தோழர் நாகரத்தினம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர். 1996 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டார். வேட்புமனு தாக்கல் கடைசி நாளில், எதிர்பாராத திருப்பமாக நானும் வேட்பாளரானேன். அ.தி.மு.க வேட்பாளராக ஒன்றிய செயலாளர் அண்ணன் நாகம்பந்தல் பன்னீர்செல்வம், பா.ம.க ஆதரவோடு பிரச்சாரம் சூடுபிடித்தது. ஒரு நாள் ஒரு கிராமத்தில் நான் வாக்கு சேகரித்து செல்லும் போது, அடுத்தத் தெருவில் இருந்து வாக்கு சேகரித்துக் கொண்டு வந்தார் தோழர். “ஏன் தலைவரே இந்த வேலை?”, என்றுக் கேட்டார். அந்தக் கேள்விக்கு காரணம், என் மீதான அக்கறை. சிறு வயதில் பள்ளி செல்லும் காலத்தில் இருந்தே, என்னைப் பார்த்தவர். கட்சிகள் வேறாக இருந்தாலும், எங்கள் குடும்பத்தின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்.

எனது தந்தையார் எஸ்.சிவசுப்ரமணியன் சட்டமன்ற உறுப்பினராக, ஒன்றியப் பெருந்தலைவராக பணியாற்றிய நேரங்களில், பொதுப் பிரச்சினைகளுக்காக எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவார். அப்படி சிறு வயதிலிருந்து பழக்கம்.

ஒரு தலித்தாக இருந்தாலும், வன்னியர் மிகுந்த பகுதியில் நீண்ட காலம் அவர் தான் ஒன்றிய செயலாளர். காரணம், அவர் பழகுகின்ற பாங்கு, மக்களுக்காக போராடுகின்ற குணம்.

தோளில் எப்போதும் சிவப்புத் துண்டு. கையில் ஓர் கைப்பை, அது நிறைய பொது விஷயங்களுக்கான மனுக்கள். மக்கள் பிரச்சினை என்றால், அதில் முன்னால் நிற்கும் முதல் ஆள். இவை தான் தோழர் நாகரத்தினத்தின் அடையாளங்கள்.

மாவட்ட ஊராட்சித் தேர்தலில், எனக்கு வெற்றி கிடைத்தது. “தலைவரே, நீங்க ஜெயிச்சது சந்தோஷம். நாங்க தனியா நின்னு ஜெயிக்க முடியுமா, போட்டியில இருக்கோம்னு காட்டத் தான் தேர்தல் நிக்கிறது”, என்று வாழ்த்தினார்.

ஒரு வாரம் கழித்து வந்தார். “தலைவரே, நாளைக்கு போராட்டம். மைக் செட் சொல்லி உடுங்க”, என்று துண்டறிக்கை கொடுத்தார். தி.மு.க அரசை கண்டித்து துண்டறிக்கை. “எங்கள திட்ட நானே மைக் செட் வச்சித் தரணுமா?”. “ஆமாம். உங்களுக்கு நல்லது சொல்லத் தான போராட்டம். நீங்க தான் வச்சித் தரணும்”. மைக்செட்காரரிடம் பேசி ஏற்பாடு செய்தேன்.

செவ்வாய்க்கிழமை சந்தை அன்று ஆர்ப்பாட்டம். சமசரம் இல்லாமல், என்னையும் கண்டித்துப் பேசினார். இது அந்த ஒரு வாரத்தோடு முடியவில்லை. ஆட்சிக் காலம் வரை இந்த ஏற்பாடு தொடர்ந்தது. இடையிடையே ஊடல், சண்டை எல்லாம் உண்டு. அப்போதெல்லாம் ‘நாட்டாமை’ செய்து, எங்களை சமாதானம் செய்து வைப்பவர் தோழர் நாகரத்தினத்தின் துணைவியார் தோழர் கொளஞ்சியம்மாள் தான். நான் அவரை “நாட்டார்” என்று தான் அழைப்பேன்.

கணவன், மனைவி இருவருமாகத் தான் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள். அவர்களுக்கு பிள்ளைகளை கவனிக்க எப்படி நேரம் கிடைக்கும் என நாங்கள் ஆச்சயர்ப்படுவோம்.

2001 ஆம் ஆண்டு, அ.தி.மு.க ஆட்சி அமைந்தது. அதற்கு பிறகு, போராட்டங்களில் நாங்கள் ஒருங்கிணைந்து கலந்துக் கொள்வோம். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், எனக்கு தகவல் அனுப்பி விடுவார்.

2006 ஆம் ஆண்டு, தி.மு.க ஆளுங்கட்சியாகி விட்டது. நான் ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினர். அப்போதும் பொதுப் பிரச்சினைகளுக்காக என்னை வந்து சந்திப்பார். “ஒரு நாளும் சொந்த நன்மைக்காக சந்தித்தது கிடையாது”.

ஒரு முறை, ஒரு கிராமத்து சாலையை சீரமைக்க, அரசிடமிருந்து நிதி ஒதுக்கிப் பெற்றிருந்தேன். அந்த வாரத்தில், அதற்கான ஒப்பந்தப் புள்ளி கோரல். தோழர் நாகரத்தினம், அதே சாலையை சீரமைக்க வலியுறுத்தி, ஒரு போராட்டம் அறிவித்து, என்னிடம் துண்டறிக்கை கொண்டு வந்துக் கொடுத்தார்.

“நான் ரெடி செஞ்சிட்டேன்னு தெரிஞ்சு, போராட்டம் அறிவிச்சிங்கிளா. நீங்க போராடி தான் வந்துதுன்னு காட்டணுமா?”, என்று கோபமாகக் கேட்டேன். தோழர் நாகரத்தினம் சிறிதும் கோபப் படவில்லை. “தலைவரே, கோபப்படாதீங்க. நாங்க பேர் வாங்கி என்னப் பண்ணப் போறோம்? உங்களுக்கு பேர் கிடைச்சா எங்களுக்கு சந்தோஷம் தான். வேலை நடந்தா சரி தான்”, என்றார். அந்த குணம் தான் தோழர் நாகரத்தினம்.

பின்னர் 2011 தேர்தலில், குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகி விட்டதால், அதிகம் சந்திக்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, ஒரு நாள் ஆண்டிமடம் சென்றிந்த போது, தோழருக்கு உடல்நலம் சரி இல்லை என்று செய்தி கிடைத்தது.

அழகாபுரம் சென்று சந்தித்தேன். பக்கவாதம் வந்ததால், நடக்க சிரமப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு கொஞ்சம் தேறி இருந்தார். பேசிக் கொண்டிருந்தோம், அப்போதும் மாநில அளவிலான அரசியல் பிரச்சினைகள் குறித்து தான் பேசிக் கொண்டிந்தார்.

சின்ன அளவிலான வீடு, ஏழ்மையான நிலை, மூன்று பிள்ளைகள், உடல்நிலை குறைந்து சிரமமான சூழல். அப்போதும் மக்கள் எண்ணம் தான்.

இப்படியும் அரசியல்வாதிகள் உண்டு என்பது பெரும்பான்மையானோர் கண்களுக்கு தெரிவதில்லை, என்பது தான் சோகம்.

கடந்த ஆகஸ்ட் 16, தோழர் நாகரத்தினம் மறைந்து விட்டார்.65 வயது தான். மனம் அதிர்ந்துப் போனது. நேரில் சென்று அஞ்சலி செலுத்தினேன். குடும்பமே கலங்கிப் போயிருந்தது. மாவட்ட அளவில் மார்க்சிஸ்ட் தோழர்கள் திரண்டு இறுதி மரியாதை செய்தனர்.

கடந்த 31.08.2018 அன்று படத்திறப்பு நிகழ்ச்சி. தோழர் படத்தை திறந்து வைத்தேன். ஆமாம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் ஒன்றிய செயலாளர் தோழர் நாகரத்தினம் படத்தை, தி.மு.க மாவட்ட செயலாளர் திறந்து வைத்தேன், மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் ஒப்புதலோடு. இது தான் கள அரசியல். அரசியலைத் தாண்டி, அன்பு தான் முன் நிற்கும்.

# வறுமையிலும், மக்களுக்காக வாழ்ந்து மறைந்த மக்கள் தோழர் நாகரத்தினம் !

சிவசங்கர் எஸ்.எஸ்

காலம் ஒருநாள் மாறும்.; மக்களுக்கு உண்மை தெரியும்; அப்போது வறண்டு போய் கிடக்கிற நம் கல்லறைகளை மக்கள் கண்ணீரால் ஈரமாக்குவார்கள். – காரல்மார்க்ஸ்

அரசியல் நாகரீகம் எஸ் எஸ் சிவகங்கர்

Kali Das

Leave A Reply

%d bloggers like this: