டிருந்தது. யாருக்கும் சந்தேகம் வராதபடி எல்லோரும் சேர்ந்து விறகுகளை அடுக்கினோம். நான் என் மகளை அதில் தூக்கி வைத்தேன். தங்கமணி வீட்டு கேனில் கொண்டுவந்த டீசலை என் மகளின் உடம்பில் ஊற்றித் தீயைப் பற்ற வைத்தேன். எல்லோரும் என் மகள் பிரேதம் எரிந்து சாம்பலாகும் வரை கூடவே நின்று எரித்து விட்டு அதிகாலை 5 மணிக்கு வீடு திரும்பினோம்.” சாதிக்கு முன் மகளாவது மண்ணாங்கட்டியாவது…! ஆணவக் கொலை நடக்கிறது என ஒத்துக் கொள்ளவே அரசுக்குப்பல காலம் பிடித்திருக்கிறது. தனிச் சட்டம் கோரும் போராட்டங்கள் தொடர்கின்றன. அதுவரை ரத்த சாட்சிகளாக இன்னும் எத்தனை தமிழ்செல்விகளை இழக்கப் போகிறோம்?

பரிந்துரைகள்:
தனிப்பட்ட வழக்குகளில் அளித்த பரிந்துரைகளுடன், ஊடகங்களுக்கு சில வேண்டுகோள்கள் விடப்பட்டன. நடவடிக்கை எடுக்காத காவலர்கள் மீது இபிகோ 166 ஏ பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும், கவுண்டர் பெட்டிஷன் போக்கினைத் தடுத்து நிறுத்த வேண்டும், அதிகரிக்கும் குடிப்பழக்கத்துக்கும் வன்முறைக்கும் தொடர்பு உள்ளது என்பதைக் கணக்கில் எடுத்து டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும், இழப்பீடுகள் உடனையாக வழங்கப்பட வேண்டும், சாட்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும்,

சிவகங்கை மகளிர் நீதிமன்றத்துக்கு நீதிபதி நியமனம் செய்ய வேண்டும், மகளிர் ஆணையம் போன்ற அமைப்புகளின் தலையீடுகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும், அனைத்து துறைகளிலும், மாவட்ட அளவிலும் விஷாகா கமிட்டி அமைக்கப்பட வேண்டும், முதலில் கல்வித் துறையில் உருவாக்கப்பட வேண்டும். பாடத்திட்டங்களில் பெண் சமத்துவ கருத்துக்கள் இடம் பெற வேண்டும், தமிழக அரசு பெண்கள் அமைப்புகள், தன்னார்வ அமைப்புகளுடன் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை விவாதிக்க வேண்டும் போன்ற பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

மனநலம் குறித்த உதவிகள் செய்வதாக டாக்டர் சுகதேவ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தேவையான சட்ட உதவிகள் செய்வதாக வழக்கறிஞர் ஷாஜி செல்லன் அவர்களும், உள்ளூர் சட்ட உதவிகளை செய்வதாக வழக்கறிஞர் ராஜசேகரன் ஆகியோர் கூறியது குறிப்பிடத்தக்கது. சட்ட உதவிகளையும், ஐநாவின் குழந்தைகள் உரிமை ஆலோசகர் என்ற முறையில் தலையீடுகளையும் செய்வதாக வழக்கறிஞர் ஹென்றி டிபேன் கூறினார். அனைத்து வழக்குகளிலும் நியாயம் கிடைக்க மாதர் சங்கம் தொடர்ந்து போராடும் என மாதர் சங்க தலைவர்கள் உறுதிபடத் தெரிவித்தனர்.

பெண்ணுரிமைக்கான போராட்டம் சமத்துவத்துக்கான, ஜனநாயகத்துக்கான போராட்டம் என்றே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் வரையறுக்கிறது. எனவே, இது பெண்கள் இயக்கத்தின் கடமை மட்டுமல்ல, இதில் முற்போக்காளர்களின், இடதுசாரிகளின் கவனம் குவிக்கப்பட வேண்டியதும் அவசியமாகிறது. ஒரு மாவட்டத்தில் 15 வழக்குகளிலேயே அரசுத் துறைகள் இப்படி அம்பலப்பட்டு நிற்கின்றனவே, அனைத்து வழக்குகளையும் பரிசீலித்தால் எத்தனை பூதம் வெளியே வருமோ? வாக்குமூலங்களுக்குப் பின்னால் உள்ள வலிக்கும், வேதனைக்கும், அந்த நினைவுகளைப் பகிரும் போது கொட்டிய கண்ணீருக்கும் தமிழக அரசு பதில் கூற வேண்டாமா?

கட்டுரையாளர் : மாதர் சங்க அகில இந்திய துணைத்தலைவர்

Leave A Reply

%d bloggers like this: