ஈரோடு,
மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விஜயமங்கலம் மற்றும் அந்தியூர் பகுதி பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் பேருந்து நிலையம் அருகிலும், பெருமாள் கோவில் அருகிலும் டாஸ்மாக் மதுபான கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கடைகளால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுவதால் கடைகளை அகற்ற வேண்டும் என டாஸ்மாக் மேலாளரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். அப்போது, ஒரு மாத காலத்தில் மதுபானக் கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வதாக எழுத்துப் பூர்வமாக அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். மேலும், சுதந்திர தினத்தன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அப்பகுதியிலுள்ள டாஸ்மாக்கடையை அகற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், தற்போது வரை டாஸ்மாக் கடைகளை அகற்றுவதற்கான எவ்வித முன்னேற்பாடுகளும் நடைபெறவில்லை. ஆகவே, டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெருந்துறை காவல் ஆய்வாளரிடம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது. ஆனால், அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இரண்டு மதுக்கடைகளையும் அகற்ற வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம் மனு அளித்தனர்.

இதேபோல், அந்தியூர் வேலம்பாளையம் பகுதியில் குடியிருப்புகளுக்கு நடுவே புதிய டாஸ்மாக் கடை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே, இப்பகுதியிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஆப்பக்கூடல் பகுதியில் 2 மதுக்கடைகள் உள்ளது. இந்நிலையில் தற்போது புதிதாக அமைக்கப்பட உள்ள மதுக்கடைக்யானது அரசுப் பள்ளிகள் மற்றும் கோவில்கள், குடியிருப்புகள், விவசாய நிலம் உள்ளிட்ட மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாகும். எனவே புதியதாக அமையவிருக்கும் மதுக்கடையை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: