திருப்பூர்,
பொங்கலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பி ஆண்டிபாளையம் கிராமத்தில் மூன்றரை மாதங்களாக நீடித்து வரும் குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காணக்கோரி அக்கிராம மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து உடனடியாக ஆழ்துளைக் குழாய் லாரி வரவழைக்கப்பட்டு பி ஆண்டிபாளையத்தில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

பி ஆண்டிபாளையம் கிராமத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்கு அமைக்கப்பட்டிருக்கும் ஆழ்குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. எனினும் குழாய் பழுதானதால் குடிநீர் கிடைக்கவில்லை. எனவே கடந்த மூன்றரை மாதங்களாக இப்பகுதி மக்கள் விலை கொடுத்து குடிநீரை வாங்கிப் பயன்படுத்தி வந்தனர். அதேசமயம் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணக் கோரி ஊராட்சி செயலர், பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் உள்ளிட்டோரிடம் முறையிட்டனர். குறிப்பாக கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி இப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 75 பேர்பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது ஓரிரு நாளில் பிரச்சனை சரி செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால், கடந்த இரு வாரங்களாக இப்பிரச்சனை தீரவில்லை. அதிகாரிகள் உறுதியளித்தபடி குழாய் சீரமைப்புப் பணி எதுவும் நடக்கவில்லை. இதனால் ஆவேசமடைந்த இப்பகுதி மக்கள் திங்களன்று மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர்கள் முருகேசன், நவநீதன் ஆகியோர் தலைமையில் தாராபுரம் சாலை, அவிநாசிபாளையம் மூன்று சாலை சந்திப்பில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.சம்பத், ஜி.சுந்தரம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அவிநாசிபாளையம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையரும் அங்கு வந்து பேசினார். உடனடியாகபி ஆண்டிபாளையத்தில் ஆழ்குழாய் மோட்டார் சரி செய்யப்பட்டு குடிநீர் வழங்க நடவடிக்கைஎடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அதிகாரிகள் உறுதியளித்தபடி ஆழ்குழாய் பணிக்கான லாரிபி ஆண்டிபாளையத்துக்கு வரவழைக்கப்பட்டு உடனடியாக சீரமைப்புப் பணி தொடங்கப்பட்டது. மறியல் போராட்டத்தின் எதிரொலியாக உடனடியாக குடிநீர்
பிரச்சனைக்குத் தீர்வு காணும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: