ஈரோடு,
சுகாதாரமற்ற முறையில் இயங்கும் கோழிப்பண்ணையால் குடியிருப்பு பகுதிகளில் ஈக்கள் தொல்லை அதிகரித்துவிட்டதாக கூறி திங்களன்று ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுகா, கெட்டிச்செவியூர் ஊராட்சிக்குட்பட்ட நீளம்பாளையம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். கணக்கன்தோட்டம் என்னுமிடத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் சிவக்குமார் என்பவர் முட்டை மற்றும் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். கோழிக் கழிவுகளை முறையாக அகற்றாமல், இறந்த கோழிகளை அருகிலேயே பள்ளத்தில் வீசியும் மிகவும் சுகாதாரமற்ற முறையில் பண்ணையை நடத்தி வருகிறார். மேலும், பண்ணையை சுத்தப்படுத்தி மருந்துகள் அடிக்காமல் விடுவதால் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு ஈக்கள் மிக அதிக அளவில் படையெடுத்து வருகின்றன. இதன் காரணமாக பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து கோழிப்பண்ணை நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கோழிப்பண்ணை மீது நடவடிக்கை எடுத்து பண்ணையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி நீளம்பாளையம் பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம் திங்களன்று மனு அளித்தனர். இதுதொடர்பாக ஆட்சியர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Leave A Reply

%d bloggers like this: